புத். 68 இல. 13

மன்மத வருடம் பங்குனி மாதம் 14ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஜுமாதல் ஆகிரா பிறை 17

SUNDAY MARCH 27, 2016

 

'உயிர்த்த ஞாயிறு' சிறப்பு சிறுகதை

'உயிர்த்த ஞாயிறு' சிறப்பு சிறுகதை

வி.எம்.எலிசபெத், ஹட்டன்

‘அன்பே கடவுள் என்றால்
அன்புக்கு ஈடேது சொல்,
அன்பே செல்வம் என்றால்
அன்புக்கு விலையேது சொல்’

மாதா கோவிலில் ஒலித்த பாடல் காற்றோடு கலந்து காதின் வழியே இதயம் நுழைந்தது. தூக்கம் கலைய கண்விழித்தாள் லீஸா. பார்வை கடிகாரத்தில் பதிந்தது. அதி காலை 4.00. முட்கள் பரபரப்பாய் சுறுசுறுப்பாகிக் ெகாண்டிருப்பதுபோல் இருந்தது. இரவு தாமதித்தே நித்திரைக்குச் சென்றவளுக்கு அசதியாயிருந்தாலும், உடனே எழுந்து கொண்டாள். என்னதான் வேலைப்பளு, அசதி என்றாலும் நித்திராதேவி வருந்தியழைத்தாலும் அதிகாலை நான்கு மணிக்கு மேல் ஒரு நொடியும் அயரமாட்டாள் லீசா!. இது சின்ன வயதிலிருந்தே அப்பாவிடமிருந்து கற்றுக்ெகாண்ட பழக்கம் வழக்கமாகிவிட்டிருக்கிறது. இன்று உயிர்த்த ஞாயிறு. கிறிஸ்தவ வாழ்வின் மறை உண்மைகளை இவ்வுலகத்துக்குப் பறைசாற்றும் உன்னத விழா. உலக விழா!

பாடுகள், மரணம், உயிர்ப்பு

எத்தனை பெரிய வன்மச் சுவரையும் தகர்க்க வல்ல அன்பு. அதுவும் பிறர் நலனுக்காக தன்னுயிரையே தியாகிக்கும் பேரிரக்கத்திற்கு இவ்வுலகில் ஈடேது?

லீஸா... அன்பால் அடிமைப்பட்டவள். என்றாலும் இறை பேரன்பின் உண்மைகளை நல்ல ஒரு கிறிஸ்தவ வாழ்வில் உணர்ந்தவள். அதன்படியே வாழ்ந்தவர்களுக்கு இம்முறை மனம் அதிக வலிகளால் கனத்திருந்தது. எல்லாம் புரிதல் இல்லாத புதிர் செய்த வினை. லீஸாவின் தொழில் காற்று மூங்கில்களைப் புல்லாங்குழலாக்கும் கலை. அன்பு, அர்ப்பணிப்பு அவளுடன் ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகள்! சிலர் திருமணம் முடிப்பதற்காகவும் பகட்டுக்காகவும் இந்தத் தொழிலைக் கவர்ச்சியாக்கிக் ெகாண்டிருக்கிறார்கள். ஆனால், லீசாவைப் பொறுத்தவரை ஆசிரியம், அன்பு, அரவணைப்பு நிறைந்த சமூகப் பணி. ஏழைப்பிள்ளைகளைக் கரைசேர்க்க வேண்டும் என்ற பற்றுறுதித் தொழில். அந்தப் பற்றுதான் அப்பாவுடனான அளவளாவலை இந்த ஒரு மாதமாக அந்நியப்படுத்தியிருக்கிறதோ!

பனிக்காற்று முகத்தை வருடிச்செல்ல புதுத்தெம்பு வளர்ந்து வலுவடைகிறது. காலை உயிர்த்த ஞாயிறு திருப்பலியில் கலந்து கொள்ள வேண்டுமென்று சுறுசுறுப்புடன் தயாராகிக் கொண்டிருக்கிறாள். என்னதான் இருந்தாலும் மனம் மட்டும் இருப்புகொள்ளவில்லை. அது தவியாய்த் தவித்துக்ெகாண்டிருக்கிறது. அந்தத் தவிப்பு குளிர்காற்றின் அரவணைப்புக்கு மத்தியிலும் ஒரு தகிப்பை ஏற்படுத்துகிறது.

‘சென்ற வருடம் எல்லாரும் எவ்வளவு சந்தோஷமாய் ஈஸ்டர் கொண்டாடினம். இந்த முறை ஏன் இந்த சோதனை. நானும் மனித ஜென்மம் தானே. எனக்கும் உணர்ச்சிகள் உண்டல்லவா? ஒரு பெரிய விடயத்திற்காக அப்பா என்னை இப்படி தண்டித்திருக்கக் கூடாது. ஒரு வார்த்தை மனம் நோகும்படி பேசாதவருக்கு இப்போது என்ன நடந்ததோ? இறைவா. மீண்டும் எவ்வாறு நான் முகம் பார்த்துப் பேசுவேன். அவரது வார்த்தைகள் என்னைச் சுடுகின்றனவே..., அவர் என்னோடு இப்போதும் பேசுவதுமில்லையே. நான் என்ன துரோகியாகி விட்டேனோ? மனம் பழையதை மீட்டிச் சிந்தனையைச் சின்னாபின்னமாக்கியது.

‘சித்தி போவோமா’ என்ற குரல் அழைக்க “போகலாம் ஷாரு வா” என்று ஆலயத்துக்கு விரைகிறாள்.

பாதங்கள் பயணப்பட, மனம் சென்ற மாதத்திற்கே சென்று கொண்டிருக்கிறது. “என்னடி லீஸா. ஹெப்பி ஈஸ்டர் கூட சொல்லாமல் போற” நண்பி டிலக்சியின் வார்த்தை சீறிப்பாய்வதுபோல் இருந்தது.

“மன்னிச்சுக்கடி. எனக்கு நிம்மதியில்லாமல், இருக்குடி... நான் எந்தத் தவறும் பண்ணலடி” லீசா தனக்ேகயுரிய சாந்தத்துடன் அவளைச் சமாதானப்படுத்தினாள்.

‘சரி... அத விடுடி, அப்பா தானே” ஆற்றுப்படுத்துகிறாள் டிலக்சி

“இல்ல டிலக்ஸி அன்றைக்கு நடந்தது என்னன்னா, ஸ்கூல்ல ஈவினிங் கிளாஸ் செய்றதால், எக்ஸேம் பேப்பர்ஸ் கொஞ்சம் கரக்ஷன் பண்ண இருந்தது, அதனால, நானும் கொஞ்சம் வெய்ட் பண்ணி கரக்ஷன் செய்து கொடுத்தன். அது முடிஞ்சு வர நல்ல நேரமாயிட்டு, நைட் ஆனதால், அந்த ஸ்கூல்ல படிப்பிக்கிற டீச்சர்ட வீட்லயே இருக்க வேண்டியதா போச்சு. அடுத்த நாள் வீட்டுக்கு மாப்பிள்ளை பேசி வாறாங்கன்னு அக்கா சொல்லித் தான் தெரியும். அப்பா நான் வீட்ட வந்ததும் சொல்ல இருந்தார் போல. நல்ல குடும்பம். நல்ல வேலை நல்ல குணமானவர்னு அப்பா சொன்னாராம்”

மாப்பிள்ளை வீட்டாரின் மகா பிழையைப் பிட்டு வைத்தாள் லீஸா!

“அதனால என்னடி இன்னொருத்தரம் அவங்கல வரச்சொல்லலாமே" என்று இடைமறித்தாள் டிலக்சி

“அடிப்போடி அவங்களுக்குத் தவறா ஏதோ யாரோ சொல்லிட்டாங்களாம், அதனால தான் அப்பா என்னை அப்படி ஏசினார்” என விபரிக்கத் தொடங்கினாள். லீஸாவைப் பரிதாபமாகப் பார்த்தாள் டிலக்சி. சில நொடிகள் கண்கள் மட்டும் பேசிக்ெகாள்ள, வார்த்தைகள் ஸ்தம்பித்தன.

மீண்டும் லீஸாவே தொடர்ந்தாள். “என்ன நடந்துன்னு அவர் என்கிட்ட கேட்டார். அதனால் எனக்கு வேதனையா இருக்கு. அவர்ட கதைக்கவும் பயமாயிருக்கு. அப்பா என்னோட பேசி ஒரு மாசமாச்சுடி. இறைவன் தான் இதுக்குப் பதிலளிக்கணும்” இருவரின் சம்பாசனையையும் ஊடறுக்குமாப்போல் திருப்பலிக்கான மணியோசை ஒலிக்கிறது. மூவரும் ஆலயத்துள் சென்றனர்.

திருப்பலி ஆரம்பமாகி பங்குத் தந்தையின் மறையுரைக்கான நேரம், லீஸா ஆலயத்தில் திரும்பித் திரும்பி தன் குடும்பத்தினரைத் தேடிக் கொண்டிருந்தாள். கூட்டம் அலை மோதியதால் அவளால் அசையக் கூட முடியாமல் இருந்தது.

“கிறிஸ்துவில் பிரியமான சகோதர சகோதரிகளே...! உங்கள் அனைவருக்கும் உயிர்த்த இயேசு கிறிஸ்துவின் ஆசியும், சமாதானமும் உரித்தாகட்டும்...!”

“உயிர்ப்பு” என்பதனை ஒரு வரையறைக்குள் கூறிவிட முடியாது, ஆழமாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டிய உன்னத விடயமாகும். எம் கிறிஸ்தவ வாழ்வின் அடிப்படையே உயிர்ப்பு என்றால் பிழையாகாது. இன்றைய சூழ்நிலையில் பல்வேறுபட்ட சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது. சுயநலம், போட்டி, பொறாமை எனப்பல தரப்பட்ட பாவக்குழிக்குள் விழுந்து நாம் இன்னும் பாவிகளாகவே வாழ்கிறோம். இதிலிருந்து விடுபடவே எம்மைத் தவக்காலம் அழைக்க இறைமகன் இயேசுவும் எம் பாவங்களுக்காகவே சிலுவைச் சாவை ஏற்றார். ஒவ்வொருவரும் தம் பாவங்களுக்காக வருந்தி, அதிலிருந்து விடுபட்டு ஒரு புதிய வாழ்வை நாடி முனைவதே ஒறுக்கலாம். பிறரின் குற்றங்களுக்கு மன்னிப்பளித்து அவர்களையும் ஏற்று வாழ்பவரையே இறைவன் விரும்புகிறார். பாவ வாழ்விலிருந்து விடுதலை பெற்று வாழ்பவரையே இறைவன் விரும்புகிறார். பாவ வாழ்விலிருந்து விடுதலை பெற்று வாழும் போதே உயிர்ப்பின் மகிமை உணரப்படுகிறது. நாமும் கிறிஸ்தவர்களாக வாழ வேண்டுமாயின் எம்முள் உயிர்ப்பு இருக்க வேண்டும். மனத்தாழ்ச்சி விட்டுக் கொடுப்பு, மன்னிப்பு, அன்பு என்பன எம்மிடையே உயிர்த்தெழ வேண்டும். அப்போதுதான் நாமும் உயிர்த்த இயேசுவைப் போல் மரணத்தை வென்றவர்களாய் வாழ முடியும். எனவே, இவ்வுயிர்ப்பு விழாவிலே நாமும் பாவத்தை வென்றவர்களாக உயிர்த்தெழுவோம். உயிர்த்தெழுதலின் மூலம் ஏக பரிசுத்த அப்போஸ்தலிக்க, கத்தோலிக்க திருச்சபை மக்களாக வாழ முற்படுவோம். அதற்காக வேண்டிய வரங்களை உயிர்த்த இயேசுவிடம் கேட்டு இத்திருப்பலியிலே மன்றாடுவோம். ஆமென்.”

மறையுரை முடிந்த அக்கணத்திலேயே லீஸா தெளிவான முடிவுக்கு வந்திருந்தாள். “இறைவா, இச்செய்தி நீர் எனக்காகத் தந்தது. நிச்சயமாக இப்போது என் தந்தையிடம் சென்று மன்னிப்புக் கேட்டு, உமது சமாதானத்தைப் பகிர்ந்துக் கொள்வேன். உன்னுடனேயே நானும் உயிர்த்தெழுந்தேன். நன்றி இறைவா” எனக் கண்ணீர் மல்க பிரார்த்தித்துக் கொண்டாள்.

திருப்பலி முடிந்து எல்லோரும் ஒருவருக்கொருவர் சமாதானத்தையும் உயிர்த்த கிறிஸ்துவின் வாழ்த்தையும் பகிர்ந்து கொண்டிருக்க, லீஸா தன் குடும்பத்தினனரைத் தேடிக் கொண்டிருக்க “அம்மா லீஸா” என இரு கைகள் தன் தோளைத் தொடச் சடாரென திரும்பியவள், “அப்பா...” என கதறினாள். “அழாதம்மா... ப்ரைஸ் த லோட், ஹெப்பி ஈஸ்டர்” என்ற தந்தையைக் கட்டிக் கொண்டவள். “ஹெப்பி ஈஸ்டரப்பா” என்று தனது மனநிறை வாழ்த்தையும் பகிர்ந்து கொண்டாள்.

அவ்விடத்திற்கு வந்த பங்குத் தந்தைக்கும் தமது வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்ட லீஸா, “ஃபாதர் இன்று எனக்கு சாதனை மிக்கதும் சந்தோஷ மிக்கதுமான ஈஸ்டர்” என்றவளைப் பார்த்து “அப்படியா மிக்க மகிழ்ச்சி’ என்ற பங்குத் தந்தை தந்தையிடம் லீஸாவின் தந்தை, “ஆமாம் ஃபாதர், உங்களின் மறையுரை என்னையும் மாற்றியது. எனக்கான கடமையை உணர வைத்தது” என்று நிறுத்தாமலேயே “அம்மா லீஸா என்னையும் மன்னிச்சிடும்மா. ஒரு தவறான புரிதலால் உன்னை நோகடிச்சிட்டேன்மா. உன்னை நான் பேசினது பிழை தான். உன்ல எந்த பிழையுமில்லனு டிலக்சியும் சொன்னாள். உனக்காக அவங்கள்லாம் வெய்ட் பண்ணிட்டு இருந்தாங்க. நீயும் வராததால் நானும் டென்ஸன்ல இருந்த நேரம் அவங்கள தெரிஞ்ச யாரோ நம்மூர் ஆக்கள் தேவையில்லாம சொல்லியிருக்காங்க. வந்தவங்களுக்கு நான் பேசினபோது சொன்னாங்க. அதுதான் நானும் உன்னை பேசிட்டன். இனி ஒருக்குழப்பமும் இல்லை. உனக்கான எனது கடமையை நிச்சயம் செய்வேன். நீ நல்லாயிருக்கணும்” என கூறி முடித்தார்.

லீஸாவுக்கு இப்போது மனம் இலேசாகி இருந்து. பாவங்களை வென்று மனிதன் வாழ முற்படும் போது துயரங்களே இல்லை. இறைமகன் இயேசு பாவிகளுக்காக சிலுவைச் சாவை ஏற்று மரணத்தை வென்று உயிர்த்த இயேசுவின் உயிர்ப்பு லீஸாவின் மனத்திலும், குடும்பத்திலும் இன்று மிளிர்வதைக் கண்டாள்.

“உயிர்த்தார் கிறிஸ்து உயிர்த்தார் – இந்த

உலகினில் உயிர்த்து விட்டார்...”

என்ற பாடல் ஆலயத்தில் ஒலித்துக் கொண்டிருந்தது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.