புத். 68 இல. 13

மன்மத வருடம் பங்குனி மாதம் 14ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஜுமாதல் ஆகிரா பிறை 17

SUNDAY MARCH 27, 2016

 

தங்கொட்டுவையை உறைய வைத்த கொடூரக் கொலைகள்

தங்கொட்டுவையை உறைய வைத்த கொடூரக் கொலைகள்

தங்கொட்டுவ, புக்கம்பொல பிரதேசத்தில் ஐவர் கொல்லப்பட்டு எரிக்கப்பட்டமை அண்மையில் இடம்பெற்ற கொலைகளுள் மிகவும் கொடூரமானவை.

கடந்த பதினொறாம் திகதி வெள்ளிக்கிழமை பொலிஸ் அவசர பிரிவுக்கு கிடைத்த தகவலையடுத்து ஸ்தலத்துக்கு சென்ற பொலிஸார் பாழடைந்த வீதியில் முற்றாக எரிந்த நிலையில் ஐஏஸ் வாகனமொன்றை கண்டனர். அதன் பின் ஆசனத்தில் ஐந்து உடல்கள் கருகியிருந்தன. அடையாளம் காணமுடியாதளவு கருகியிருந்தன. கூர்மையற்ற ஆயுதமொன்றினால் ஐவரின் தலைப்பகுதிகள் தாக்கப்பட்டு கொலை செய்த பின்னர் சடலத்துடன் பெட்ரல் குண்டினால் வாகனம் எரிக்கப்பட்டுள்ளது.

வாகனத்தின் பின் ஆசனத்தின் கீழ் சுமார் பத்தடி தூரத்துக்கு இரத்தக்கறைகள் வீசுண்டிருந்தன. இந்த ஐவரும் வேறிடத்திலிருந்து கடத்தப்பட்டு இப்பாழடைந்த பகுதிக்கு கொண்டுவரப்பட்டு கொலை செய்யப்பட்டபின் வாகனத்தின் பின் ஆசனத்தில் வைக்கப்பட்டு எரிக்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கொழும்பு பிரதேசத்தில் இயங்கும் இரண்டு பாதாள உலக கோஷ்டியினரின் மோதல் இக்கொலைகளுக்கு காரணமென கூறப்படுகிறது. பாதாள உலக நாயகனும் இவனது நான்கு சகாக்களும் இறந்தவர்களாவர் என கூறினாலும் இவை ஊர்ஜிதமாகவில்லை. முற்றாக எரிந்த கே.டி.எஸ்.ரக வாகனத்தில் இலக்க தகடு கண்டெடுக்கப்பட்டது இதன் இலக்கம் டபிள்யு. பி. எச். 1080. இவ்வாகான இலக்கத்தினூடாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. இவ்வாகனம் நிதி நிறுவனமொன்றின் வாகனமென்றும் இதன் உரிமையாளர் கொழும்பு கொள்ளுப்பிட்டியை சேர்ந்த பெண் ஒருவர் எனவும் தெரியவந்தது.

இந் நிதி நிறுவனத்தில் கடமையாற்றும் நேவிகபில இவ்வாகனத்தை இறுதியாக எடுத்துச் சென்றுள்ளதாகவும் இதன் வாகன செலுத்துனராக கடமையாற்றுவதும் தெரியவந்தது. இவர் பல்வேறு குற்றங்களுக்காக பொலிஸாரினால் தேடப்பட்டு வருபவர் என்றும் பன்னல பிரதேசத்தை சேர்ந்தவறென்றும் தெரியவந்துள்ளது. சம்பவம் இடம்பெற்ற இடத்தில் காலியான மது போத்தல்கள் கோப்பைகள் ஆங்காங்கே காணப்பட்டன. தேடப்பட்டுவரும் நேவி கபில அவரது மூத்த மகளுக்கு கடந்த பத்தாம் திகதி வியாழக்கிழமை இரவு பதினொரு மணியளவில் தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளதையும் சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு வந்த கபிலவின் மனைவி அழுதவண்ணம் பொலிஸாரிடம் தெரிவித்தார். கொலை செய்யப்பட்டவர்களுள் தன் கணவருமுள்ளாரா என்பதையறிய மனைவி அங்கு வந்தார். சடலங்கள் அடையாளம் காணமுடியாதளவு கருகியிருந்ததால் அவரது கணவரை அடையாளம் காண்பது சாத்தியமாகவில்லை.

இச்சம்பவம் நடைபெற்ற இடத்தில் 2014ம் ஆண்டு ஒரு முச்சக்கரவண்டியோட்டுனர் கழுத்து வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டார். இவை சம்பந்தமாக முன்னாள் இராணுவ வீரறொருவரும் இன்னுமொருவரும் கைக்குண்டுடன் கைது செய்யப்பட்டனர்.

நேவி கபில தங்கொட்டுவவில் வசிக்கும் பலருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்திருந்தாராம். இதற்கு காரணம் கப்பமாகும். கப்பம் கொடுக்க விரும்பாதவர்கள் ஒன்றுசேர்ந்து இவரை ஒழித்து கட்ட இந்நடவடிக்கையெடுக்கப்பட்டதாக சந்தேக நபர்களுள் ஒருவரான அமில ருவன் அல்மேடா பொலிஸாரிடன் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் சம்பந்தமாக ஐயவர் சந்தேக நபர்களாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஐஏஸ் வாகனத்தின் பின் ஆசனத்தில் ஐவரும் கொலை செய்யப்பட்டனர். முன் ஆசனத்தில் எவரும் கொல்லப்படவில்லை. வாகன சோதனையின்போது தங்க மாலை கலையொன்று கண்டெடுக்கப்பட்டது. அம்மாலை தன் கணவருக்குரியது என ஒரு பெண் தெரிவித்துள்ளார். எரிந்த வாகனத்தில் கருகியிருந்த ஒரு சடலத்தை காண்பித்து இவர் இவ்வாகனத்தின் செலுத்துனராக கடமையாற்றியவர் என் கணவர் கபில என அடையாளம் காண்பித்துள்ளார் மனைவி.

எதிர்ந்த வாகனத்தினுள் காணப்பட்ட சடலங்கள், வாகனத்தின் அருகில் காணப்பட்ட இரத்தக்கறைகள் சம்பந்தமான அறிக்கைகளை வைத்திருக்குமாறு நீதிமன்ற அலுவலர்களுக்கு மஜிஸ்திரேட் அமரசேன பணித்துள்ளார்.

நீர்கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி ரூஉல் ஹக் சம்பவம் நடைபெற்ற இடத்தை பார்வையிட்டார். பன்னிரெண்டு இரத்தக்கறைகள் வாகனத்தினருகில் காணப்பட்டன. இரண்டு சோடி பாதணிகள் ஒருகிலோ மீட்டருக்கப்பால் கண்டெடுக்கப்பட்டன.

பொலிஸ் மாஅதிபர் என். கெ. இலங்ககோனின் பணிப்பையடுத்து விசாரணைகள் குற்ற புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தங்கொட்டுவ, சிங்கக்குலி பகுதியிலுள்ள வீடுகள், தனியார், அரசு நிறுவனங்களிலுள்ள சி.சி.ரி.வி ​ெகமராக்களை பரிசீலிக்கும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். சந்தேக நபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி விஜேகுணவர்தனவின் மேற்பார்வையில், பிரதி பொலிஸ் மாஅதிபர் ரொஷான் பெர்ணான்டுவின் ஆலோசனைப்படி சிரேஷ்டபொலிஸ் அத்தியட்சகர் சந்தன அதுகோரல, உதவி பொலிஸ் அத்தியட்சகர் தேசப்பிரிய ஜயதிலக, ஆகியோரின் பணிப்பின்படி பொறுப்பதிகாரி பிரதீப்குமார, வசந்த குமார எஸ். டி. ஆர். பிரியதை, வசந்த ஹேரத், என். எம். எஸ். ஜயநாத் ஆகியோர் விசாரணைகளிலீடுபட்டனர்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.