புத். 68 இல. 13

மன்மத வருடம் பங்குனி மாதம் 14ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஜுமாதல் ஆகிரா பிறை 17

SUNDAY MARCH 27, 2016

 

 
நுளம்புகளை முற்றாக கட்டுப்படுத்தும் திரவத்தை கண்டுபிடித்து கல்முனை பௌஸ் சாதனை

நுளம்புகளை முற்றாக கட்டுப்படுத்தும் திரவத்தை கண்டுபிடித்து கல்முனை பௌஸ் சாதனை

நுளம்புகளை கட்டுப்படுத்துகின்ற திரவம், நுளம்புக் கொயில் போன்றவற்றுக்கு நிகரான தொழிற்பாட்டைக் கொண்டுள்ள முற்றிலும் 100 வீதம் ஆயுர்வேத மருந்தினால் தயாரிக்கப்பட்ட திரவக்கலவை ஒன்றை கல்முனை பிரதேச வர்த்தகரான எஸ். எச். முஹம்மது பௌஸ் என்பவர் தனிப்பட்ட முயற்சியினால் கண்டுபிடித்து சாதனை புரிந்துள்ளார். இதனால் 100 வீதம் நுளம்புகள் கட்டுப்படுத்தப் படுகின்றன என்று அவர் உறுதிப்பட குறிப்பிடுகின்றார். குறித்த நபரிடம் இச்சாதனை தொடர்பாக வினவினோம். இது தொடர்பாக அவர் வழங்கிய செவ்வியினை இங்கு தொகுத்துத் தருகிறோம்.

* கேள்வி- தங்களைப் பற்றி குறிப்பிட முடியுமா ?

பதில்- எனது பெயர் எஸ். எச். முஹம்மது பௌஸ், நான் கல்முனையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டவன். எனது ஆரம்பக் கல்வி மற்றும் உயர் கல்வியை கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலையில் கற்றேன். எனது சிறிய வயது முதல் எனக்கு வர்த்தகத்தில் பெரும் ஆர்வமுண்டு. அதன் காரணமாக தொடர்ந்தும் வர்த்தகத்துறையில் ஈடுபட்டு வருகிறேன்.

* கேள்வி- இன்று மக்களுக்கு அவசிய தேவையாக கருதப்படும் நுளம்புகளை கட்டுப்படுத்துகின்ற ஆயுர்வேத திரவத்தை கண்டுபிடித்துள்ளீர்கள். இதற்கான ஆர்வம் தங்களுக்கு எவ்வாறு வந்தது ?

பதில்- உண்மையில் வர்த்தகத்துறையில் பெரும் ஆர்வம் கொண்ட நான், எனது சிறிய தந்தை ஆயுர்வேத வைத்தியர் மர்ஹூம் ஏ. எம். முஸ்தபா விடமிருந்தே இந்த விடயத்தை கற்றுக் கொண்டேன். இது போன்று பல விடயங்களை அவர் உயிருடன் இருந்த காலத்தில் என்னிடம் கூறியிருக்கின்றார். அவரிடம் இருந்து பெற்ற தகவல்களை அடிப்படையாக வைத்து நான் இந்த திரவக் கலவையை கண்டுபிடித்துள்ளேன். மிக நீண்ட காலமாக எனக்கு இந்த ஆசை இருந்து வந்தது. நுளம்புகளை கட்டுப்படுத்தும் பத்திகள் மற்றும் மின்சாரத்தில் இயங்கும் திரவப் பொருட்கள் சகல மக்களுக்கும் போதிய பலனை வழங்குவதில்லை என்பது மக்களின் கருத்து. சிலருக்கு எவ்வித பக்கவிளைவுகளும் ஏற்படுவதில்லை. ஆனால் பலருக்கு இது ஒவ்வாமையை ஏற்படுத்தி சுவாசத்திற்கு பிரச்சினையாக அமைகிறது. என்ற நிலை மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. இதனை அடிப்படையாக வைத்தே நான் மக்களின் நலன் கருதி ஒரு சமூக சேவை நோக்குடன்தான் இதனை உருவாக்க முயற்சித்து வெற்றி கண்டேன். ஆயுள்வேத மூலிகையால் இவ்வாறான நுளம்புகளை கட்டுப்படுத்தம் திரவத்தினை இதுவரை யாரும் கண்டுபிடிக்கவில்லை.

* கேள்வி- அப்படியானால் இந்த நுளம்புகளை கட்டுப்படுத்தும் ஆயுள்வேத திரவத்தில் பக்கவிளைவுகள் எதுவும் இல்லையா? அதனை எவ்வாறு நிரூபிப்பீர்கள் ?

பதில்- இதனை தயாரித்து சுமார் 3 மாத காலமாகிறது. அதற்கிடையில் எனது குடும்ப உறவினர்கள் மற்றும் அயலவர்களுக்கும் இதனை பரீட்சித்துப் பார்ப்பதற்காக சுமார் 20 வீடுகளுக்கு வழங்கினேன். அவர்களின் தகவல்களையும் பெற்றேன். இதுவரை எவரும் எவ்வித குற்றச்சாட்டுக்களையும் தெரிவிக்கவில்லை. முக்கியமாக சிறுவர்கள், முதியோர்கள், நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் வாழும் வீடுகளுக்கும் கொடுத்து பரீட்சித்துப் பார்த்தேன். கற்பிணிப் பெண்களைப் பொறுத்தவரை சிறிய சுவாச மாற்றம் ஏற்பட்டாலும் அவர்களுக்கு வாந்திவரும் நிலை இருக்கும். ஆனால் அவ்வாறான எந்த பிரச்சினையும் கர்ப்பிணித் தாய்மாருக்கும் ஏற்படவில்லை. எல்லோரும் இதுவரை எவ்வித பிரச்சினையும், பக்கவிளைவுகளும் இதனால் இல்லை என்றே கூறுகின்றனர். அதுமட்டுமல்ல தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர், டாக்டர், பொது சுகாதார பரிசோதகர், என சுகாதார துறை சார்ந்த பல்வேறு தரப்பினரிடமும் இந்த கண்டுபிடிப்பைப் பற்றி தெரியப்படுத்தி அவர்களின் ஆலோசனையையும் பெற்றுக் கொண்டுள்ளேன்.

* கேள்வி- இத்திரவம் நுளம்பினை மட்டும் கட்டுப்படுத்தக்கூடியதா அல்லது மனிதனுக்கு திங்காகும் வேறு உயிர்களையும் கட்டுப்படுத்துமா ?

பதில்- நுளம்பு மாத்திரமல்ல கரப்பான் பூச்சி, பல்லி, ஈ போன்ற பலவற்றையும் கட்டுப்படுத்துகின்ற வல்லமை கொண்டது. இதனை பரீட்சித்தவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள்.

* கேள்வி- இந்த கண்டுபிடிப்பின் உண்மைத்தன்மையை அறிந்து அதற்காக சான்திதழ் பெறும் நிலையில்தான் இந்த நுளம்புகொல்லி திரவத்தை சந்தைப்படுத்தலாம். இதற்காக நீங்கள் என்ன முயற்சியை மேற்கொண்டுள்ளீர்கள் ?

பதில்- நிச்சயமாக கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் பொறுப்பதிகாரியிடம் கொடுத்து பரீட்சித்து பார்க்குமாறு கூறியிருக்கின்றேன். அவர்களும் அதனை பெற்றுக்கொண்டு இது வெற்றியளிக்குமிடத்து மக்கள் பாவனைக்காக வழங்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்கள். அது மாத்திரமன்றி அரசாங்க ஆயுள்வேத திணைக்களம் மற்றும் இதர பொறுப்பு வாய்ந்தவர்களிடமும் பரீட்சித்த பின்னர் சான்றிதழ் பெற்று நான் இந்த சேவையை மக்களுக்கு வழங்கலாம் என்ற நம்பிக்கையில் இருக்கின்றேன்.

* கேள்வி: உமது நுளம்பு கொல்லி திரவக்கலவை பற்றி குறிப்பிடுங்கள் ?

பதில்- நுளம்பு கட்டுப்பாட்டுக்காக இரண்டு மூன்று கம்பனிகள் ஏற்கனவே திரவ மருந்தினை சந்தைப்படுத்தி வருகின்றது. இந்த மருந்துகள் சிலருக்கு மட்டுமே பாவிக்க முடிகின்றது. சிறு பிள்ளைகளுக்கு கண்ணால் தண்ணீர் வடிதல், நாசடைத்தல் போன்ற பிரச்சினைகள் இந்த கம்பனிகளின் திரவ மருந்தினால் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக மக்கள் தெரிவிக்கும் நிலையில், அது கெமிக்கல் என்பதால் அவ்வாறு ஏற்படலாம். ஆனால் எனது கண்டுபிடிப்பான இத்திரவம் 100 வீதம் ஆயுள்வேத மூலிகைகளால் உருவானது. இதனால் எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்படாது என்பது எனது நம்பிக்கை.

* கேள்வி-: மின்சாரத்தில் இயங்கும் இத் திரவத்தை பாவிப்பதற்கான மெசினை எவ்வாறு பெறுவீர்கள் ?

பதில்- அந்த மெசினை தற்போதைக்கு நான் உருவாக்க முயற்சிக்கவில்லை. அதற்கான போதிய பொருளாதார வளம் என்னிடம் இல்லை. தற்போதைக்கு அதனை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்தே வழங்க விருக்கின்றேன்.

அவ்வாறான ஓர் எண்ணம் இருந்தாலும் அதற்கு பாரிய நிதி தேவைப்படும். அதனை என்னால் ஈடு செய்ய முடியாது. அதற்காக தனியார் நிறுவனங்கள், அமைப்புக்கள் முன்வந்தால் நிச்சயமாக நான் தேசிய ரீதியாகவும் இந்த சேவையை வழங்க உத்தேசித்துள்ளேன்.

* கேள்வி-: இந்த புதிய தயாரிப்பினால் ஏற்கனவே சந்தையிலுள்ள நுளம்பு கட்டுப்படுத்தும் பொருட்களின் விற்பனையில் பாதிப்பு ஏற்படாதா ? தனியார் கம்பனிகளின் விற்பனை வீழ்ச்சியடையாதா ?

பதில்- நான் இங்கு ஒரு உண்மையை சொல்ல வேண்டும். நான் இந்த முயற்சியில் இறங்கியது எனக்குள்ள ஆர்வத்தினாலும் மக்களுக்கு இந்த சேவை சென்றடைய வேண்டும் என்பதனாலும் மட்டுமே. மாறாக இதனை சந்தைப்படுத்துவதன் மூலம் மற்றவர்களுக்கு போட்டியாக அமைதல் என்ற விடயத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. நான் மக்களுக்காக சேவை செய்ய வேண்டும் என்ற நல்ல நோக்குடன்தான் இருக்கின்றேன். மக்கள்தான் இதனை தீர்மானிக்க வேண்டும். ஆனால் ஒன்று மட்டும் உறுதி ஏனைய தயாரிப்புகளுக்கு நான் தடையாக இருக்க மாட்டேன். மக்கள் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்குண்டு.

இவ்வாறு குறிப்பிடுகின்ற இச்சாதனையாளரின் இம்முயற்சி வெற்றியடைய நாமும் வாழ்த்துகின்றோம்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.