புத். 68 இல. 13

மன்மத வருடம் பங்குனி மாதம் 14ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஜுமாதல் ஆகிரா பிறை 17

SUNDAY MARCH 27, 2016

 

 
இயேசுவே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறார் அவரை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்

இயேசுவே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறார் அவரை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்

இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுந்த திருநாளை இன்று அகிலத்திலுள்ள கிறிஸ்தவர்களும் கொண்டாடுகிறார்கள். ‘...நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்’ (யோவான் 11:25). தமது மரணத்திற்கு முன்னதாக தமது சீடர்களுக்கும் தம்மைப் பின்பற்றியவர்களுக்கும் இயேசு கூறிய வார்த்தையாகும். இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலே கிறிஸ்தவ விசுவாசத்தின் அத்திவாரமாகும்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மரித்த பின்பு அவரை புதிதாக வெட்டப்பட்டிருந்த கல்லறையில் அடக்கம் பண்ணினார்கள். அத்துடன், பிரதான ஆசாரியரும் மூப்பர்களும் ரோம அதிபதியுடன் பேசி, கல்லறை வாயிலில் பெரிய கல்லை புரட்டி, கல்லறைக்கு முத்திரை வைத்து காவல் போட்டனர். ஆனாலும் இயேசு சொன்னப்படி உயிர்த்தெழுந்தார். இதனிமித்தம் அனைத்து கல்லறைகளிலும் இயேசுவின் கல்லறையே திறக்கப்பட்ட கல்லறையாக இன்றும் காணப்படுறது.

இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைந்த யூதர்களும் ரோமர்களும் அவரின் சரித்திரம் முடிந்து விட்டது என்பதை மட்டுமே நினைத்தார்கள். இயேசுவின் உயிர்த்தெழுதலின் மூலமே சரித்திரத்தின் ஆரம்பம் என்பதை அவர்கள் உணர்ந்திருக்கவில்லை. அத்துடன், இயேசு கிறிஸ்துவை குறித்து தேவனின் அநாதி தீர்மானத்தின்படியே இவைகள் நடைபெற்றன.

‘வாரத்தின் முதலாம் நாள் அதிகாலையிலே தாங்கள் ஆயத்தம் பண்ணின சுகந்தவர்க்கங்களை அவர்கள் எடுத்துக் கொண்டு வேறு சில ஸ்திரீகளோடுங் கூட்டாக கல்லறையினிடத்திற்கு வந்தார்கள். கல்லறையை அடைத்திருந்த கல் புரட்டித் தள்ளப்பட்டிருக்கிறதைக் கண்டு, உள்ளே பிரவேசித்து கர்த்தராகிய இயேசுவின் சரீரத்தைக் காணாமல் அதைக் குறித்து மிகுந்த கலக்கமடைந்திருக்கையில், பிரகாசமுள்ள வஸ்திரம் தரித்த இரண்டுபேர் அவர்கள் அருகே வந்தார்கள். அந்த ஸ்திரீகள் பயப்பட்டு தலைகவிழ்ந்து தரையை நோக்கி நிற்கையில், உயிரோடிருக்கிறவரை மரித்தோரிடத்தில் தேடுகிறதென்ன? அவர் இங்கே இல்லை உயிர்த்தெழுந்தார்’ (லூக்கா 24:1-6). இந்த வார்த்தைகளை கிடைக்கப் பெற்றவுடனே இயேசு தனது மரணத்திற்கு முன் பலமுறை தனது மரணம் உயிர்த்தெழுதலை குறித்து கூறியதை நினைவு கூர்ந்தனர்.

இந்த ஸ்தீரிகள் விரைந்து ஓடி, இந்த நற்செய்தியை சீடர்களுக்கு அறிவித்தார்கள். அவருடைய சீடர்களும் கல்லறைக்கு வந்து, உண்மை அறிந்து கொண்டார்கள். இயேசுவின் உயிர்த்தெழுதல் பிரசித்தமாயிற்று. உயிர்த்த கிறிஸ்து தன்னை தமது சீடர்களுக்கு வெளிப்படுத்தினார். அவ்வேளையில் சீடனாகிய தோமா இவ்விடத்தில் இருக்கவில்லை.

இயேசு உயிர்த்தெழுந்தார் என்ற செய்தி தோமாவுக்கு அறிவிக்கப்பட்டது, ஆனால் அவன் அதை நம்பமறுத்து, ஆணிகள் பாய்ந்த கை, கால் காயப்பட்ட விலாவை தொட்டுப் பார்க்க வேண்டும் என்றான். இயேசு தன்னை அவனுக்கு காண்பித்தார். இயேசு தோமாவை நோக்கி, ‘நீ என்னை கண்டதினால் விசுவாசிக்கிறாய், காணாதிருந்தும் விசுவாசிக்கிறவன் பாக்கியவான்’ (யோவான் 20:29)என்றார் இயேசு தான் உயிர்த்தெழுதலின் பின் பலமுறை தனது சீடர்களுக்கு காட்சியளித்தார்.

மரணம் ஒவ்வொரு மனிதனை ஆட்டிப்படைக்கிறது. நாம் லௌகீகத்தில் வாழ்ந்தாலும் மரண பயம் என்பது எமது இருதயத்தை செயலிழக்கச் செய்யும். இயேசு நமக்காக மரித்து மரணத்தை ருசி பார்த்தார். அவர் மரணத்தையும் பாதாளத்தையும் வென்று உயிர்த்தெழுந்தார்.

கிறிஸ்துவுக்குள் ஜீவிப்பவர்களுக்கு மரணத்தை குறித்ததான பயமிருப்பதில்லை. ஆனால் மரண பயம் எமக்குள் இருக்குமேயானால், நாம் பாவத்துக்கு அடிமையாக இருக்கிறோம் என்று அர்த்தமாகும். ‘சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்பட வேண்டாம். ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்’ என்றார் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. அப். பவுல் ‘கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம்’ (பிலி. 1:21) என்றார். இவ்வார்த்தையினூடாக எமக்கொரு நித்திய மெய்வாழ்வு உண்டு என்பதை விசுவாசிக்க வேண்டும். இயேசு கிறிஸ்து மரணத்தை வென்று விசுவாசத்தின் உறுதியும் நித்திய மெய்வாழ்வின் நம்பிக்கையையும் எமக்கு வைத்தார்.

தேவனால் படைக்கப்பட்ட ஆதாம் ஏவாளின் கீழ்ப்படியாமையினால் மீறுதல் என்ற ரீதியில் பாவம் உலகத்திற்குள் பிரவேசித்து, மனித குலம் பாவத்திற்குள்ளாகியது. மனித குலத்தை மீட்பதற்காக தேவன் மானிடக்கோலம் கொண்டவராக இவ்வுலகத்தில் அவதரித்தார். எமக்காக கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இரட்சிப்பின் கிரியைக்காக தன்னையே பாவநிவாரண பலியாக்கினார். இயேசு எமது பாவங்களை சுமந்து தீர்த்து, தேவ ஆட்டுக்குட்டியாக ஜீவாதார பலியானார். எம்மை இலவசமாக மீட்டுக் கொண்டு எமக்காக கிரயம் செலுத்தினார்.

இயேசு பாவத்தையும் சாபத்தையும் மரணத்தையும் பாதாளத்தையும் வென்று வெற்றி வேந்தராக உயிர்த்தெழுந்தார். இந்த செயலினால் கிறிஸ்தவர்களாகிய எமக்கும் உயிர்த்தெழுதலில் நிச்சயம் உருவாக்கப்பட்டுள்ளது. ‘மரணமே உன் கூர் எங்கே, பாதாளமே உன் ஜெயம் எங்கே’ என்ற வினவ கூடிய விதத்தில் இயேசுவின் உயிர்த்தெழுதல் நிரூபித்துள்ளது.

இன்று நாமும் உயிர்த்த கிறிஸ்துவின் சாட்சியாக மிளிர வேண்டும் என்பதே தேவன் எதிர்பார்ப்பாகும்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.