புத். 68 இல. 13

மன்மத வருடம் பங்குனி மாதம் 14ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஜுமாதல் ஆகிரா பிறை 17

SUNDAY MARCH 27, 2016

 

தமிழ் மொழி மாணவர்களுக்கு மட்டுமே ஏன் இந்தப் பாரபட்சம்

தமிழ் மொழி மாணவர்களுக்கு மட்டுமே ஏன் இந்தப் பாரபட்சம்

கடந்த சில வருடங்களாக கல்விப் பொதுத் தராதர சாதாரண தர மற்றும் உயர்தரத்தில் தமிழ் மொழி மூலமாகத் தோற்றி சிறந்த பெறுபேறுகளைப் பெறுகின்ற மாணவர்கள் தேசிய மட்டத்தில் தர வரிசைப் படுத்தப்பட்டு அவர்களுக்குரிய கௌவரம் வழங்கப்படுவதில்லை என்பது மாணவர்களிடையேயும், பெற்றோரிடையேயும் காணப்படும் பெரும்மனக்குறையாக உள்ளது. இது தொடர்பாகப் பல தடவைகள் பல கல்விசார் அமைப்புக்கள் சுட்டிக் காட்டிய போதிலும் இது இன்னமும் நிவர்த்திக்கப்படாமலிருப்பது பெரும்குறை என்றே கூற வேண்டும்.

ஒவ்வொரு பரீட்சை முடிவுகள் வெளியானதன் பின்னரும், சிங்கள மாணவர்கள் ஜனாதிபதியிடமிருந்தும், பிரதமரிடமிருந்தும் ஜனாதிபதி மாளிகையில் வைத்துக் கௌரவ மளிக்கப்பட்டு பெறுமதியான பரிசில்களைப் பெற்றுக் கொள்ளும்போதும் தமிழ் மொழியில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் தமக்கு அத்தகைய வாய்ப்பும். கௌரவமும் கிடைக்கவில்லையே என எண்ணிக் கவலைப்படும் நிலை காணப்படுகிறது. மாணவர்களைப் போலவே அவர்களது பெற்றோரும், அம்மாணவர்களுக்குக் கல்வி புகட்டிய ஆசிரியர்களும் படும் மனவேதனை எல்லோருக்கும் புரிய நியாயமில்லை.

இந்த நிலையை நாம் அண்மையில் நடந்து முடிந்த க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் முடிவுகளின் பின்னரும் காணக்கூடியதாக இருந்தது. கடந்த வார இறுதியில் வெளியான முடிவுகளின் பின்னர் முதல் பத்து இடங்களைப் பெற்ற மாணவர்கள் ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்துக் கௌரவிக்கப்பட்டனர். ஆனால் தமிழ் மொழி மூல மாணவர்கள் வழமைபோலவே இதில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. இவ்விடயம் தொடர்பாக உண்மையில் கல்வி அமைச்சின் கவனத்திற்குக் கொண்டு வரப்படவில்லையா அதேபோன்று ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் இவ்விடயம் பற்றி எதுவுமே தெரியாதா எனும் கேள்விகளும் எழுகின்றன.

ஆனால் இவ்விடயம் தொடர்பாக கடந்த பல வருடங்களாக இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம், கல்வி நிர்வாக சேவையின் கிழக்கு மாகாண சங்கங்கள் உட்பட பல கல்விசார் அமைப்புக்கள் குரல் கொடுத்தே வருகின்றன. ஆனால் இதுவரையில் முன்னேற்றகரமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. இந்த விடயமானது உண்மையில் தமிழ் மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியான செயல் மட்டுமன்றி இதுவொரு பாரபட்சமான நடவடிக்கையுமாகும் என இந்தச் சங்கங்கள் தமது கண்டனத்தைத் தெரிவித்திருக்கினறன.

உண்மையில் இந்த விடயம் தொடர்பாக கல்வி அமைச்சு கவனம் செலுத்தியே ஆக வேண்டும். கடந்த ஆட்சியில் இவ்விடயம் முன்னாள் ஜனாதிபதி வரை நேரடியாகச் சுட்டிக்காட்டிய போதும் அதனை அவரது அரசாங்கம் கவனத்தில் கொள்ளவில்லை. ஆனால் இன்றைய நல்லாட்சியில் அவ்வாறு இருந்துவிட முடியாது. அதிலும் இன்றைய ஆட்சியில் இராஜாங்கக் கல்வி அமைச்சராக தமிழரான பெ. இராதாகிருஷ்ணன் இருந்து வருகிறார். நாட்டிலுள்ள அனைத்துத் தமிழ் மொழி மூல பாடசாலைகளினதும் பொறுப்பினை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவரிடமே வழங்கியுள்ளார்.

இந்நிலையில் இந்தப் பிரச்சினையை இனியும் தொடர விடுவதில் அர்த்தமில்லை. இராஜாங்க கல்வி அமைச்சர் இராதாகிருஷ்ணன் தானே நேரடியாகத் தலையிட்டு இந்த தமிழ் மாணவர்களுக்கு நல்லதொரு தீர்ப்பினை வழங்க வேண்டும். அவர் மத்திய மாகாணத்தில் சுமார் பத்து வருடங்களாகக் கல்வி அமைச்சராக இருந்தவர். இக்காலத்தில் அப்பிரதேச பாடசாலைகளின் அபிவிருத்தியில் பல முன்னேற்றகரமான நடவடிக்கைகளை வெற்றிகரமாக மேற்கொண்டவர்.

எனவே அவரது அந்த அனுபவத்தை இதிலும் பயன்படுத்தி தேசிய ரீதியில் தமிழ் மொழி மூல மாணவர்கள் எதிர்கொள்ளும் இப்பிரச்சினைக்கும் தீர்வினைக் காண வேண்டும். அவர் முதலில் தனது அமைச்சருடன் அணுகி முடிவெடுக்கலாம் இல்லையெனில் பிரதமர், ஜனாதிபதி ஆகியோருக்கு இந்த நிலைமையை தெரியப்படுத்தி தமிழ் மாணவர்களுக்கு நியாயத்தைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். இதுவரை காலமும் தமிழ் மாணவர்களுக்கு இழைக்கப்பட்டு வந்த இந்த அநீதிக்கு அடுத்து வெளியாகும் க.பொ.த உயர்தர மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைகளின் பெறுபேறுகளுடன் அமைச்சர் இராதாகிருஷ்ணன் முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்.

உண்மையில் இவ்விடயத்தில் கடந்த பல வருடங்களாக விடாமுயற்சியுடன் செயற்பட்டுவரும் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தினரைப் பாராட்ட வேண்டும். அதன் தலைவர் சிரேஷ்ட கல்வியாளர் வி. ரி. சகாதேவராஜா இது தொடர்பாகப் பல கடிதங்களை சம்மந்தப்படவர்களுக்கு அனுப்பி வருகிறார். ஆனால் அமைச்சர்களோ அதிகாரிகளோ இதற்கு இதுவரையிலும் செவிசாய்க்கவில்லை. முன்னாள் ஜனாதிபதியே இவ்விடயம் தொடர்பாக நன்கு தெரிந்திருந்தும் தட்டிக்கழித்துச் செயற்பட்டுள்ளார். அதற்கு அவருடன் கூட இருந்த தமிழ் அரசியல்வாதிகளும் ஒருவகையில் காரணமாகவே இருந்துள்ளனர்.

இந்நிலையை இனியும் தொடரவிடாது சிங்கள மொழி மூல மாணவர்களுக்கு வழங்கப்படும் அதே சலுகைகளை தமிழ் மொழி மூல மாணவர்களுக்கும் வழங்க வேண்டும். இதனைப் புதிய நல்லாட்சி அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும். நாட்டிலே மூன்று மொழிகளில் பரீட்சைகளை நடத்திவிட்டு சிங்கள மொழி மூல மாணவர்களை மட்டும் தேர்ந்தெடுத்து அடுத்த நாளே ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்து பாராட்டிக் கௌரவித்துப் பரிசில்கள் வழங்குவது என்பது பாரபட்சம் காட்டப்படுவதற்கு ஒப்பானது எனத் தமிழர் ஆசிரியர் சங்கமும் ஏனைய அமைப்புக்களும் சுட்டிக் காட்டுவதில் தவறிருப்பதாகத் தெரியவில்லை.

அத்துடன், கடந்த ஆட்சியில் நடந்த இத்தகைய செயற்பாடுகள் இன்றைய நல்லாட்சியிலும் தொடர்வது முறையா என அவ்வமைப்புக்கள் கேட்பதிலும் நியாயமுள்ளது. சிங்கள மொழி மூலம், தமிழ் மொழி மூலம் என இரு வகையான பிரிவுகளாகப் பாடசாலைகள் நாட்டில் தனித்தனியாக இயங்குகின்ற நிலையில் ஒரு பகுதியினரைப் புறக்கணப்பது என்பது பொருத்தானதாக இருக்காது. தமிழ் மொழி மூல மாணவர்களின் திறமைகளை எவரும் குறைத்தும் மதிப்பிட்டு விடக் கூடாது.

பொதுவான கருப்பாடங்களில் ஒரே மொழியில் வினாக்கள் அமையப் பெற்றாலும் தாய் மொழி மற்றும் சமய பாடங்கள் தனித்துவமாகவே நடத்தபடுகிறது. இவற்றின் அடிப்படையில் தர வரிசைப்படத்தினால்கூட நிச்சயம் முதல் பத்து இடங்களுக்குள் தமிழ் மொழி மூல மாணவர்களும் உள்வாங்கப்படும் நிலை ஏற்படும். எனவே அரசாங்கம் இவ்விடயத்தில் நல்லதோர் தீர்வினைத் தமிழ் மாணவருக்கு வழங்க வேண்டும் என்பதே எமது கருத்தாகும்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.