புத். 68 இல. 06

மன்மத வருடம் தை மாதம் 24ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ரபீஉல் ஆகிர் பிறை 27

SUNDAY FEBRUARY 07, 2016

 

 
எமில்காந்தன் வருகை மஹிந்தவை நெருக்கடிக்குள் சிக்க வைக்கும்?

புலிகளுக்கு வழங்கப்பட்ட பெருந்தொகை பணம் குறித்த தகவல்கள்:

எமில்காந்தன் வருகை மஹிந்தவை நெருக்கடிக்குள் சிக்க வைக்கும்?

நிதி மோசடி சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதியின் மகன் யோஷித்த ராஜபக்ச கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மஹிந்தவினால் விடுதலைப் புலிகளுக்கு வழங்கப்பட்ட பெருந்தொகை பணம் குறித்த தகவல்கள் மீண்டும் உருப்பெற்றுள்ளன.

ராஜபக்‌ஷகளுக்கு எதிராக தகவல்களைப் பெற்றுகொள்வதற்காக எமில்காந்தனை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

அன்றைய மஹிந்த அரசாங்கம் எமில்காந்தன் ஊடாக விடுதலை புலிகளுக்குப் பணம் வழங்கியதாக தெரிவிக்கப்படும் அதேவேளை, இந்தச் சம்பவத்தில் டிரான் அலஸின் பெயரும் தொடர்புபட்டுள்ளது. 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது வடக்கு மக்களின் தேர்தல் புறக்கணிப்பின் காரணமாகவே மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக வெற்றியடைந்தார். தேர்தலில் வெற்றி பெறுவதற்காக இந்தப் பணம் இலஞ்சமாக வழங்கப்பட்டிருந்தால், அது கடுமையான நிலையாகும். இந்தச் சம்பவம் உறுதிப்படுத்தப்படுமாயின், அது இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய தேர்தல் ஊழலாகும். பத்து வருடங்களுக்குப் பின்னர் இந்தச் சம்பவம் நிரூபிக்கப்பட்டாலும் அது தேர்தல் மற்றும் ஜனநாயக அடிப்படையில் முழுமையாகக் களைந்தெறியும் ஒரு விடயமாகும்.

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவைக் கொலை செய்ய முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் எமில்காந்தன், வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வந்து சரணடையவுள்ளார். எமில்காந்தனுக்கு எதிராக சிவப்பு அறிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த நபரால் சரணடைவதாக வழங்கப்பட்ட உறுதிமொழியை அடுத்துச் சிவப்பு எச்சரிக்கை நீதிமன்றினால் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.