புத். 68 இல. 06

மன்மத வருடம் தை மாதம் 24ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ரபீஉல் ஆகிர் பிறை 27

SUNDAY FEBRUARY 07, 2016

 

 
இந்தியா நினைத்தால் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு

இந்தியா நினைத்தால் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு

சுஷ்மா கூறியதாக சம்பந்தன் தெரிவிப்பு

இலங்கையில் நிலவும் சகல பிரச்சினைகளுக்கும் இந்திய நினைத்தால் தீர்வு காண முடியுமென்று இந்திய வெளிவிவகார அமைச்சர் திருமதி சுஷ்மா சிவராஜ் தெரிவித்துள்ளார். நேற்றுத் தம்மைச் சந்தித்தபோது திருமதி சுஷ்மா இவ்வாறு கூறியதாக, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

இலங்கைக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவ்ராஜ் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கிடையிலான சந்திப்பு கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நேற்று நடைபெற்றது.

நாட்டில் காணப்படும் சகல பிரச்சினைகளுக்கும் இந்தியா நினைத்தால் கட்டாயம் தீர்வு கிடைக்கும். இந்திய அரசின் முழு பங்களிப்பும் இலங்கைக்கு உண்டென்று இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவ்ராஜ் தெரிவித்துள்ளதாக இரா.சம்பந்தன் இதன்போது தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உருப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் உட்பட மேலும் பலர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்திய வெளிவிவகார அமைச்சருடனான இந்த சந்திப்பில் பல விடயங்கள் ஆராயப்பட்டதுடன், அவற்றிற்கான தீர்வுகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்திய மீனவர்களின் இழுவைப் படகுகள் மூலமான மீன்பிடி நடவடிக்கைகளைத் தடை செய்தல், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை பற்றிய விடயங்கள், அரசியல் சீர்திருத்தங்கள், மேலும் காணாமல் போனோர் பற்றிய விடயங்கள் பற்றிப் பேசப்பட்டதாகவும், காணாமல் போனோர்கள் இறந்திருந்தால் அவர்களுடைய குடும்பங்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியதான நட்டஈடுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.