புத். 67 இல. 52

மன்மத வருடம் மார்கழி மாதம் 12ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ர.அவ்வல் பிறை 15

sunday december 27, 2015

 

 
வார்த்தை ஜாலங்கள்  இன ஐக்கியத்தை கட்டியெழுப்பாது

வார்த்தை ஜாலங்கள்  இன ஐக்கியத்தை கட்டியெழுப்பாது

தமிழ் - முஸ்லிம் அரசியல் தலைமைகள் வலியுறுத்து

தவறுகளைத் திருத்திக்கொண்டு புரிந்துணர்வுடன் செயலாற்றுவோம்

இலங்கை முஸ்லிம்களின் தாய்மொழி தமிழ் என்பதால் வடபுலத்தில் வாழ்ந்த முஸ்லிம்களும் தமிழ்மொழியையே தாய்மொழியாகக் கொண்டதோடு செந்தமிழ் பேசி வந்தனர். முஸ்லிம் பாடசாலைகளிலும் தமிழே போதனா மொழியாக அமைந்தது. வடபுலத்தில் அமைந்த இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம் பாடசாலைகளில் முஸ்லிம் மாணவர்கள் கல்வி பெற்றனர்.

இதனால் மூவினத்துக்கும் உரியதாக அமைந்த கல்வி நிலையங்கள் இன நல்லுறவை வளர்க்கும் அடிப்படைத் தளமாக அமைந்தன. முஸ்லிம்கள் மற்றைய சமூகத்துடன் மொழியால் இணைக்கப்பட்டனர். முஸ்லிம் இளைஞர்கள் இந்து, கிறிஸ்தவ நண்பர்களுடன் இரண்டறக் கலந்து அன்பைப் பரிமாறி வளர்ந்து வந்தனர்.

 முஸ்லிம் யுவதிகளும் அவ்வாறே அந்யோன்னியமாக பழகினர். இதனால் சமூகத்திலே இன பேதம் என்பது ஒரு துளிகூட இருந்ததில்லை. சமய ஆசாரங்களில் மட்டும் வேறுபாடுகள் சில காணப்பட்டனவே தவிர பொது வாழ்விலும் பொதுவான வைபவங்களிலும் மூவினத்தவரும் இணைந்தே செயற்பட்டனர். விவசாயம், வியாபாரம், மீன்பிடி போன்ற தொழில்களிலும் இன மத பேதமின்றி இணைந்து தொழில் புரிந்து வாழ்ந்து வந்தனர். ஒருவருக்கொருவர் உதவி நல்கியும் ஒருவரையொருவர் தாங்கியும் வாழ்ந்தமை வடபுல மக்களிடையே காணப்பட்ட இன நல்லுறவின் சிறப்பம்சமாகும்.

போர்க்கால சூழலிலே இனச்சுத்திகரிப்பைக் கொள்கையாகக் கொண்டு புலி இயக்கத்தினர் முஸ்லிம்களை வதைத்தனர். முஸ்லிம்களின் பொருளாதாரத்தைச் சுரண்டினர். முஸ்லிம் இளைஞர்கள் போர் பயிற்சி பெற தயங்கியபோது கோபம் கொண்டு கடினமாக நடந்து கொண்டனர். இத்தகைய சூழ்நிலையில் முஸ்லிம்களுக்குச் சார்பாக பேச யாரும் முன்வரவில்லை. தமிழ் தலைமைகள் மெளனம் காத்தனர். தமிழ் பொதுமக்கள் வருத்தப்பட்ட போதும் முஸ்லிம்களை வதைக்காதீர் என்று சொல்லும் திராணி அவர்களுக்கு இருக்கவில்லை.

புலிகளின் போக்குத் தமிழ் தலைமைகளுக்கு பிடிக்காத போதும் எதிர்த்துப் பேச முடியாத நிலையில் அத் தலைமைகள் மெளனம் காத்தனர். அத்துடன் தமிழ் தலைமைகளும் தமக்குள் ஒருவரையொருவர் விமர்சித்தனரே தவிர ஒற்றுமை இருக்கவில்லை. முஸ்லிம் தலைமைகளுக்கும் தமிழ் தலைமைகளுக்கும் இடையே புரிந்துணர்வுடன் எந்த சந்திப்பும் நிகழவில்லை.

இந்த நிலையிலேயே புலிகள் முஸ்லிம்களை விரட்டியடித்தனர். தம்மோடு வாழ்ந்த தமிழ் சகோதரர்களை விட்டு முஸ்லிம்கள் அந்நியப்படுத்தப்பட்டனர். தமிழ் முஸ்லிம் உறவிலே விரிசல்கள் ஏற்பட்டன. முஸ்லிம்கள் இடம் பெயர்ந்து கால் நுாற்றாண்டு கழிந்துவிட்ட நிலையில் தமிழ் - முஸ்லிம்களுக்கிடையில் இருந்த அந்நியோன்னிய பிணைப்பு மறந்த கதையாகி விட்டது. 1990 க்குப் பின் பிறந்த புதிய சந்ததி முஸ்லிம்களை வேற்றினமாக நோக்கும் துரதிஷ்ட நிலை ஏற்பட்டது.

யுத்த முடிவிலேயே புலிகளின் பிரச்சினை இனி இல்லை என்ற சூழ்நிலையிலே வடபுல முஸ்லிம்கள் தம் சொந்த மண்ணிலே மீளக்குடியேறச் சென்றனர். இந்த மீள் குடியேற்றத்தை ஒரு சில தமிழ் அரசியல்வாதிகள் தான்தோன்றித் தனமாக எதிர்த்து நடவடிக்கைளை எடுத்தனர். இதனால் வடபுல முஸ்லிம்களுக்கு இந்த அரசியல்வாதிகள் மீது வெறுப்பு ஏற்பட்டது. மனக்கசப்ப வளர்ந்தது. முல்லைத்தீவு, தண்ணிமுறிப்புக் காணி, தண்ணீரூற்று, முல்லைத்தீவு பகுதி முஸ்லிம் விவசாயிகள் ஏற்கனவே குடியேறி வாழ்ந்த பூமி.

இதில் குடியேறச் சென்ற முஸ்லிம்களை சில அரசியல்வாதிகள் மக்களைத் துாண்டி விட்டு மறித்தனர். அதேபோன்று மன்னார், விடத்தல்தீவு, சன்னார் காணி அங்குள்ள முஸ்லிம்கள் வாழ்ந்து பயிர் செய்த காணி. இக்காணி மாவீரர் குடும்பங்களுக்கும் வேறு மாவட்ட குடும்பங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டு அவர்கள் குடியமர்ந்து வாழ்ந்து வருகின்றனர். இக்காணிக்கருகில் முஸ்லிம்கள் குடியமர்வதை சில தமிழ் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். சிலாவத்துறையிலும் இவ்வாறான ஒரு சம்பவம் நிகழ்ந்தது. முஸ்லிம் குடியேற்றத்துக்கு இடையூறு செய்யப்பட்டது.

இத்தகைய பிரச்சினைகளை ஆராய்ந்து முஸ்லிம்களுக்கு நீதி வழங்காமல் தமிழ் தலைமைகள் மெளனம் சாதித்தமை அந்தச் சமூகத்துக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தியது.

வன்னி மாவட்ட எம்.பியும் அமைச்சருமான றிசாட் மட்டுமே முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்டு வந்த அநீதி, இம்சைகளைப் பற்றி வாய்திறந்து பேசினார். தனது கண்டனத்தைத் தெரிவித்தார். மீள்குடியேறும் முஸ்லிம்களை ஆதரித்து அரவணைக்குமாறு பாராளுமன்றத்திலும் செய்தியாளர் மாநாட்டிலும் அன்பு வேண்டுகோள் விடுத்தார்.

இதன் பின்னர்தான் கொழும்பில் நடந்த ஒரு மாநாட்டில் தமிழ் தலைவர் சுமந்திரன் அவர்கள் புலிகள் வடபுல முஸ்லிம்களை விரட்டியமை ஓர் இனச்சுத்திகரிப்பு நடவடிக்கை என பகிரங்கமாகத் தெரிவித்தார். அவரின் நேர்மையான, நீதியான அங்கீகாரக் கூற்றை முஸ்லிம்கள் நன்றியுடன் பாராட்டினர்.

அமைச்சர் றிசாட்டின் ஏற்பாட்டிலே தமிழ் தலைமைகளுக்கும் முஸ்லிம் தலைமைகளுக்கும் இடையிலான ஒரு சந்திப்பு பாராளுமன்றத்தில் இடம் பெற்றது. இந்த சந்திப்பிலே எம்.பிக்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ. சுமந்திரன், சரவணபவன், டாக்டர் சிவமோகன், எம்.எம். மஹ்றுாப், இஸாக், எம்.எச்.எம். நவவி, மாகாணசபை உறுப்பினர் ஜனுபர், பிரதியமைச்சர் அமீரலி, மற்றும் கலாநிதி அனீஸ், மெளலவி சுபியான் ஆகியோர் பங்கேற்று தமது கருத்துக்களை தெரிவித்தனர். இன நல்லுறவை வலியுறுத்திப் பேசினர். கடந்தகால தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டும் என அமைச்சர் றிசாட் வலியுறுத்தியதோடு அன்பான வேண்டுகோளும் விடுத்தார். பரஸ்பர சுமூக நிலையில் கலந்துரையாடல் இடம் பெற்றது.

பின்வரும் பிரச்சினைகளுக்கு

முடிவு காண்பதாக தீர்மானம்

நிறைவேறியது.

வடபுல முஸ்லிம்களின் காணிப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்.

இரு சாராரும் இணைந்து காணிப்பிரச்சினைகளை இனம்காண்பதென்றும் தீர்மானிக்கப்பட்டது.

ஒரு மாதத்துள் நடைபெறும் சந்திப்பில் உரிய தீர்வுகளை தயாரிப்பதென்றும் பேசப்பட்டது.

அதிகாரப்பகிர்வு, அரசியலமைப்பில் மாற்றம், எல்லை நிர்ணயம், தேர்தல் முறை மாற்றம் ஆகிய விடயங்களில் எதிர்காலத்தில் இரு சாராரும் இணைந்து செயல்படுவதெனவும் தீர்மானிக்கப்பட்டது.

சுஐப் எம் காசிம்

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.