புத். 67 இல. 50

மன்மத வருடம் கார்த்திகை மாதம் 26ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஸபர் பிறை 29

SUNDAY DECEMBER 13, 2015

 

 

சில மனிதர்களும் சில நியாயங்களும்

சில மனிதர்களும்

சில நியாயங்களும்

இந்த செய்தி துக்கமானதுதான். யாருமே எதிர்பார்க்காத செய்தி. மகேந்திரத்தின் தம்பியின் மனைவி மரணமானதுதான். இதை எப்படித் தகப்பனுக்குச் சொல்வதென்று புரியாமல் தவித்தாள் ஆதித்யா. அப்பாவால் இதைத் தாங்கிக் கொள்ள முடியுமா என்றெல்லாம் பதறினாள். ஆனால் சொல்லித்தானே ஆகவேண்டும். எல்லோரும் அவளையே பார்த்துக் கொண்டிருந்த னர்.

ஆரணி மெதுவாக அக்காவின் பக்கமாக வந்தாள். ஆரணியின் மனதில் ஏதோ தாஸைப் பற்றியதாக இருக்குமோ என்ற சந்தேகம் இருந்தது. அதனால் தமக்கைக்கு அருகில் வந்து அவளையே பார்த்தாள். ஆதிக்கும் அது புரிந்தது. இதைத் தவிர்ப்பதற்காக தொலைபேசி இலங்கையிலிருந்துதான் வந்தது என்றாள். இந்தச் செய்தி ஆரணியின் சந்தேகத்தைத் தீர்த்து விட்டது. மற்றவர்களை இன்னும் வியப்பிலேயே வைத்திருந்தது.

“ஆரம்மா போன் பண்ணினது?” என்று மகேந்திரம் கேட்டார்.

சிறிது நேரம் மௌனம்.

“சித்தப்பா போன் பண்ணினவர்”

“ஏன் என்னவாம்?”

ஆதித்யாவின் கண்கள் இதற்குமேல் தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் காட்டிக் கொடுக்க ஆரம்பிக்க “சினனம்மா ”என்றாள்.

அந்த இடம் நிசப்தமாகிவிட்டது.

மகேந்திரம் சிலையாக இருந்தார். அவர் எதுவும் கூறவில்லை. நிலத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் எதிர் பார்க்காத செய்திதான். ஆரணியும் ஆதித்யாவும் தகப்பனுக்கருகில் சென்று ஆதரவாக நின்று கொண்டனர். ஆதித்யா தகப்பனின் தலையை மெதுவாகத் தடவி விட்டுக் கொண்டாள். அவளின் கைகளைப் பற்றிக் கொண்ட மகேந்திரம் மெதுவாக அழுதார்.

அங்கிருந்த எல்லோர் கண்களிலும் கண்ணீர் துளிர்த்தது.

“அவ ஒண்டும் வருத்தமாயும் இருக்கேல்லை. சும்மா அடிக்கடி வயித்துக்குள்ளை நோகு தென்று சொல்லிறவ” என்று சொல்லும்போது அவர் குரல் தளதளத்தது.

ஒரு இலக்கத்தை ஆதியிடம் கொடுத்து “இந்த நம்பருக்கு போன் பண்ணம்மா என்றார்.

ஆதியூம் போன் பண்ண மறுகரையில் மகேந்திரத்தின் தம்பி நாகேந்திரம் தான் எடுத்தார். எடுத்தவூடன் அவர் அழத் தொடங்கிவிட்டார் ஆதித்யா போனை தகப்பனின் கையில் கொடுத்து விட்டு ஒதுங்கிக் கொண்டாள்.

மறுபக்கத்தில் அழுகைக் குரல் கேட்டுக் கொண்டிருந்தது.

“சரி இப்ப அழுகையை விட்டிட்டு நடந்ததைச் சொல்லு” என்று அவர் கூறிய தோரணை ஆதிக்கு வியப்பாகவே இருந்தது. தகப்பனும் சேர்ந்து அழப் போகிறார் என்றே அவள் நினைத்தாள் ஆனால் நடந்ததோ வேறாக இருந்தது.

“ இப்ப நீ என்ன கொழும்பிலையே நிற்கிறாய்.”

ஆதி பக்கத்தில் வந்து ஸ்பிக்கரைத் தட்டிவிட்டாள்.

“ முதலிலை அவ வயித்துக்குள்ளை குத்துது என்றுதான் சொன்னவ. அங்க வவுனியாவிலை கொண்டு போய்க் காட்ட ஏதோ மருந்து குடுத்தவங்கள். அது குறையேல்லை. இன்னும் கூடத் தொடங்கியிட்டுது. திரும்பக் கொண்டு போக கொழும்புக்குக் கொண்டு போகச் சொல்லியிட்டாங்கள். உடன கொண்டு வந்திட்டன் இஞ்ச நவலோகாவூக்குத்தான் கொண்டு வந்தனான். இவங்கள் அவவின்ரை வயித்துக்குள்ளை ஏதோ கட்டி இருக்குதெண்டு ஒப்பறேசன் செய்யவேணுமெண்டவங்கள். அதுக்கும் நான் ஓமெண்டு சொல்லி ஒப்பறேசனும் நடந்து முடிஞ்சு கொஞ்ச நேரத்திலை திடீரெண்டு வலிவந்து அவ போயிட்டா' என்று சொல்லி அழத் தொடங்கி விட்டார்.

“சரி சரி அழவேண்டாம். வரவேண்டியது வந்தே தீரும். இனி வரவேண்டியதைப்பார். காசு கையிலை வைச்சிருக்கிறியே.” என்று கேட்டார்.

இத்தனைக்கும் எல்லாரும் மகேந்திரத்தையும் நாகேந்திரத்தையும் கவனித்தார்களே யொழிய மதிவதனியைப் பற்றிச் சிந்திக்கவேயில்லை.

விசும்பல் சத்தம் அறைக்குள் வரத்தான் எல்லோரும் திடுக்கிட்டனர்.

நாகேந்திரத்தின் மனைவி மதிவதனியின் கூடப்பிறந்த சகோதரி என்பதை அறவே யாரும் சிந்திக்கவில்லை. ஆரணி அறைக்குள் ஓடிப்போக அவளைத் தொடர்ந்து மற்றவர்களும் ஓடிப்போனார்கள். அறைக்குள் மதிவதனி விக்கி விக்கி அழுது கொண்டிருந்தாள்.

ரெலிபோனை எடுத்த ஆதி காரியத்தில் இறங்கினாள்.

“ சித்தப்பா நான் ஆதித்யா கதைக்கிறன். உங்களுக்குக் காசு அனுப்பிறதெண்டால் எப்பிடி அனுப்பிறது.”

“ என்ரை எக்கவுண்டுக்கு கொஞ்சக் காசு அனுப்பி வையம்மா.” என்று கூறிவிட்டுத் தன்னுடைய விபரங்களைக் கொடுக்க அவற்றைக் குறித்துக் கொண்ட ஆதி உடனே காரை எடுத்துக் கொண்டு வங்கியை நோக்கிச் சென்றாள்.

இங்கே வீட்டில் மதிவதனியை யாராலும் தேற்ற முடியவில்லை. ஓவென்று அழுது

கொண்டிருந்தாள். கூடப் பிறந்த இரத்தம் அல்லவா.

“ அவ அழட்டும் விடுங்கோ. அழுகை ஒண்டாலைதான் துயரம் முழுவதையும் வெளியில் கொட்டமுடியும்” என்று மகேந்திரம் கூறினார்.

வீடு ஒரே சோகமயமாக இருந்தது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.