புத். 67 இல. 50

மன்மத வருடம் கார்த்திகை மாதம் 26ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஸபர் பிறை 29

SUNDAY DECEMBER 13, 2015

 

 
சவுதி சட்டங்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது

சவுதி சட்டங்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது

வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துக்கோறள

​ெவளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் முறையாகப் பதிவு செய்துவிட்டுத் தொழிலுக்குச் செல்வோர் தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்பட்டு, அவர்கள் நலன் சார்ந்த நடவடிக்ைககள் மேற்கொள்ளப்படும் என்கிறார் தலதா அத்துக்கோறள. பதினான்கு இலட்சம்பேரில் சுமார் எட்டு இலட்சம்பேர் மட்டுமே பதிவுசெய்துகொண்டுள்ளதாகக் கூறுகிறார்.

வேலைவாய்ப்பு பணியகத்தின் சில அதிகாரிகள் ஒரு தொகைப் பணத்தைப் பெற்றுக் கொண்டு சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்குச் செல்ல அனுமதிப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது. அது உண்மையா?

இருக்கலாம். எனக்கும் இதுபோன்ற தகவல் கிடைத்துள்ளது. இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றேன். விசாரணைகளில் யாராவது குற்றமிழைத்தது நிரூபிக்கப்பட்டால் பதவி, தராதரம் பார்க்காமல் சட்ட நடவடிக்கை எடுப்பேன்.

சவூதியில் இலங்கைப் பெண் ஒருவரை கல் எறிந்து கொலை செய்யுமாறு அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் உங்களது அமைச்சு எடுத்த நடவடிக்கை என்ன?

சவூதியில் எமது பெண்ணொருவரை கல்லெறிந்து கொலை செய்யுமாறு வழங்கிய தீர்ப்பு அந்த நாட்டின் சட்டமாகும். அந்த நாட்டின் சட்டங்களுக்கு எதிராக எங்களுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. இலங்கையில் ஒருவர் தவறு செய்தால் எமது நாட்டின் சட்டப்படியே அதற்குரிய தண்டனை வழங்கப்படும். அதேபோன்றுதான் வெளிநாடுகளில் அந்தந்த நாடுகளின் சட்டத்துக்கமையவே குற்றங்களுக்கான தண்டனைகள் வழங்கப்படுகின்றன, என்றாலும் எமது நாட்டு பெண்ணுக்கு வழங்கப்பட்டிருக்கும் தண்டனை குறித்து, நாங்கள் மேன்முறையீடு செய்திருக்கின்றோம். அத்துடன் எங்களால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் இது தொடர்பில் எடுத்து வருகின்றோம். இதற்காக வெளிவிவகார அமைச்சும் எங்களுக்கு முடியுமான உதவிகளைச் செய்து வருகின்றது.

இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்ட பெண் குறித்த சரியான விபரத்தைக் கூற முடியுமா?

ஆம். இந்தப் பெண் கொழும்பு மருதானையைச் சேர்ந்தவர். இவர் 2013 ஆம் ஆண்டில்தான் சவுதி அரேபியாவுக்கு வீட்டுப்பணிப்பெண்ணாகச் சென்றுள்ளார். 2014 ஏப்ரல் மாதத்தில் தான் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடந்த மார்ச் மாதம் 9 ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது.இதன் அடிப்படையில் குறித்த பெண் தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை 4 தடவைகள் ஒப்புக்கொண்டுள்ளார். இறுதியாக கடந்த ஏப்ரல் மாதம் இடம்பெற்ற வழக்கு விசாரணையின்போது குற்றத்தை ஏற்றுக் கொண்டதன் பிறகுதான் அவருக்கான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்தத் தீர்ப்புக் குறித்து இலங்கைக்கு அதாவது தங்களது அமைச்சிற்கு எப்போது தெரிய வந்தது?

இதுதொடர்பாக முதலில் அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சுக்கு சவுதி நீதிமன்றம் ஜூலை 6 ஆம் திகதிதான் அறிவித்திருக்கின்றது.

அதன் அடிப்படையில் இது தொடர்பாக இலங்கை தூதரகத்துக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த நாள் முதல் எமது தூதரகம் வழக்கு தொடர்பாகவும் மேற்கொள்ள வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆராய்ந்ததன் பின்னர் கடந்த ஒக்டோபர் மாதம் 25 ஆம் திகதி மேன்முறையீடொன்றை அந்த நாட்டின் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு அனுப்பிவைத்துள்ளோம். இதற்கான அனைத்துச் செலவினங்களையும் எமது அமைச்சு பொறுப்பேற்று மேற்கொண்டு வருகின்றது. அத்துடன் நாங்கள் செய்திருக்கும் மேன்முறையீடு அந்த நாட்டின் மேன்முறையீட்டுச் சபையினால் ஆராயப்படும்.

வெளிநாடுகளில் தொழிலுக்குச் செல்பவர்கள் ஏதேனும் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் போது அவர்களைப் பாதுகாப்பதற்கு எவ்வாறான நடவடிக்கைகளை எடுத்துள்ளீர்கள்?

வெளிநாடுகளுக்கு தொழிலுக்குச் செல்பவர்கள் எமது வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்துவிட்டுச் சென்றால் அவர்கள்அங்கு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும்போது அந்த நாட்டில் இருக்கும் எமது தூதரகங்கள் மூலம் அது தொடர்பாக ஆராய்ந்து நடவடிக்கை எடுப்போம். அத்துடன் அவர்களுக்கு உயிர் ஆபத்து ஏற்பட்டால் அல்லது வேறு விபத்துக்களில் அங்க அவயவங்களை இழந்தால்அவர்களுக்கு எமது ஊழியர் பாதுகாப்பு நிதியிலிருந்து இழப்பீடுகளைப் பெற்றுக் கொடுப்போம். ஆனால் இரண்டுவருட ஒப்பந்தகாலத்திற்குள் இவ்வாறான நிலை ஏற்பட்டால்தான் அதற்கான முழுத்தொகையும் வழங்கப்படும். இரண்டு வருட ஒப்பந்த காலத்துக்கு மேல்அவர்கள் தொடர்ந்து அங்கு தொழில் புரிவதென்றால் தங்களது ஒப்பந்த காலத்தைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் அவரது இழப்பீட்டுத் தொகையை முழுமையாகப் பெற்றுக் கொடுப்போம். இல்லாவிட்டால் அவர்களது நிலைமையை கருத்திற் கொண்டு குறிப்பிட்ட ஒரு தொகையே வழங்கப்படும்.

போலி வெளிநாட்டு முகவர் நிறுவனங்கள் நாட்டில் அதிகரித்து வருகின்றன.இவற்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுத்துள்ளீர்களா?

போலி முகவர் நிறுவனங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சட்ட மூலத்தில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கின்றது. 1985 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சட்டங்கள்தான் இன்னும் அமுலில் இருக்கின்றன. 1985ஆம் ஆண்டில் இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு 50 – 60 ஆயிரம் பேரே சென்றுள்ளனர். தற்போது ஒருவருடத்திற்கு மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் செல்கின்றனர். இவ்வாறான நிலையில் இதற்கேற்றவாறு சட்டங்களும் மாறவேண்டும்.

தற்போது 14இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வெளிநாடுகளில் தொழில் புரிகின்றனர். அவர்களில் சுமார் 8 இலட்சம் பேர் அளவிலேயே எமது பணியகத்தில் பதிவு செய்துவிட்டுச் சென்றுள்ளனர். அதிகமானவர்கள் போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து அல்லது சுற்றுலா விசா மூலம் சென்று அங்குப் பணிப்பெண்களாக பணிபுரிகின்றனர்.

இவர்கள் பணிபுரியும் இடங்களில் ஏதேனும் சிக்கல்களுக்கு ஆளாகும் போது சட்ட ரீதியில் எங்களுக்கு எந்த உதவியும் செய்ய முடியாது.

அத்துடன் எமது வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சில அதிகாரிகள் இவர்களிடமிருந்து ஒரு தொகைப் பணத்தைப் பெற்றுக் கொண்டு வெளிநாடுகளுக்குச் செல்ல அனுமதிப்பதாக எனக்குத் தகவல் கிடைத்துள்ளது. இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றேன்.விசாரணைகளில் யாராவது குற்றமிழைத்தது நிரூபிக்கப்பட்டால் பதவி தராதரம் பார்க்காமல் சட்ட நடவடிக்கை எடுப்பேன்.

எதிர்காலத்தில் உங்களது அமைச்சால் மேற்கொள்வதற்கு ஏதேனும் திட்டங்கள் இருக்கின்றதா?

ஆம், பல திட்டங்கள் இருக்கின்றன. குறிப்பாக இரண்டு வருடங்களுக்கு மேல் வெளிநாடுகளில் பணிபுரிபவர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவது குறித்து ஆராய்ந்து வருகின்றோம். அத்துடன் அவர்களின் பிள்ளைகளுக்குப் புலமைப்பரிசில் மற்றும் பல நலநோன்பு திட்டங்களையும் அறிமுகப்படுத்த இருக்கின்றோம். மேலும் வெளிநாடுகளுக்குச் செல்லும் பணியாளர்களின் அடிப்படைச் சம்பளத்தை 45ஆயிரம் ரூபாவாக நிர்ணயிக்க வேண்டுமென தற்போது வரவு செலவுத் திட்டத்தில் பிரேரணை ஒன்றை முன்வைத்துள்ளேன்.

மேலும் பணிப்பெண்களாக வெளிநாடுகளுக்குச் செல்லவிருப்பவர்களுக்கு இங்கு வழங்கப்படும் 21 நாள் பயிற்சிக் கால எல்லையை மூன்று மாதங்கள் வரை நீடிப்பது போன்ற திட்டங்களையும் எதிர்காலத்தில் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். அத்துடன் எமது வெளிநாட்டு வேலைவாய்ப்பு

பணியகத்தில் பலர் நீண்ட காலம் பணிபுரிகின்றனர். அவர்களுக்கு இதுவரை காலமும் நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை. அதற்குத்தேவையான நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.