புத். 67 இல. 50

மன்மத வருடம் கார்த்திகை மாதம் 26ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஸபர் பிறை 29

SUNDAY DECEMBER 13, 2015

 

 

கிழிந்த ஆடை (சுயசரிதை)

கிழிந்த ஆடை (சுயசரிதை)

அன்றொரு நாள் நான் கடைக்குச் சென்று கொண்டிருந்தேன். அப்போது பாதை ஓரத்தில் இருந்த குப்பை மேட்டில் இருந்து ஏதோ சர சர வென்று சத்தம் கேட்டது. சத்தம் வந்த திசையை திரும்பிப் பார்த்தேன். ஒன்றையும் காணவில்லை. மீண்டும் நடக்க ஆரம்பிக்கும் போது அதே சத்தம் மீண்டும் கேட்டது. நான் அந்த இடத்துக்குச் சென்று பார்த்த போது “என்ன ஆச்சரியம்! கிழிந்து மங்கிப்போன துணியொன்று பேச ஆரம்பித்தது. நான் இப்போது யாருக்கும் பயன்படாத பழந்துணியாக கிடக்கிறேன். என்னுடைய பழைய வாழ்க்கையை கூறுகிறேன் கேள்" என்று தனது பேச்சைத் தொடர்ந்தது.

நான் இந்தியாவில் சென்னையிலுள்ள ஓர் ஆடைத் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்டேன். அங்கு என்னைப் போல் பல வகையான துணிகள் உற்பத்தி செய்யப்பட்டன. பின் எங்களையெல்லாம் பொதி செய்து லொறிகளில் ஏற்றி துறைமுகத்துக்கு கொண்டு சென்றார்கள். அங்கிருந்து கப்பல் மூலம் இலங்கையை வந்தடைந்தோம். அதன் பின் வாகனங்கள் மூலம் உரிய கடைக்காரர்களுக்கு சென்றடைந்தோம். அவர்கள் எங்களை கண்ணாடி பெட்டிகளில் அழகாக அடுக்கி வைத்தார்கள்.

அன்று ஒருநாள் ஆசிரியை ஒருவர் தனது மகளை கூட்டிக் கொண்டு அக்கடைக்கு வந்தார். அவர் பலவகையான துணிகளை பார்த்து விட்டு செல்லும் போது சிறுமியின் கண்ணில் நான் அழகாக தெரிந்தேன். அவள் என்னை வாங்கித் தரும்படி அம்மாவிடம் கேட்டாள். அம்மாவும் வாங்கிக் கொடுத்தார். பின் வீட்டுக்கு வந்தவுடன் என்னை தையல்காரியிடம் கொடுத்து அழகான சட்டையொன்றை தைத்துக் கொடுத்தார். அவளும் குளித்து விட்டு என்னையே விரும்பி அணிவாள்.

இவ்வாறு ஒருநாள் என்னைக் கழுவி அம்மா காய வைத்திருந்தார். சிறுமி மாலை நேர வகுப்பிற்கு சென்று வீடு வந்து சேரும் போது திடீரென மழை பெய்வதற்கான அறிகுறி தென்படவே அவளும் ஓடிவந்து என்னை எடுக்கும் போது கம்பியில் சிக்கிப்பட்டு கிழிந்து விட்டேன். என்னைப் பார்த்ததும் அவளுக்கு அழுகையே வந்து விட்டது. அவள் அழும் சத்தம் கேட்டு அம்மா வெளியே வந்தார். அவளை சமாதானப்படுத்தி என்னை வீசி விட்டார். நான் இப்போது என்னுடைய கடைசி நாட்களை எண்ணி கொஞ்சம் கொஞ்சமாக இறந்து கொண்டிருக்கிறேன் என்று தனது பேச்சை முடித்துக் கொண்டது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.