புத் 67 இல. 47

மன்மத வருடம் கார்த்திகை மாதம் 06ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஸபர் பிறை 09

SUNDAY NOVEMBER 22 2015

 

 
பலஸ்தீன நகரும் பரிஸ் திடல்களும்

பலஸ்தீன நகரும் பரிஸ் திடல்களும்

அப்பாவி உயிர்களினை அழித்து நிற்கும்

அநியாயக் கரங்களினை எண்ண நெஞ்சு

இப்பாரில் இவர்களினை அழிப்பதற்கு

இளையோரை ஒன்றாக்கி எழுந்துயிங்கே

துப்பாக்கி இல்லாத தேசமொன்றை

துணிந்திங்கே உருவாக்க வேண்டுமென்ற

நப்பாசை தனையிங்கு எண்ணுதன்றோ

நானிலத்தில் அமைதிவர இதுவே போதும்!

பலஸ்தீன பூமியிலே தினமும் பெய்யும்

பாதகரின் குண்டுமழை தன்னாலிங்கு

பலநூறு உயிர்களென சிதறி வீழும்

பரிதாப கதை தன்னை காணும் கண்கள்

அழுதிங்கே மாய்கிறது குற்றம் செய்யா

அப்பாவி குழந்தைகளே துண்டு துண்டாய்

குலைந்திங்கே வீழ்ந்தழியும் செயலைச் செய்வோர்

குருடர்தான் விழியிருந்தால் செய்யமாட்டார்!

எழிலுக்கே மறுபெயராய் ஆன நல்ல

ஏற்றநிலை பரிஸ்தனிலே வெடித்த குண்டால்

அழிவுதனை கண்டோர்கள் யாருமில்லை

அப்பாவி சனங்கள்தான்! பாவம் மக்கள்!

பழிதீர்க்கும் எண்ணங்கள் மலிந்த தாலே

பகைமைதான் வான்முட்ட வளர்ந்து நிற்கு!

இழிவான செயல்கான பூமிதன்னின்

இயற்கையதும் குமுறிடுதே உலகமெல்லாம்!

மதங்களது பெயராலே மல்லுக்கட்டும்

மடையர்கள் மலிந்திட்ட பூமியாச்சி

இதயங்கள் இன்புற்று வாழுதற்கே

இலங்கிடுது மதங்களெலாம் பூமி தன்னில்!

இதமான வாழ்க்கைக்கு பாதைகாட்டும்

இனிமைமிகு மதங்களது பெயரை வைத்து

சிதைக்கின்றார் உலகமிதை யுத்தத்தாலே

சீரழிந்து போகிறது தேசம் எல்லாம்!

உயிர்களினை கொல்லுஎன உதித்து வந்த

ஒரு மதமும் சொல்லிவில்லை! மாறாயிங்கு

பயிர்தன்னின் வேர்தன்னை அறுப்ப தைப்போல்

படுகொலையே செய்கின்றார் மதத்தின்பேரால்!

வயிறுதனை வளர்க்கின்ற கூட்டம் அங்கே

வன்தனத்தில் இறங்கியதால் உலகம் தன்னில்

கயிறாக போச்சுதன்றோ மனிதவாழ்க்கை

கண்டாரா குண்டுவைத்து பலனையிங்கு!

குண்டுக்குத் தெரிகிறதா மதங்கள் சாதி

குருதிக்கும் தெரியாது ஜாதி பேதம்!

சண்டைக்குள் சிக்கிநிதம் அழிந்து போகும்

சடலத்துள் தெரிகிறதா மதங்கள் ஜாதி?

மண்டைக்குள் மதவாதம் இனவாதத்தை

மடித்தழகாய் வைத்துள்ள கூட்டத்தாலே

வன்மையதை எண்ணாத மனுசமெல்லாம்

வழிதனிலே அழிகிறதே தொகை கணக்கில்!

விளையாடும் திடல்களிலே, இசை நிகழ்வில்

விரும்பியபொருள் வாங்குபின்ற சந்தை தன்னில்

அழைத்துத்தான் செல்லுகின்ற பஸ் நிலையம்

அணிவகுத்து நிற்கின்ற ரயிலில் மற்றும்

களைத்துவரும் ஆத்மாக்கள் ஒன்று கூடும்

களியாட்ட மையங்கள் இவற்றி லெல்லாம்

தலைகள்பல சாய்கிறதே குண்டு தன்னால்

தடுத்துவிட யுத்தமில்லா தேசம் வேண்டும்!

ஜெருஸலமாய் ஆனாலும் தினமும் நன்றாய்

ஜெபமதனை செய்கின்ற பரிஸ் என்றாலும்

தெருவினிலே குண்டதனை வெடிக்கச் செய்தால்

தேகமென விழுவதெல்லாம் மனிதன் தானே!

சிறுமைதனை தாங்கிநிதம் செய்யும்கெட்ட

செயல்தன்னால் மனித உயிர் வீணே வீழும்!

கருமையினை இதயத்தில் இருந்து மெல்ல

கழட்டிவிட அருள்தன்னை தா இறைவா!

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.