புத் 67 இல. 47

மன்மத வருடம் கார்த்திகை மாதம் 06ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஸபர் பிறை 09

SUNDAY NOVEMBER 22 2015

 

 
நான் ஒரு சாதாரண மனிதன்: சொல்வதைத்தான் செய்வேன் செய்வதைத்தான் சொல்வேன்

நான் ஒரு சாதாரண மனிதன்: சொல்வதைத்தான் செய்வேன் செய்வதைத்தான் சொல்வேன்

சி.வி. விக்னேஸ்வரன் வாரமஞ்சரிக்கு செவ்வி

அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தீர்கள். இதற்கான முக்கியமான காரணம் என்ன? அச்சந்திப்பு தங்களுக்குத் திருப்தியளித்ததா?

உண்மையில் இச் சந்திப்புக்கு முக்கியமான காரணங்கள் எதுவுமிருக்கவில்லை. இதுவொரு வழமையான சந்திப்பாகவே அமைந்தது. ஜனாதிபதியுடனான இந்தப் பேச்சுவார்த்தைகள் வழமையாக திருப்தி அளிப்பதாகவே அமையும். அனைத்து விடயங்களுக்கும் சம்மதம் தெரிவிப்பார். சந்தோசமாக உரையாடுவார்.

ஆனால், எந்த அளவுக்கு எமக்கு நன்மை கிடைக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். சில விடயங்களைப் பொறுத்தவரை அவர் கட்டாயம் நடவடிக்கைகளை எடுப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.

உதாரணமாக, காட்டை அழித்து அத்துமீறிய குடியேற்றங்கள் இடம்பெறுவது தொடர்பில் அவரிடம் நாங்கள் தெரிவித்திருந்தோம். அதற்கு, அது தொடர்பான விபரங்களை தனக்கு வழங்கினால் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக எமக்குத் தெரிவித்திருந்தார். இவ்வாறு பல்வேறு விடயங்கள் பற்றி நாங்கள் தெரிவித்த போது, அனைத்து விடயங்கள் தொடர்பிலும் அவர் குறிப்பெடுத்துக்கொண்டார்.

இச் சந்திப்பில் தமிழ் அரசியல் கைதிகள் விடயம் தொடர்பாக ஜனாதிபதியிடம் தங்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு ஜனாதிபதி சில உறுதிமொழிகளை வழங்கினார். ஆனால் அவற்றை நிறைவேற்றவில்லையே?

இல்லை. அது தவறு அவர் அளித்த பொதுமன்னிப்பு என்ற உறுதிமொழி அவரது அமைச்சரவையில் ஆராய்ந்த பின்னரே அறிவிக்கப்படும். நாம் எந்த விடயத்திலும் அவசரப்படக் கூடாது. பொறுமையாகவும், விவேகத்துடனும் செயற்பட்டால் சகல விடயங்களிலும் நாம் வெற்றியைக் காணலாம். நாம் சந்தித்த பின்னரும் மேலும் எட்டுக் கைதிகள் பிணையில் விடுவிக்கப் பட்டுள்ளனர். இவ்வாறே இன்னும் பலர் நிச்சயம் விடுவிக்கப்படுவர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் உங்களுக்கும் இடையில் ஏதாவது கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றனவா? அப்படியாயின் அதற்கான காரணம் என்ன?

உண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் என்னுடைய கருத்துக்கள் சற்று வித்தியாச மானவை என்பது அனைவருக்கும் தெரியும். ஆகவே, =கருத்து வேற்றுமைகள் இருக்கின்றன. ஆனால், அதனைப் பேசித் தீர்க்கவுள்ளோம். இந்த விடயம் தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுடன் நான் இதுவரை கலந்துரையாடவில்லை. ஆனால், இந்த விடயத்தைப் பேசித் தீர்க்கவேண்டுமென்று அவருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளேன்.

அதற்கு அவரிடமிருந்து ஏதாவது பதில் கிடைத்ததா?

இல்லை. அவர் இந்தியாவிற்குச் சென்றிருக்கிறார். அவர் நாடு திரும்பியதும் அது பற்றிக் கலந்துரையாடப்படும். உண்மையில் நான் ஒரு கட்சியை பிளவுபடுத்துவதற்கோ அல்லது வெளிவேறுவதற்கோ, வேறொன்றை ஸ்தாபிப்பதற்கோ முயற்சிக்கவில்லை.

அவ்வாறான எண்ணங்கள் எதுவும் என்னிடம் இல்லை. ஆனால், கட்சியில் நான் இவ்வாறுதான் நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றபோது அவ்வாறு நடக்கவில்லை என்றால், அது தொடர்பில் கேட்டு அறிந்து கொள்வது என்னுடைய கடமையாகும். அது என்னுடைய உரிமையுமாகும். அதனைத்தான் நான் செய்கின்றேன்.

தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலை தொடர்பில் உங்களைத்தான் நம்பியிருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள். அதேவேளை கூட்டமைப்பின் தலைவரைக்கூட இவ்விடயத்தில் நம்பவில்லை என்பதாகவும் தெரிவித்திருக்கிறார்கள். இது குறித்து?

இது குறித்து நான் கூறுவதற்கு ஒன்றுமில்லை. அது அந்தக் கைதிகளின் கருத்து. அதனால் இது குறித்து என்னால் எதனையும் கூறமுடியாது. ஏனெனில், என்னைப் பொறுத்தவரை நான் கட்சி ரீதியாகவோ அல்லது வேறு ஏதோவொரு ரீதியாகவோ ஒன்றை மறைத்தோ அல்லது முரண்பாடுடைய விதத்திலோ கதைக்கவேண்டிய அவசியம் எனக்கு இல்லை.

நான் ஒரு சாதாரண மனிதன். சொல்வதைத்தான் செய்வேன். செய்வதைத்தான் சொல்வேன். ஆகவே, இந்த வகையில் பார்க்கின்றபோது நான் ஒரு அரசியல்வாதியல்ல. நான் சாதாரணமாக இருப்பதால் என்னை அவர்கள் நம்புகின்றார்கள். அறிவுபூர்வமான அரசியல்வாதிகளை அவர்கள் நம்பாமல் இருக்கலாம். விடயம் அவ்வளவுதான். இதைத்தான் என்னால் கூறமுடியும்.

பிணை வழங்குவதாக அறிவிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளுடம் 10 இலட்சம் ரூபா சரீரப் பிணை கோரப்பட்டுள்ளது. இது கடுமையான நிபந்தனையல்லவா?

பண வசதி படைத்த இருவர் பிணையாளிகளாக கையொப்பமிட வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும். மேலிடத்திலிருந்துவந்த உந்துதலின் பெயரிலேயே தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டார்கள்.

எனவே, இந்த நிபந்தனை நீதிபதிகளின் மனோநிலையின் அடிப்படையிலேயே வழங்கப்பட்டிருக்கக்கூடும் என்று நான் கருதுகின்றேன். பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஊடகங்களில் உங்களை கடுமையாகச் சாடி வருகிறார். இதற்கு காரணம் என்ன?

இதுகுறித்து அவரிடம் தான் காரணத்தைக் கேட்க வேண்டும். ஆனாலும் அவரது விமர்சனத்திற்கான பதிலை நான் ஏற்கனவே ஊடகங்கள் மூலமாக வெளியிட்டுள்ளேன். இனி அவர் அமைதியாக இருப்பார் என நினைக்கிறேன். உண்மையில் கூறப்போனால் சுமந்திரன் என்னுடைய மாணவனாக இருந்தவர். அவரிடம் எனக்கு நம்பிக்கையும், அன்பும் உள்ளது. இப்பொழுதும் உள்ளது.

இதற்கு அடிப்படைக் காரணம் என்று நான் காண்பது. அவருக்கு கொழும்பு சார்ந்த ஒரு சிந்தனை இருக்கின்றது. ஒருவேளை நான் கொழும்பிலேயே தொடர்ந்து இருந்திருந்தால் என்னுடைய சிந்தனையும் அவருடைய சிந்தனை போன்று அமைந்திருக்கும்.

கொழும்புச் சிந்தனைக்கும் வடக்கு, கிழக்கில் இருக்கும்போது ஏற்படுகின்ற சிந்தனைக்கும் வித்தியாசம் இருக்கின்றது. அதனை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். எங்களுக்குள் எந்தவிதமான பாரிய பிரச்சினைகளும் இல்லை.

சிந்தனைகளில், நோக்கங்களில் அல்லது பார்க்கின்ற விதத்தில் எங்களுக்குள் வித்தியாசங்கள் இருக்கத்தான் செய்கின்றன. உதாரணமாக எமக்கு அருகில் பெரும்பான்மையின் நண்பர்கள் இருக்கும்போது, அவர்களைச் சாடி எங்களால் எதனையும் குறிப்பிட முடியாது. ஏனெனில், அவர்கள் எங்களது நண்பர்கள். ஆகவே, எங்களுடைய எண்ணங்கள், கருத்துக்கள் மற்றும் பேசும் விதங்கள் என்பன சிறிது கட்டுப்பட்டுத்தான் காணப்படும்.

ஆனால், எமது மக்களுக்கு மத்தியில் நாங்கள் இருக்கின்றபோது அந்த எண்ணங்கள் அனைத்தும் இல்லாமற்போய்விடும். எமது மக்களின் எண்ணங்களும் பிரச்சினைகளும் நாளாந்தத் துன்பங்களும் எம்மையும் வந்து பாதிக்கின்றன. ஆகவே, இவ்வாறான நிலையில் எமது கருத்துக்களும் வித்தியாசமாகவே காணப்படும்.

நான் அந்தக் கருத்துகள் வித்தியாசமாக இருப்பதைப் புரிந்து கொண்டேன். புரிந்துகொண்ட பின்னர் கொழும்பில் இருக்கின்ற எமது சிந்தனைகள் தவறு என்ற கருத்துக்கு நான் வந்துள்ளேன். அதாவது, கொழும்பைப் பொறுத்தவரை எமது சிந்தனைகளைக் கட்டுப்படுத்தி இப்படிச் செய்தால்தான் சரி என்ற சிந்தனையில் நாங்கள் இருக்கின்றோம்.

உங்களுக்கு மக்கள் செல்வாக்கு அதிகம் உள்ளதாகத் தெரிவிக்கப்படுவதனால் தமிழ்க் கூட்டமைப்பு தங்களை ஒதுக்குவதாக அல்லது தனிமைப்படுத்துவதாக நீங்கள் எண்ணுகிaர்களா? மக்கள் உங்களை விரும்பியேற்றால் கட்சிக்கா மக்களுக்கா முதலிடம் கொடுப்பீர்கள்?

உண்மையில் நான் இவ்வாறெல்லாம் சிந் தித்ததே கிடையாது. நான் இப்பொழுது மக்க ளின் ஒரு பிரதிநிதியாக உருவாக்கப் பட்டுள்ளேன். எனவே, தர்மத்திற்கு அமைய மக்களுக்குச் செய்யவேண்டியதை நான் செய்துகொண்டுதான் இருப்பேன்.

ஏனெனில், ஒரு இவட்சத்து 32 ஆயிரம் வாக்குள் இதுவரை எவருக்குமே கிடைக்கவில்லை என்று கூறப்படுகின்றது. எங்கோ இருந்த எனக்கு அந்த அளவுக்கு வாக்குகளை வழங்கிய மக்களின் எதிர்பார்ப்புகள் எவ்வளவு உள்ளன என்பதை கவனித்துப் பார்க்கவேண்டும். ஆகவே, மக்களின் எதிர்பார்ப்புகள் இவ்வாறு இருக்கும்போது அதனை கொச்சைப்படுத்தவோ, உதாசீனப்படுத்தவோ என்னால் முடியாது.

வடமாகாணத்தில் அண்மைக்காலமாக பாலியல் துஷ்பிரயோகங்களும், மாணவர்கள் மத்தியில் மதுப் பழக்கங்களும் அதிகரிப்பதாக நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள். வடமாகாண சபையால் ஏன் அதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கமுடியாமல் உள்ளது?

வடமாகாண சபையினால் இந்த விடயங்களைக் கட்டுப்படுத்த முடியாமைக்குக் காரணம், எங்களிடம் பொலிஸ் அதிகாரம் இருந்தும் அது வழங்கப்படாமையேயாகும். அதாவது, சட்டப்படி மேல்மட்டப் பொலிஸ் மத்திய அரசின் அதிகாரங்களுக்கு உட்பட்டிருந்தாலும். கீழ்மட்டப் பொலிஸார் எமது அதிகாரங்களுக்கு உட்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் அது நடைமுறையில் தற்போது இல்லை. ஆகவே, நாங்கள் எதனைச் செய்வதாக இருந்தாலும் பொலிஸாருடைய மேல்மட்ட அதிகாரிகளுடன் பேசித்தான் செய்யவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. முன்னர் நான் சிலவிடயங்களில் பொலிஸாருக்கு கட்டளையிட்டபோது அப்போதைய ஆளுநர் அதனை தடுக்கும் வகையில் செயற்பட்டார்.

அண்மையில் முல்லைத்தீவில் உள்ள பிரதேச செயலாளர், ஒருவர் கூறுகையில் வடமாகாண சபை உறுப்பினர்கள், இங்கு தேர்தலில் போட்டியிட்டவர்கள் மாத்திரமே. அவர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. எமக்கு மத்திய அரசாங்கம் தான் கட்டளைகளைப் பிறப்பிக்கவேண்டும் என்று தெரிவித்துள்ளார். இவ்வாறான நிலைமையே வடமாகாணத்தில் காணப்படுகின்றது.

எமக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் பல மீளப்பெறப்பட்டுள்ளன. இதன் விளைவாகவே, வடமாகாண சபையினால் பல பிரச்சினைகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாமல் உள்ளது.

இறுதி யுத்தம் தொடர்பில் இலங்கையில் மேற்கொள்ளப்படவுள்ள விசாரணை சர்வதேச விசாரணைக்கு ஒப்பானது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குறிப்பிட்ட சிலர் கூறியுள்ளனர். இதனை தவறென்றும், இது ஓர் உள்ளக விசாரணை என்றும் விமர்ச்சிக்கப்படுகிறது. இந்த விசாரணை தொடர்பில் உங்கள் கருத்து என்ன?

இது ஒர் உள்ளக விசாரணை என்ற வகையில்தான் அமைந்துள்ளது. அதேவேளை, வெளியிலுள்ள நீதிபதிகளின் பங்களிப்பும் இருக்கும் என்று கூறுவதால் இது ஒரு கலப்பு விசாரணை போன்றும் தெரிகின்றது. இது தொடர்பில் 43 நாடுகளுக்கும் நான் கடிதம் மூலம் விளக்கம் ஒன்றினை அனுப்பியிருந்தேன். அதாவது, உள்ளக விசாரணை என்னும்போது உள்நாட்டு அரசாங்கம் எந்த வகையிலும் தனக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயற்படாது. ஆகவே, வெளிநாடுகளின் கண்காணிப்பு மிகவும் அவசியம்.

அந்த கண்காணிப்பின்போது, வழக்கு நடத்துனர் வெளிநாட்டிலிருந்து வரவேண்டும். ஆனால், வழக்கு நடத்துனருக்கு உதவியாக இருப்பவர்கள் எமது சட்டத்துறை திணைக்களத்தைச் சேர்ந்தவர்களே. அவர்கள் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்ட எமது மக்களுக்குச் சார்பாக செயற்படுவார்கள் என்பது சந்தேகமே. எனவே இந்த விடயத்தை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று 43 நாடுகளுக்கும் நான் கடிதம் மூலம் தெரிவித்திருந்தேன்.

அடுத்ததாக சட்டத்திலும் சிக்கல்கள் ஏற்படும். அதாவது இலங்கைச் சட்டம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சாதகமாக அமையுமா என்பதும் சந்தேகத்துக்குரியதே. உதாரணமாக வடக்கு, கிழக்கு இணைந்திருக்கவேண்டும் என்பது சட்டத்துக்கு அமைவானது. ஆனால், பின்னர் அது இரண்டாகப் பிரிக்கப்பட்டதும் சட்டத்துக்கு அமைவானது என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. எனவே, இவ்வாறான சிக்கல்களும் ஏற்பட வாய்ப்புள்ளது.

அடுத்ததாக வெளிநாட்டிலிருந்து நீதிபதிகளை அழைத்துவந்து உள்நாட்டு நீதிபதிகளுடன் இணைத்து விசாரணை நடத்தும் போது, உள்நாட்டு நீதிபதிகள் குறிப்பிடும் விடயமே வலுவானதாகக் கொள்ளப்படும். ஆகவே, உள்நாட்டு நீதிபதிகளிலும் பார்க்க வலுக்கூடிய வெளிநாட்டு நீதிபதிகள் உள்வாங்கப்படவேண்டும். வெளிநாட்டு நீதிபதிகள் என்று கூறும்போது, அவர்கள் அனைவரும் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு சாதகமாக செயற்படுவார்கள் என்று கூறு முடியாது. உதாரணமாக பாகிஸ்தானைச் சேர்ந்த நீதிபதி ஒருவர் உள்வாங்கப்படும்போது, நிலைமை வித்தியாசப்படும்.

இந்த விடயங்களையும் உள்ளடக்கிய நீண்ட கடிதம் ஒன்றை எழுதி நான் 43 நாடுகளுக்கும் அனுப்பியிருந்தேன். எனவே, தற்போதைய விசாரணையின்போது உலக அரங்கில் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டால் இலங்கை அரசாங்கம் கட்டுப்படவேண்டி இருக்கும்.

இரண்டாவது, வழங்கப்பட்ட இரண்டரை வருடத்தில் மேற்கொள்ளப்பட்ட, மேற்கொள்ளப்படுகின்ற விடயங்களை உலக நாடுகளுக்கு இலங்கை அரசாங்கம் தெரிவிக்கின்ற நிலையை உருவாக்கவேண்டும். ஆனால், இந்த விசாரணை முறை அரசாங்கத்திற்குச் சார்பாகவே அமைந்துள்ளது. கலப்பு நடைமுறை காணப்பட்ட போதும், இதுவொரு உள்ளக விசாரணை முறையேயாகும். இதன்மூலம் தமிழ் மக்களுக்கு எந்தவொரு நன்மையும் கிடைக்காது என்றே நான் கருதுகின்றேன். உலக நாடுகள் இலங்கைக்கு அழுத்தத்தைக் கொடுத்தால் தமிழ் மக்கள் நன்மைகளைப் பெறக்கூடிய வாய்ப்பும இருக்கின்றது என்றும் நான் கூற விரும்புகிறேன்.

 

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.