புத் 67 இல. 47

மன்மத வருடம் கார்த்திகை மாதம் 06ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஸபர் பிறை 09

SUNDAY NOVEMBER 22 2015

 

 

மாகாண அமைச்சரின் முயற்சியால் தைத்திருநாளில் புதிய வீடுகளில் குடியேறவுள்ள மீரியபெத்தை மக்கள்

மாகாண அமைச்சரின் முயற்சியால் தைத்திருநாளில் புதிய வீடுகளில் குடியேறவுள்ள மீரியபெத்தை மக்கள்

மிரியபெத்தை மண்சரிவு அனர்த்தம் இடம்பெற்று ஒரு வருடத்திற்கு மேலாகியும், அரசியல்வாதிகளினால் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற் றப்படவில்லை. இந்நிலையில் ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமானின் தலையீட் டையடுத்து வீடமைப்பு வேலைகள் துரிதப்படுத் தப்பட்டுள்ளன.

2016ம் ஆண்டு தைப்பொங்களுடன், மீரீயபெத்தையில் பாதிக்கப்பட்ட 75 குடும்பங்களுக்கு புதிய வீடுகள் கையளிக்கப்படுமென்ற, மாகாண அமைச்சரின் செய்தி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வீடமைப்பிற்கு ஒதுக்கப்பட்டிருந்த காணிப் பிரச்சினை தீர்க்கப்பட்டு தற்போது போதுமானளவு காணியும் பெறப்பட்டுள்ளது. ஐந்து ஏக்கர் விஸ்தீரனமுள்ள காணியில் 75 தனி வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.

பாதிக்கப்பட்ட 75 குடும்பங்கள் தொடர்ந்தும் இடைத்தங்கல் முகாம்களிலேயே தங்கியுள்ளனர். இக்காலப்பகுதியில் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி, புதிய அரசின் நூறு நாள் வேலைத் திட்டம், தற்போது தேசிய அரசின் கூட்டாட்சி என்ற வகையில் ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டிருந்த போதிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை விமோசனம் கிட்டவில்லை.

இம்மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் இ.தொ.கா.வின் ஏற்பாட்டில் மாதிரி வீடமைப்பு திட்டத்தின் கீழ் சகல வசதிகளுடன் கூடிய 75 வீடுகளை நிர்மாணித்துக் கொடுப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. எனினும் அதன் பின் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தையடுத்து புதிய அரசின் நூறுநாள் வேலைத்திட்டத்தின் கீழ் ஆரம்பமானது.

இக்காலப்பகுதியில் ஏற்கனவே, மாதிரி வீடமைப்புத் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட இடத்தை புதிய ஆட்சியின் மலையக அமைச்சர்கள் விமர்சித்ததுடன், மக்கள்தெனிய தோட்டத்தில் மூன்று ஏக்கர் காணியை ஒதுக்கி மீரியபெத்தையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் அமைப்பதற்கென்று மீளவும் அடிக்கற்கள் நாட்டப்பட்டன. இவ் அடிக்கல் நாட்டு விழாவில் மலையக அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டு வீடுகளை நிர்மாணிப்பதற்கான அடிக்கற்களை வைபவ ரீதியாக நாட்டி வைத்தனர். அவ்வேளையில் மூன்று மாத காலத்திற்குள் வீடுகளை அமைத்துக் கொடுப்பதாகவும் உறுதியளிக்கப்பட்டது.

தற்போது ஒரு வருடத்திற்கும் மேலாகி விட்டது. இவ் வீடமைப்புத் திட்டத்தில் நான்கு வீடுகள் மட்டுமே நிறைவுறும் தருவாயிலுள்ளன. இது தொடர்பாக மலையக கிராமங்கள், தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் பழனி திகாம்பரம் கருத்து தெரிவிக்கையில், குறிப்பிட்ட வீடமைப்புத் திட்டம் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் பொறுப்பிலிருப்பதால் தன்னால் அவ்வீடுகளை அமைக்க முடியாதுள்ளது. அவ்வீடமைப்பு வேலைகளை எனது அமைச்சிடம் ஒப்படைத்தால் குறுகிய காலத்திற்குள் நிறைவு செய்து விட முடியுமென்று கூறினார். அத்துடன் இவ்வீடமைப்புத் திட்டம் குறித்து அமைச்சரவையில் அங்கீகாரம் பெற வேண்டுமென்றும் குறிப்பிட்டிருந்தார்.

இத்தகைய செயற்பாடுகளை மேற்கொள்ளாமலா வீடமைப்பிற்கென புதிய இடம் தெரிவு செய்யப்பட்டு அமைச்சர்கள் பலரும் அடிக்கற்கள் நாட்டினர் என்ற கேள்வியை பாதிக்கப்பட்ட மக்கள் முன்வைத்தனர். 2014ஆம் ஆண்டு அக்டோபர் 29ம் திகதி ஏற்பட்ட மீரியபெத்தை மண்சரிவு முழு இலங்கையை மட்டுமன்றி சர்வதேசத்தையே திரும்பிப் பார்க்க வைத்தது. 37 மனித உயிர்கள் மண் சரிவில் புதையுண்டன.

மண் சரிவில் பாதிப்படைந்த 75 குடும்பங்களைக் கொண்ட 349 பேர் ஆரம்பத்தில் பூனாகலை தமிழ் வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டனர். அதன் பின்னர் மாக்கந்தை தோட்டத்தில் கைவிடப்பட்ட தொழிற்சாலையில் 53 அறைகள் அமைக்கப்பட்டு 75 குடும்பத்தினரும் தங்க வைக்கப்பட்டனர். போதிய அடிப்படை வசதியின்றி பெரும் அசெளகரியங்கள் மத்தியில் அம்மக்கள் அங்கு வாழ்ந்து வருகின்றனர். இவர்களுடன் 97 மாணவ மாணவியர்களும் உள்ளடங்கியுள்ளனர். பெற்றோரை இழந்த நிலையில் கஜனி, சுரேஸ், சந்திரன் ஆகிய மூவரும் உள்ளனர்.

கடந்த அக்டோபர் மாதம் 29ஆம் திகதி மண் சரிவில் பலியான 37 பேருக்கான ஒரு வருட திதி பூஜை வழிபாடுகள் மண் சரிவுப்பகுதியிலேயே இடம்பெற்றன. இந் நிகழ்வுகளில் ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமானும் கலந்து கொண்டிருந்தார். அவ்வேளையில் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து மாகாண அமைச்சரிடம் வெகுவிரைவில் தமக்கான வீடுகளை அமைத்து தருமாறு கேட்டுக்கொண்டனர்.

இதனையடுத்து மாகாண அமைச்சரும் வீடமைப்பு விடயத்தில் கவனம் செலுத்தி செயற்பட்டார். வீடமைப்பினை பார்வையிடச் சென்றிருந்த அமைச்சர் மக்கள்தெனியாவில் 75 வீடுகளை நீர்மாணிக்கக் கூடியளவில் காணி ஒதுக்கப்படாமை குறித்து அவரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. ஒதுக்கப்பட்டிருந்த காணியில் 52 வீடுகளை மட்டுமே நிர்மாணிக்க முடியுமென்று வீடமைப்பு நிர்மாணத்தில் ஈடுபட்டிருக்கும் இராணுவத்தினரின் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

மீரியபெத்தையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கு பற்றாக் குறையாகவுள்ள காணியைப் பெற்றுக்கொள்வதற்கு குறித்த தோட்டக் கம்பனியுடன் மாகாண அமைச்சர் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார். இப் பேச்சுவார்த்தையின் பிரகாரம் இரண்டு ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டது.

இதையடுத்து குறித்த தோட்டக் கம்பனியின் முக்கியஸ்தர்கள், ஹல்துமுல்லை பிரதேச செயலாளர் சிரோமி ஜீவமாலா, பதுளை மாவட்ட அரச அதிபர் நிமால் அபேசிறி, அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா ஆகியோரை மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் சந்தித்து நிலைமையை விளங்கினார். வீடமைப்பிற்கான காணி மற்றும் வீடமைப்பிற்கான ஆவணங்கள் ஆகியவற்றையும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சரிடம் மாகாண அமைச்சர் கையளித்தார்.

இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கான 75 வீடுகளை அமைக்கும் வேலைத்திட்டமும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. முன்னைய ஆட்சிக் காலத்தில் ஆறுமுகன் தொண்டமான் இருந்த வேளையிலும் மீரியபெத்தையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கு நூறு மில்லியன் ரூபா நிதியினை அரசிடமிருந்து ஒதுக்கீடு செய்திருந்தார்.

அத்துடன் நூறு நாள் வேலைத்திட்டத்தில் முன்னைய அரசினால் முன்னெடுக்கப்பட்ட பணிகள் இடை நிறுத்தம் செய்யப்பட்டிருந்தன. இதனடிப்படையிலேயே பாதிக்கப்பட்ட மீரியபெத்தை மக்களுக்கான வீடமைப்புத் திட்டமும் ஸ்தம்பிதம் அடைந்திருந்தது.

ஊவா மாகாணத்தில் வீடமைப்பு, வீதி அபிவிருத்தி, நீர் வழங்கல், தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி, கூட்டுறவுத்துறை அமைச்சராக செந்தில் தொண்டமான் பொறுப்பேற்றதை அடுத்து மீரியபெத்தையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீடமைப்பு வேலைகளை துரிதப்படுத்தியுள்ளார். தைப்பொங்கல் தினத்துடன் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு மக்களுக்கு கையளிக்கப்படுமென்ற விடயத்தையும் மாகாண அமைச்சர் வெளியிட்டுள்ளார்.

சீரற்ற காலநிலை தொடர்ந்திருந்த போதிலும் வீடமைப்பு வேலைகள் மிகத் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அனைத்து தடைகளும் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.