புத் 67 இல. 47

மன்மத வருடம் கார்த்திகை மாதம் 06ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஸபர் பிறை 09

SUNDAY NOVEMBER 22 2015

 

 

பிறந்த நாள்...

பிறந்த நாள்...

“ஓங்களுக்கு தெரியுமா...? எனக்கு

“பொறந்த நாளாம் இன்னைக்கு இன்னைக்கி

அந்திக்கு எங்க வீட்டுல ‘கேக்கு’ வெட்டி

பால் சோறேல்லாம் ஆக்கி கொண்டாடப்

போறோம்” என்று இன்று காலையில்

எனது பாடசாலை நண்பிகள்

எல்லோரிடமும் பெருமையாக கூறியது

இப்போதும் நினைவிருக்கின்றது!

எனக்கு இப்போது ஆறு வயது

போன வருடம்வரை எனக்கு பிறந்த

நாள் விழா கொண்டாடவே இல்லை.

ஏனென்றால் எங்க அப்பாவுக்கு வருமானம் பத்தாதாம். “வாங்குற சம்பளம் சாப்பாட்டுக்கே பத்தல, இதுல பொறந்த நாளு வேறயா...?” என்று அம்மாவிடம் அப்பா அலுத்துக் கொள்வார்.

எங்கள் லயத்தில் எட்டு வீடுகள். அதில் ராமசாமி தாத்தா வீட்டுல மட்டும் எல்லோருக்கும் ‘பிறந்தநாள்’ கொண்டாடுவார்கள். கேக்வெட்டி எல்லோருக்கும் சுவீட் கொடுத்து சத்தமா பாட்டு போட்டு கொண்டாடுவார்கள்.

நிறைய சொந்தக்காரர்கள் எல்லாம் வருவார்கள். பெரிய பெரிய பரிசுப் பொருட்கள் எல்லாம் வாங்கி வந்து பிறந்தநாள் கொண்டாடுபவர்களுக்கு கொடுப்பார்கள்.

பரிசு கொடுக்கும் போது ‘போட்டோ’ எடுப்பார்கள்.

அழகழகான, சட்டை, கவுன் எல்லாம் போட்டு படம் பிடிக்க கூட்டமாக நிற்பவர்களை பார்த்தால் எனக்கும் ஆசையாக வரும் ஆனால் எங்கள் வீட்டில் அதற்கெல்லாம் வசதியில்லை.

எனது தம்பிக்கு மூன்று வயது அவனுக்கும் பிறந்தநாள் கொண்டாடவே இல்லை.

எங்கள் அம்மா அரிசிப் பலகாரம் செய்து சாமி படத்தின் அருகில் வைத்து வணங்கிவிட்டு, எனக்கும், தம்பிக்கும் விபூதி பூசிவிட்டுப் பலகாரம் சாப்பிடத் தருவார்.

இவ்வளவுதான் எங்கள் பிறந்த நாள், கொண்டாட்டம் தீபாவளி அல்லது பொங்கலுக்கு வாங்கிய புதுச்சட்டை, கவுனை அன்று கொஞ்ச நேரம் உடுத்திவிட்டு கழற்றி வைத்து விடுவோம்.

ஆனால் இந்த வருடம் அப்படி அல்ல. சிறப்பாக கொண்டாடப் போகிறேம். எனக்கும், தம்பிக்கும் புதிய உடைகள் வாங்கி வந்து விட்டார் அப்பா.

எனக்குப் பட்டுப் பாவாடை, சட்டை, போட்டுப் பார்த்தேன். நல்லாவே இருந்தது.

நீலமும் சிவப்பும் கலந்த நிறம்! பிறந்தநாளின் போது எல்லோரிடமும் போட்டுக்காட்டிட வேண்டும் என்று எனக்குள் ஆசை! அடிக்கடி அதை வெளியில் எடுத்து பார்த்துவிட்டு மீண்டும் பெட்டிக்குள் வைத்து விடுவேன்.

எனது பாட்டி என்னை வினோதமாகப் பார்த்துச் சிரிப்பாள் “ஒனக்குப் பொருத்தமாத்தாண்டி ஒங்கொப்பன் எடுத்து வந்திருக்கான்” என்று பாட்டி கூறுவாள்.

எங்கள் அப்பாவின் அம்மாதான் பாட்டி காமாட்சி. பாட்டிதான் என்னையும், தம்பியையும் பார்த்துக் கொள்வாள்.

எங்கள் அம்மா வெளிநாடு சென்று எட்டு மாதம் ஆகிறது. என்னையும் தம்பியையும் நன்றாகப் படிக்க வைக்க வேண்டுமானால் வெளிநாட்டு வேலைக்குப் போனால் தான் முடியும் என்று அம்மாவும் அப்பாவும் நினைத்து முடிவெடுத்தார்கள்.

இப்போது கூட அம்மாவை பிரிந்த அந்த நாளை என்னால் மறக்கவே முடியவில்லை.

வெளிநாட்டுக்கு போகும் நாள் நெருங்க நெருங்க எங்கள் வீட்டில் சோகம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வந்தது.

அம்மா இரவில் திடீரென்று விழித்துக் கொண்டு, என்னையும், தம்பியையும் கட்டிப் பிடித்துக் கொண்டு அழுவார். அவருக்கு அப்பாவும், பாட்டியும் ஆறுதல் கூறுவார்கள். காரணம் விளங்காமல் தம்பி அழுவான்.

‘ஒங்கள எல்லாம் நல்லா படிக்கவைக்கணும் என் புள்ளைகளும் நல்ல சட்டை துணிமணி உடுத்தணும்னு தாண்டி நான் வெளிநாட்டுக்கு போறேன்” என்று மீண்டும் அழுவார். இப்படி நாட்கள் கடந்து கடைசியாய் விமானநிலையம் போகும் நாள் வந்தது.

தோட்ட மக்கள் நிறைய பேர் வீட்டுக்கு வந்திருந்தார்கள். அம்மாவுடன் வேலைசெய்யும் சகதோழிகளில் பலபேர் வந்திருந்தார்கள். அவர்களும் அழுதார்கள்.

“எதுக்கக்கா அழுவுaங்க, சந்தோசமா போயிட்டு வாங்க, ஒங்க மனசு போல ஒங்களுக்கு நல்ல இடமா கிடைக்கும்” என்று சோமாவதி அக்கா ஆறுதல் கூறினார். அவர் போல் இன்னும் பல பேர் நாட்டில் இருந்து வரும் சிங்கள அக்காமாரும் வந்தார்கள்.

மேட்டு லயத்து சுமதி சித்தியிடம் “சுமதி அடிக்கடி வந்து இந்த புள்ளைங்கள பாத்துக்க, அதுக ஏதாவது ஆசைப்பட்டா செஞ்சுகுடு, அதுகளுக்கு வேற யாரு இருக்கா...?” என்று தேம்பினாள்.

“நீ பயப்படாம போக்கா, நாங்க ஒரு கொறையும் வைக்காம பார்த்துக்கறோம்!” என்றார் சுமதி சித்தி.

எங்கள் லயத்து மக்கள் எல்லோரும் அம்மாவுக்கு ஆறுதல் சொன்னார்கள்.

மறுநாள் விமான நிலையம் சென்று அம்மாவை பயணம் அனுப்பிவிட்டு வந்து ஒரு வாரம் வரை பாட்டி, அப்பா, நான், தம்பி எல்லோருமே சோகத்தில் மூழ்கிக்கிடந்தததை இப்போதும் மறக்க முடியவில்லை.

காலம் எவ்வளவு விரைவாக கடந்து போகிறது.

நேற்று கூட அம்மா போனில் பேசும் போது, “என்னங்க பிறந்தநாள் கொண்டாட ரெடி பண்ணீட்டீங்களா? நல்ல உடுப்பு வாங்கிட்டீங்களா? அப்புறம் ‘கேக்’ வெட்டும் போது போட்டோ எடுக்க சொல்லுங்க சோமண்ணா நல்லா எடுப்பாரு. அவருகிட்ட சொல்லி நெறைய படம் எடுங்க.

‘புள்ளைங்க ரெண்டு பேரும் ஆசைப்பட்ட படி எல்லாம் வாங்கிக் குடுங்க’ என்று கூறினார்.

அம்மா வெளிநாடு சென்று மூன்று மாதத்தின் பின் அப்பாவுக்கு பணம் அனுப்பினர். அதிலிருந்து கொஞ்சம், கொஞ்சமாக எங்கள் ஆசைகள் நிறைவேறத் தொடங்கின. ஆனால்...

எல்லாம் ரெடி, இரவாகி விட்டது. எங்கள் வீட்டின் ஒரு மூலையில் பெரிய மேசை போட்டு, அதில் அழகான பெட்சீட் விரித்து ‘கேக்’ பலகாரம் ஆப்பிள் பழங்கள், ஒரேஞ், இன்னும் பல வகையான பொருட்களும் வைத்து அலங்காரத்துடன் காட்சியளித்தது.

வீட்டில் நிறைய விருந்தாளிகள் அம்மா, அப்பாவின் நண்பர்கள் போட்டோ எடுக்கும் சோமண்ணா, மாமா, சுமதி சித்தி என்று நிறைய பேர் கூடி விட்டனர். அப்பா மட்டும் இன்னும் வரவில்லை.

அவர். ‘பட்டாசு’ வாங்கி வர பக்கத்தில் இருக்கும் நகரத்திற்கு சென்றார்.

நானும் தம்பியும் புதுச்சட்டை போட்டு தலைவாரி, ரெடியாகிவிட்டோம்’ அப்பா இன்னும் வரவில்லை.

இரவு எட்டு மணி பாட்டி அடிக்கடி வாசலுக்கு சென்று அப்பா வருகின்றாரா என்று பார்த்து ஏமாற்றத்துடன் திரும்பிக் கொண்டிருந்தார்.

வந்திருந்த விருந்தாளிகள் பரபரப்பாக அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தனர். அப்பா போன் எடுத்துப்போயிருந்தாலும் அவருடன் தொடர்பு கொள்ள முடிய வில்லை. எங்கள் லயத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரம் தான் நகரத்திற்கு.

‘பட்டாசு வேண்டாம்’ என்று சொல்ல சொல்ல கேட்காமல் அப்பா நகரத்திற்கு போனார்.

இரவு ஒன்பது மணி. எங்கள் லயத்து வாசலில் ஒரு ஆட்டோ வந்து நின்றது.

எல்லோரும் வாசல் பக்கம் ஓடினோம். என் புள்ளைக்கு இன்னைக்கு பொறந்த நாளுடா... டேய்... என்று கத்தியடி கையில் சாராயப் போத்தலுடன் அப்பா ஆட்டோவிலிருந்து வாசலில் விழுந்தார்.

(கொஞ்சம் கற்பனை)

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.