புத் 67 இல. 47

மன்மத வருடம் கார்த்திகை மாதம் 06ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஸபர் பிறை 09

SUNDAY NOVEMBER 22 2015

 

கவிதை மஞ்சரி

உன்னால் முடியும்

தூக்கலாம் என்று நினைப்பவர் தோளுக்குப்

பாரம் தெரியாது

தூக்க முடியாது என்பவர் களுக்கே

துரும்பும் இரும்பாகும்.

ஊக்கமும்... முடியும் என்கிற நினைப்பும்

உள்ளவர் எந்நாளும்

தோற்பதே இல்லை என்பதைச் சரித்திரம்

சொல்வதைப் படித்துப் பார்

என்னால் முடியும்... என்னால் முடியும்

என நினை,..... உன்னாற்றான்

எதையும் சாதிக்க முடியும்... அதனை

இனிச்செய்து பதிவாக்கு

உன்னால் முடியா(த) தொன்றுமே இல்லை உன்

எண்ணத்தை உருக்காக்கு

உலகம் உனது வரவுக் காகவே

இன்னமும் காத்திருக்கு

மானிட நேசம்... அன்பு.... கருணை....

வாய்மைத் திடமிருந்தால்....

மலையையும் அசைத்துச் சாய்த்திட முடியும்

முயன்றால் வெற்றி நிஜம்

வானிலே பறந்து நிலவில்கால் பதித்து

வந்தவன் சகோதரன் நீ

வருகிற பயத்தை முளையிலே கிள்ளி

எறிந்து, செய் சரித்திரங்கள்

கூனை நிமிர்த்திட முடியும் நம்மாலே

சோம்பலைத் தூக்கி எறி

கோழைகள் ஆணாய் வாழ்ந்ததே இல்லை

ஆண்மைஎப் போதும் வெல்லும்

ஏன் இனித் தயக்கம்,... எழுந்துவா! புதிய

சரித்திரம் எழுதிவைப்போம்

இவ்வுல கம்நம் வரவிற் காகவே

எதிர்பார்த்துக் காத்திருக்கு


விடுதி நட்பு

வாழ்க்கை சிலவேளை கண்ணீர் நிறைந்தது

பிரிவில் அழுகை...

பல நாள் கடந்து மீண்டும் இணைதலின்

யாதும் அழுகை...

எனது உயிர்தோழியே! சகோதரியே!

வாழ்வின் எல்லா நிலைகளிலும் உனக்கென

எனது மனம் சில கணமேனும் பிரார்த்திக்கும்

நீ வாழ்வின் எல்லைகளை விவேகத்தினால் வெல்வதற்காய்...

பழகிய நாட்கள் குறைவாகினும்...

அழகிய நாட்களாய் அவை மனதை நிறைக்கும்...

நட்பின் அர்த்தங்கள் அதில் நிறைந்திருக்கும்...

நீ ஏன் எனது கருவறையில்

பிறக்கவில்லையென மனம் ஏங்கும்..

ஆயினும், ஓர் அறையில் நாம் பிடித்த சண்டைகள், பழகிய விதங்கள்

அன்பெனும் கருவறையில் ஒன்றாய்ப் பிறந்த

இரட்டையர் நாம் என்பதை நினைவூட்டும்....

வாழ்க்கை எனும் நாடகத்தில் வேடங்கள்

பல நாம் ஏற்றிருப்பினும்..

“விடுதி நண்பிகள்” என்ற வேடம்

உனது முதுமையிலும் மீண்டும் தொடர....

உன்னை அழைக்கும்....


மௌனத்தின் சப்தம்

துயிலும் விழிகளுக்குள்

ஊறும் கண்ணீர்த்துளிகள்

எழ முடியாமலும்

அழ முடியாமலும் ஓர்

அபலையின் கண்கள்

மெளனமாய் சப்தமிடுகிறது

இருட்டை நேசித்தவர்கள்

தனியிடங்களை மட்டும்

சுவாசித்தவர்கள்

மோப்பம் பிடித்து

அலைந்து திரிந்த

காமப் பிசாசுகள்

சுகத்திற்காய் பதறிய அவர்களின்

வெட்கத் தலங்கள்

மெளனமாய் சப்தமிட்டு

அடங்கிப் போகிறது

காதல் போர்வை விரித்து

கூடிக் குலாவி கதை பேசி

ஊர் உறங்கும் வேளையிலும்

விழித்திருந்து - தன்

ஊரை விட்டோடிய காதல் ஜோடிகளின்

பதிவுத் திருமண நாடகம்

விவாகரத்தின் விளிம்பிலிருந்து

சப்தமிட்டு மெளனிக்கிறது.

விதிகளுக்குள் தன்னை

விலங்கிட்ட முதிர்க்கன்னி

வரதட்சணையில் வகுடு பிரிந்த

வாழ்க்கையை நினைத்து நினைத்தே

மெளனமாய் சப்தமிடுகிறாள்

யாருக்குக் கேட்கும்

சப்தமான முனகலுக்கே

திசைமாறி நடக்கும்

சுயநல பாதமுள்ளவரிடம்

காமம் காதலும், கல்யாணமும்

வெறும் செய்திகளாய் மட்டும்

மெளனமாய் வரும் சப்தங்கள்

யாருக்குக் கேட்கும்??


கண்ணீர்த்துளிகள்

சோ. ஷண்முகபிரியா, பாதினாவெல, பொரகஸ்

ஒவ்வொரு பெண்ணுக்கும்

ஒவ்வொரு ஆணும் துணையன்று

தந்தையாய் தமையனாய்

தனிமையிலும் வீட்டிலும் பாதையிலும்

தாழ்ப்பாள் இடாமல் இரவிலும்

திறந்தவெளியில் நிலவுடனும்

தீண்டிடும் அச்சங்கள் இல்லாது

இன்பமாய் வாழ்ந்தகாலம்

இமயம் ஏறிவிட்டதுபோலும்

ஈரமில்லா இதயம்

ஈன்றவனும் துடிக்கும்

ஈனமில்லா நடத்தைகள்

பெண்ணினமே அச்சத்தில் இன்று

வயதை பாரான் உறவை பாரான்

துக்கத்தை பாரான் துடிப்பை பாரான்

துச்சநேர இன்பத்திற்காய்

இன்று நிம்மதியில்லாமல் துடிக்கிறது

ஒவ்வொரு பெண்ணுள்ளமும்

மகளாய் தமக்கையாய் தாயாய்

நினையாது விட்டால் தவறில்லை

பெண்ணும் மானிட ஜென்மங்கள்

உணர்வுகளும் உள்ளமும்

உள்ளதென

எண்ணினாலே போதுமது ஆணினமே.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.