புத் 66 இல. 40

ஜய வருடம் புரட்டாதி மாதம் 19ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 துல்ஹஜ் பிறை 09

SUNDAY OCTOBER 05 2014

 

 
அரசாங்கத்தின் வெளிவிவகார கொள்கையின் வெற்றி

அரசாங்கத்தின் வெளிவிவகார கொள்கையின் வெற்றி

சமீபத்தில் சீன ஜனாதிபதி ஜின்பிங் இலங் கைக்கு விஜயம் செய்திருந்தார். சுமார் முப்பது ஆண்டுகளுக்கு பின்னர், ஒரு சீன ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம் செய்திருந்தமை இதுவே முதல் தடவையாகும்.

உண்மையில் இது ஜனாதிபதி ராஜபக்ஷ தலைமை யிலான அரசாங்கத்தின் வெளிவிவகாரக் கொள்கைக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகும். இதனை பல இந்திய ஆய்வாளர்களே ஏற்றுக் கொண்டிருக்கின்றனர். இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற காலத்தில் அபிவிருத்திக்கான கதவுகள் அடைபட்டுக் கிடந்தன. அரசாங்கம் இலங்கையின் யுத்தத்தை வெற்றிகரமாக முடிவுக்கு கொண்டுவந்ததைத் தொடர்ந்து, அதுவரை அடைபட்டுக் கிடந்த அபிவிருத்திக்கான கதவுகள் அகலத் திறந்தன.

இந்த பெருமை அரசாங்கத்தையே சேரும். இலங்கை இந்து சமுத்திர நாடு என்னும் வகையில், பிராந்திய ரீதியான ஒத்துழைப்பின் அடிப்படையில்தான் அபிவிருத்திக்கான வாய்ப்புக்களை தேட வேண்டி யிருந்தது.

இதனை நன்கு கணிப்பிட்டுக் கொண்ட அரசாங்கம், ஆசியாவில் மிகவும் வேகமாக வளர்ச்சியடைந்துவரும் சீனப் பெருந் தேசத்துடன் பொருளாதார ரீதியில் இணைந்து செல்லும் முடிவை எடுத்தது எனலாம். குறிப்பாக உலகின் கவனம் ஆசியாவை நோக்கி திரும்பியிருக்கின்ற சூழலில், அதனை அடிப்படையாகக் கொண்டு இலங்கை தன்னுடைய பொருளாதார கொள்கையை மறுபரிசீலனை செய்துகொண்டது. சீனாவும் இந்து சமுத்திர பிராந்திய நாடுகளுடனும் நெருங்கிச் செயற்படுவதற்கான முயற்சிகளை ஆரம்பித்திருந்தது.

இந்தப் பின்னணியில்தான், இலங்கை பொருளாதார ரீதியில் சீனாவுடன் இணங்கிச் செயற்படுவதற்கான திட்டங்களை வகுத்தது. அரசாங்கம் எதிர்பார்த்தது போன்றே யுத்தத்திற்கு பின்னரான பொருளாதார வளர்ச்சிக்கு சீனா பாரியளவில் பங்களிப்புச் செய்ய முன்வந்தது. இந்த அடிப்படையில்தான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் சீன ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார். இதனை பல இந்திய ஊட கங்கள் வரலாற்று விஜயம் என்று வர்ணித்திருந்ததுடன், இந்தியாவின் இடத்தை சீனா எடுத்துக்கொண்டு விட்டதாகவும் கூறியிருந்தன.

ஆனால் இலங்கை அரசாங்கம் திட்டமிட்டு எந்த வொரு நாட்டுக்கும் எதிராக, சீனாவுடன் இணைந்து செயற்படவில்லை. ஒரு சிறிய நாடு பொருளாதார ரீதியில் வளர்ச்சியடைய வேண்டுமாயின், பெரிய பொருளாதார சக்திகளுடன் இணைந்து பயணிக்க வேண்டும் என்னும் நியதியின் கீழ்தான் அரசாங்கம் செயற்பட்டு வருகிறது.

மேலும் சீனா, நாடுகளின் உள்விவகாரங்களில் எந்த விதத்திலும் தலையிடாக் கொள்கையை கொண்டிருக்கும் ஒரு நாடாகும். இதுவரை சீனா எந்தவொரு நாட்டின் மீதும் இராணுவ ரீதியாக தலையீடு செய்ததில்லை.

இப்படியான பல விடயங்களை கருத்தில் கொண்டுதான் இலங்கை அரசாங்கம் சீனாவுடன் இணைந்து நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச்செல்ல முற்படுகிறது.

சீன - இலங்கை உறவிற்கு சுமார் அறுபது ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாறுண்டு. இந்தக் காலகட்டத்தில் இருதரப்பு உறவும், பரஸ்பரம் நட் புடனும் சுமுகமாகவுமே பயணித்திருக்கிறது. ஒவ்வொரு நாடும் தன்னுடைய பொருளாதார மற்றும் பாதுகாப்பு உறவுகளை காலத்திற்கு காலம் மறுபரி சீலனை செய்வதும், அதற்கேற்ப மாற்றியமைப்பதும் உண்டு. அந்த வகையில்தான் சீனா அண்மைக்கால மாக தன்னுடைய, நட்பு நாடுகளுடனான பொருளாதார உறவுகளை பலப்படுத்தி வருகிறது. இதுவரை தென்கிழக்காசிய மற்றும் ஆபிரிக்க நாடுகளுடன் நெருங்கிப் பணியாற்றிய சீனா தற்போது இந்து சமுத்திர பிராந்திய கடலோர நாடுகளுடனும் தன்னுடைய பொருளாதார உறவுகளை பலப்படுத்த முயற்சிக்கிறது. அந்த வகையில் இலங்கை, மாலைதீவு மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகளுடனான உறவை பலப்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகிறது.

அதே போன்றே இந்தியாவும் தன்னுடைய அயல் நாடுகளுடன் மட்டுமன்றி, வியட்நாம் போன்ற தென் கிழக்காசிய நாடுகளுடனும் பொருளாதார மற்றும் கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கள் தொடர்பில் உறவை பலப்படுத்தி வருகிறது. இது சாதாரணமாக ஒவ் வொரு பெரிய நாடுகளும் செய்கின்ற மற்றும் செய்ய விரும்புகின்ற விடயங்கள்தான்.

ஆனால் இவ்வாறு பெரிய சக்திகள் செயற்படும் போது, சிறிய நாடுகள் அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ளும்போதே செயலாற்றுவதன் மூலமே உச்சளவி லான நன்மைகளை பெற முடியும். அந்த வகையில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கம் புத்திசாதுர்யமான பொருளாதார கொள் கையை வகுத்து, அதனடிப்படையில் செயற்பட்டு வருகிறது.

யுத்தத்திற்கு பின்னரான இலங்கையின் பெரும் கட்டுமான பணிகளில் சீனா பாரியளவில் பங்களிப்பு வழங்கியிருக்கிறது. அந்த வகையில் இதுவரை இலங்கை உதவி வழங்கும் நாடுகளில் முதலிடத்திலிருந்த ஜப்பானின் இடத்தை சீனா எடுத்துக் கொண்டது. சீனா தன்னுடைய இலங்கைக்கான உதவிகளை அதிகரித்துக் கொண்டு சென்ற போது, மேற்கு நாடுகள் தங்களுடைய உதவிகளை குறைத்துக் கொண்டிருக் கின்றன.

மேற்கு நாடுகள் தங்களின் நலன்களுக் காக செய்யும் செயற்பாடுகளுக்கு இலங்கை பதிலளிக்க முடியாது. ஆனால் எந்தவொரு நாட்டையும் இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்க வேண்டாம் என்று இலங்கை கூறவில்லை.

ஆனால் மேற்கு நாடுகள் தங்களின் நிகழ்ச்சி நிரல்களுக்கு ஏற்ப இலங்கையின் கொள்கைகள் அமைந்திருக்க வேண்டும் என்று வற்புறுத்தும் போது மட்டுமே, இலங்கை அதனை மறுத்து வருகிறது. ஆனால் சீனா அப்படியான நிபந்தனைகள் எதனையும் கூறுவதில்லை. இதன் காரணமாகத்தான் தென்கிழக்காசிய நாடுகள் பலவும் சீனாவுடன் நெருங்கிச் செயற்பட்டு வருகிறது. இதன் காரணமாக அந்த நாடுகள் பொருளாதார ரீதியாக பல நன்மைகளை பெறுகின்றன.

அண்மையில் இலங்கை வந்திருந்த சீன ஜனாதிபதி கொழும்பு துறைமுக வேலைகளை தொடக்கி வைத்திருந்தார். இதற்கான பாரிய கடனுதவியை சீனா வழங்கவுள்ளது.

இது இலங்கையின் மிகப் பெரிய கட்டுமான திட்டமாகும். கடலை நிரம்பி 233 ஏக்கர் பரப்பளவில் இந்த துறைமுக நகரம் அமையவுள்ளது. இதற்காக 15 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவு செய்யப் படவுள்ளன. சீனாவின் உதவியில்லையென்றால் இப்படியொரு பாரிய திட்டத்தை எக்காலத்திலும் செய்ய முடியாது.

இத்திட்டம் முடிவுற்றால் இதன் மூலம் பல பொருளாதார நன்மைகளை இலங்கை மக்கள் பெறுவர். அதேபோன்று சீனாவின் 21ம் நூற்றாண்டிற்கான பட்டுப்பாதை திட்டத்தையும் இலங்கை சாதகமாக பரிசீலிப்பதாக அறிவித்துள்ளது. இதன் மூலமும் இலங்கை பாரிய பொருளாதார நன்மைகளை பெறவுள்ளது.

இப்படி பல்வேறு விடயங்களில் சீனாவுடனான உறவு இலங்கைக்கு நன்மை பயக்கும் ஒன்றாக இருக்கிறது. உலக நிலைமைகளை துல்லியமாக கணித்து அதற்கேற்ப இலங்கையின் வெளிவிவகார கொள்கையை திட்டமிட்டதன் காரணமாகவே, அரசாங்கத்தால் இப்படியானதொரு வெற்றியை பெற முடிந்தது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.