புத் 66 இல. 01

விஜய வருடம் மார்கழி மாதம் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ர.அவ்வல் பிறை 03

SUNDAY JANUARY 05 2014

 

 
கைதாகியோ, வீட்டுக்காவலிலோ நான் வைக்கப்படவில்லை

கைதாகியோ, வீட்டுக்காவலிலோ நான் வைக்கப்படவில்லை

ஊடகங்களில் வந்த செய்திகள் தவறானவை

பொலிஸாரோ அல்லது வேறு எந்த பாதுகாப்புப் பிரிவினரோ தம்மை வீட்டுக்காவலில் வைக்கவில்லையெனவும் இது தொடர்பில் இணையத்தளங்களில் வெளிவந்த செய்திகளை தாம் முற்றாக நிராகரிப்பதாவும் இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள கனேடிய எம்.பி. ராதிகா சிற்சபேசன் தெரிவித்துள்ளார்.

தவறான பிரசாரங்கள் இணையத் தளங்கள் மூலம் சர்வதேசமெங்கும் பரப்பப்பட்டபோது இந்த செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என தெரிவித்துள்ள அவர்; தாம் கனடாவிலிருந்து புறப்படும் போதே அந்நாட்டின் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டங்கள் தொடர் பில் தமக்கு அறிவுறுத்திய தாகவும் தாம் அதற் கிணங்கவே செயற் பட்டதாகவும் குறிப்பிட் டுள்ளார்.

நேற்று முன்தினம் முல்லைத்தீவில் குடிவரவு குடியல்வு புலனாய்வு அதிகாரிகளிடம் கனடா எம்.பி. ராதிகா சிற்சபேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதனையடுத்து அவர் குடிவரவு கட்டுப்பாட்டாளர் லீலானந்த பெரேராவுடன் முல்லைத்தீவிலிருந்து தொலைபேசி மூலம் உரையாடியுள்ளார். இதன்போது குடிவரவு குடியகல்வு துறை அதிகாரிகளும் உடன் இருந்துள்ளனர். இதன்போது தாம் இலங்கைக்கு சுற்றுலாவொன்றை மேற்கொண்டுள்ள தாகவும் எனினும் தாம் எவ்விதத்திலும் குடிவரவு குடியகல்வுகள் சட்டத்தை மீறாத வகையில் செயற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கனேடிய எம்.பி. ராதிகா சிற்சபேசன் சுற்றுலா விசாவில் கடந்த 28ம் திகதி இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

அவர் இது குறித்து தெரிவிக்கையில்:

“நான் சுற்றுலாப் பயணம் மேற்கொண்டே இலங்கைக்கு வந்துள்ளேன். இதன்போது வடக்கிற்குச் சென்றேன். எனினும் பல இணையத்தளங்களும் ஊடகங்களும் இது தொடர்பில் தவறான தகவல்களையே வெளியிட்டன. அவற்றை நான் முற்று முழுதாக நிராகரிக்கின்றேன்.

என்னை வீட்டுக்காவலில் வைக்க எந்த அதிகாரியும் முயன்றதில்லை. அதேவேளை எந்த பாதுகாப்பு அதிகாரியும் என்னைச் சந்திக்கவுமில்லை. தமிழ் அரசியல்வாதியான ஸ்ரீதரன் எம்.பி. என்னைச் சந்தித்தார். அவர் எனது மாமா என்ற வகையிலேயே அவர் என்னைச் சந்தித்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார். கனடா எம்.பி. ராதிகா சிற்சபேசன் சம்பந்தமாக பல்வேறு தவறான செய்திகள் வெளிவந்ததால் குடிவரவு குடியகல்வு புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் சிலர் இது பற்றி ஆராய்வதற்கு வடக்கிற்குச் சென்றிருந்தார்கள். இவர்கள் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர்கள் நாயகம் லீலானந்த பெரேராவின் பணிப்பிலேயே அங்கு சென்றுள்ளனர்.

ராதிகா சிற்சபேசன் எம்.பி. வடக்கில் பல பிரதேசங்களுக்கும் சென்று பல வழிபாட்டுத் தலங்களையும் தரிசித்துள்ளார். அவர் தொடர்பில் தவறான செய்திகள் ஊடகங்கள் மூலம் வெளியானதையடுத்து அவர் தனிப்பட்ட ரீதியில் சிலரை சந்தித்துக் கலந்துரையாடவிருந்த நிகழ்வுகளும் ரத்துச் செய்யப்பட்டன. நேற்று முன்தினம் அவர் கொழும்பு திரும்பியதுடன் நேற்று மாலை அவர் தமது சுற்றுலாவை நிறைவு செய்துகொண்டு கனடா திரும்ப ஏற்பாடாகியிருந்தது. (ஸ)

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.