புத் 66 இல. 01

விஜய வருடம் மார்கழி மாதம் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ர.அவ்வல் பிறை 03

SUNDAY JANUARY 05 2014

 

 
காதோடு காதாக...

காதோடு காதாக...

* உண்ணாவிரதம் இருக்கப் போகிறாராம் வேங்கையன்
தைப்பொங்கலுக்கு முன்பாக கொழும்பு தமிழ்ச் சங்க வீதி பெயர் மாற்றும் விவகாரத்தை தீர்த்து வைக்காவிட்டால் உண்ணாவிரதம் இருக்கப்போகிறாராம் முன்னணியின் வயதான மாநகர சபை உறுப்பினர். எல்லாம் மாகாண சபைத் தேர்தலுக்கான பிரசாரம்தான். இவர் போன்றவர்களின் இது போன்ற அறிக்கைகளை வெளியிடுவதற்கென்றே சில ஊடகங்கள் இருக்கும் போது இவர்கள் பாடு கொண்டாட்டம்தான். பொங்கலுக்கு இன்னும் சரியாக ஒன்பது நாட்கள்தான் உள்ளன. ஐயா சொன்ன சொல்லு மாறாதவர் என்று அவருக்குப் பிறந்த ஊரில் ஒரு நல்ல பெயர் இருக்கு. ஐயா பொங்கலைப் பொங்கிவிட்டுப் பார்த்துக் கொண்டிருப்பாரா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

* கை குலுக்கி கட்டியணைத்தும் தொடர்கிறதாம் பழிவாங்கல்
கைகளைக் குலுக்கி கட்டிப்பிடிக்க வைத்து தலைவர் என்னதான் சமாதானம் செய்து வைத்தாலும் கல்முனையில் கயிறிழுப்புக்கள், கழுத்தறுப்புக்கள் இருட்டாக நடைபெறத்தான் செய்கிறது. முரண்படுவோர் நிம்மதியாக கொழும்பு பங்களாக்களில் வந்து தங்கி ஓய்வெடுப்பர். ஆனால் இவர்களுக்காக தோள்கொடுக்கும் தொண்டர்கள் பாடுதான் பெரும் சிரமத்திற்கு ஆளாகிவிடுகிறது. பழிவாங்கல் படலம் தொடர்வதாகவே குற்றம் சாட்டப்படுகிறது. ஊழியர்கள் பக்கச்சார்பில்லாது தமது அலுவலக கடமையை மட்டும் செய்தால் இவற்றுக்குள் சிக்கத் தேவையில்லை. ஆனாலும் பதவி உயர்விற்கும், சம்பள அதிகரிப்பிற்கும் வால் பிடிப்பதாலேயே வருகிறது வினை. இனியாவது தொழிலை மட்டும் ஊழியர்கள் கவனிக்க வேண்டும்.

* எதிர்க்கட்சியிலிருக்கையில் வரும் ஞானோதயங்கள்
பெருந்தோட்டத்துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த மலையகத் தலைவர்கள் முன்வர வேண்டுமாம். தோ.ஜ.மு. பொதுச் செயலாளர் சதாசிவம் ஐயாவின் அழைப்பு அது. நல்ல விடயம். ஆனால் எதிர்க் கட்சியிலிருந்து எதுவுமே செய்ய முடியாத போதுதான் இவர் போன்ற பலருக்கும் இத்தகைய ஞானோதயங்கள் பிறக்கின்றன. ஆளும் கட்சியில் பல தடவைகள் ஐயா செல்வாக்காக இருந்த போது இந்த விடயத்தை நினைத்திருப்பாரோ தெரியவில்லை. இவர் கூறிய விடயத்தை மலையகத் தம்பி அமைச்சர் ஆறுமுகன் மிகவும் சிறப்பாகச் செய்து வருகிறாரே. இவர் வேண்டுமானால் அவருடன் இணைந்து செயற்பட்டால் அந்தச் சிறப்புக்களை அறிந்து கொள்ளலாம்.

உள்ளூரில் நிராகரிக்கப்பட்டவர்
தென்னாபிரிக்கா கதையளப்பில்
தென்னாபிரிக்காவின் அனுசரணையுடன் பேச்சுவார்த்தைகளைத் தொடருவதை தமிழ்த் தேசிய முன்னணி நிராகரிப்பதாக அதன் தலைவர் கஜேந்திரகுமார் தெரிவித்திருக்கிறார். அவரும் இவரது கட்சியும் உள்ளூரிலேயே மக்களால் நிராகரிக்கப்படுகையில், இவர் தென்னாபிரிக்கா வரை கற்பனையை ஒட விட்டுள்ளார். முதலில் எமது நிலைப்பாடு என்ன என்பதை உள்ளூரில் மதிப்பிட வேண்டும். ஏதோ தீர்வு வருகிறதெனில் அதை ஏன் நாம் அறிக்கை விட்டுக் குழப்ப வேண்டும். தலைநகரில் அறிக்கை விடும் ஒருவர் போன்றல்லவா இவர் யாழ்ப்பாணத்திலிருந்து செயற்படுகிறார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.