புத் 66 இல. 01

விஜய வருடம் மார்கழி மாதம் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ர.அவ்வல் பிறை 03

SUNDAY JANUARY 05 2014

 

 
தலைமையின் சாணக்கியத்தையும் விஞ்சி தலைவர்கள் குடுமிச் சண்டையில்?

மழை விட்டும் தூவானம் நிற்காத நிலையில் கல்முனை ணிவி

தலைமையின் சாணக்கியத்தையும் விஞ்சி தலைவர்கள் குடுமிச் சண்டையில்?

மேயர் - பிரதிமேயர் ஏட்டிக்குப் போட்டி அறிக்கை

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆளுகைக்குட்பட்ட கல்முனை மாநகர சபையின் பட்ஜட் அக் கட்சியின் தலைவரும், அமைச் சருமான ரவூப் ஹக்கீம் மேற் கொண்ட பகீரதப் பிரயத் தனங்களையடுத்து வெற்றி கரமாக நிறைவேற்றப் பட்ட போதும் அதன் பின்னர் ஏற்பட்ட சில நிகழ்வுகள் உறுப்பினர்கள் மத்தியில் ஒருவிதமான மனப் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

பட்ஜட் தொடர்பான இழுபறி ஏற்பட்டிருந்த வேளை மலேசியாவிலிருந்த ஹக்கீம், பின்னர் கொழும்பு திரும்பி உடனடியாகவே நிந்தவூருக்கு விஜயம் செய்து அங்கே கட்சியின் மாநகர சபை உறுப்பினர்களை வரவழைத்து சமரசம் செய்திருந்தார். மேயரும் அதிருப்தியாளர்களும் ஒருவரை ஒருவர் கைலாகு கொடுத்து ஆரத்தழுவி தமது ஒற்றுமையை வெளிக்காட்டியுமிருந்தனர்.

பட்ஜட் நிறைவேற்றப்பட்ட தினத்துக்கு அடுத்த நாள் ஜனவரி முதலாம் திகதி கல்முனை மாநகர சபையில் 2012 ஆம் ஆண்டு தொடக்கம் தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட 42 பேர் இடைநிறுத்தப்பட்ட சம்பவத்தால் மீண்டும் மனக்கசப்புகள் ஏற்பட்டுள்ளன.

இடைநிறுத்தப்பட்ட விடயம் தொடர்பில் தமது நிலைப்பாட்டை மேயர் நிசாம் காரியப்பர் உத்தியோகபூர்வமான தனது அறிக்கையில் தெளிவாக விளக்கியுள்ளார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது,

ஊழியர்களின் நலன் கருதி எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கையை சிலர் பிழையாக விளங்கிக் கொண்டு அல்லது பிழையாகத் தெரிவித்து இதனை ஒரு பழிவாங்கலாக காட்ட முனைவதையிட்டு நான் பெரும் கவலையடைகின்றேன்.

கல்முனை மாநகர சபையில் 2012 முதல் தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட ஊழியர்கள், தொடர்ந்தும் சேவையில் நீடிப்பதற்கான நடைமுறைகளில் சில தெளிவின்மை காணப்படுகின்றது. அத்துடன் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நியமனக் கடிதத்தின் பிரகாரம் நிரந்தர நியமனம் வழங்க முடியாத வகையில் அந்த தற்காலிக நியமனங்கள் அமைந்துள்ளன. இது தொடர்பாக மாநகர ஆணையாளர் மற்றும் மாநகர சபை உறுப்பினர்களுடன் கலந்துரையாடி மீண்டும் அவர்களை வேலைகளில் உள்வாங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இது தொடர்பிலான மு.கா. மாநகர சபை உறுப்பினர்களின் குழுக் கூட்டம் எதிர்வரும் 8ம் திகதி மாலை ஐந்து மணிக்கு நடைபெறவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இடைநிறுத்தப்பட்டிருக்கும் ஊழியர்கள் தற்காலிகமாகவே பணி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர். எவரையும் பழிவாங்கும் வகையில் இது நடைபெறவில்லை என உறுதிபட தெரிவித்துள்ளார் சட்டத்தரணி நிசாம் காரியப்பர்.

இதேவேளை இந்தப் பணி நிறுத்தத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதெனவும் இது தனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் முன்னாள் மேயரும் பிரதி மேயருமான சிராஸ் மீராசாஹிப் வாரமஞ்சரிக்குத் தெரிவித்தார்.

நிந்தவூரில் நடைபெற்ற சமரசப் பேச்சுவார்த் தையையடுத்து மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம், கல்முனை மாநகர சபையில் இனி எந்தப் பழிவாங்கலும் இடம்பெறாது என்ற உத்தரவாதத்தை எமக்கு வழங்கினார். அத்துடன் முன்னதாக ஏற்கனவே இடைநிறுத்தப்பட்ட ஒரு சில ஊழியர்களும் மீண்டும் இணைத்துக் கொள்ளப்படுவர் என்றும் உறுதியளித்திருந்தார். நாங்கள் தலைவரை பெரிதும் நம்பினோம். இன்னும் நம்புகின்றோம்.

தற்காலிக அல்லது ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட ஊழியர்களை நிரந்தரமாக்கு வதற்காகவே இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறான ஒரு செயற்பாட்டிற்காக அவர்கள் இடைநிறுத்தப்பட வேண்டிய அவசியம்தான் என்ன? இவ்வா றானவர்களை பணியில் வைத்துக்கொண்டே பொருத்தமானவர்களை இனங்கண்டு பொருத்தமான பதவியில் நிரந்தரமாக்க முடியுமே எனவும் சிராஸ் ஆதங்கப்பட்டார்.

முஸ்லிம் காங்கிரஸ் மாநகர சபை உறுப்பினரான பிர்தெளசும் ஊழியர்கள் இடைநிறுத்தப்பட்டமை ஓர் ஆரோக்கியமான செயல் அல்லவெனவும் நியாயமற்ற நடவடிக்கை எனவும் வாரமஞ்சரிக்கு தெரிவித்தார்.

எது எப்படியிருப்பினும் கல்முனை மாநகர சபை பட்ஜட் நிறைவேற்றப்பட்டமை தொடர்பில் மு.கா.தலைவர் ஹக்கீம் மேற்கொண்ட சாணக்கியமான அணுகுமுறையை எல்லோரும் பாராட்டுகின்றனர். முஸ்லிம் காங்கிரஸின் கோட்டையாகக் கருதப்படும் கல்முனையில் பட்ஜட் தோர்வி கண்டிருந்தால் அக்கட்சியின் வளர்ச்சியில் அது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் எனக் கூறும் ஆய்வாளர்கள், பட்ஜட் வெற்றிபெற்றமையானது மு.காவை கட்டுப்பாட்டுடன் ஹக்கீம் வழிநடத்தி வருகின்றார் என்பதை நிரூபணமாக்கியுள்ளதென தெரிவிக்கின்றனர்.

இதேவேளை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் அதிகாரத்துக்குட்பட்ட நாவிதன்வெளி பிரதேச சபை பட்ஜட்டுக்கு எதிராக வாக்களித்த மு.காவின் உறுப்பினர் எம்.ஐ. தஜாப்டீன் அக்கட்சினால் இடைநிறுத்தப்பட்டுள்ளார். ஆதரவாக வாக்களிக்குமாறு கட்சியினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களை மீறி செயற்பட்டதனால் கட்சியின் தலைவர் ஹக்கீம் அவரை இடைநிறுத்தியுள்ளார்.

இது இவ்வாறிருக்க கல்முனை மாநகர சபை பட்ஜட்டை எதிர்த்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் அதற்கான காரணத்தை தெரிவித்துள்ளனர். கல்முனை வடக்குப் பிரதேச செலகத்தை தரமுயர்த்தும் விடயத்தில் முஸ்லிம் காங்கிரஸ் மேல் மட்டம் நடந்து கொள்ளும் விதம் தமக்கு அதிருப்தியளிப்பதனாலேயே பட்ஜட்டுக்கு ஆதரவளிக்கவில்லை என குறிப்பிடுகின்றனர்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு பரிபாலனம் செய்யக்கூடிய தகுதியை ஏற்படுத்தி அதனை தரமுயர்த்தித்தருமாறே நாம் கேட்கின்றோம். கல்முனையை நாங்கள் பிரிக்கப்போவதாகவும் அதனைக் கூறுபோடப்போவதாகவும் சிலர் விஷமத்தனமான பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். எனவேதான் வாக்களிப்பில் கலந்து கொள்ளாது வெளிநடப்பு செய்தோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினரும், எதிர்க் கட்சித் தலைவருமான எஸ். அமிர்தலிங்கம்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.