புத் 66 இல. 01

விஜய வருடம் மார்கழி மாதம் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ர.அவ்வல் பிறை 03

SUNDAY JANUARY 05 2014

 

 
இ.தொ.கா., ஜனநாயக மக்கள் காங்கிரஸ், இந்திய வம்சாவளி மக்கள் முன்னணி: தமிழ்க் கட்சிகள் இணைந்து பலமானதொரு கூட்டணி

மேல் மாகாண சபைத் தேர்தல் 2014:

இ.தொ.கா., ஜனநாயக மக்கள் காங்கிரஸ், இந்திய வம்சாவளி மக்கள் முன்னணி: தமிழ்க் கட்சிகள் இணைந்து பலமானதொரு கூட்டணி

மனோவின் ஜனநாயக மக்கள் முன்னணிக்கும் அழைப்பு விடுக்கிறார் பிரபா எம்.பி.

நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலில் மேல் மாகாணத்தில் பலமானதொரு கூட்டணியை அமைக்கும் முயற்சியில் தமிழ்க் கட்சிகள் பலவும் கூட்டாக இறங்கியுள்ளன. அமைச்சர் ஆறுமுகன் தலைமையிலான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் காங்கிரஸ், முத்தப்பன் செட்டியர் தலைமையிலான இந்திய வம்சாவளி மக்கள் முன்னணி உட்பட மேலும் பல அரசியல் கட்சிகள், பொது அமைப்புக்கள் இக்கூட்டணியில் இணைந்து கொள்வதற்கான இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளன. இது குறித்து பிரபா கணேசன் எம்.பி. கூறுகையில், தமிழ்க் கட்சிகள் தனித்தனியே போட்டியிட்டு ஒருவரும் வெற்றிபெற முடியாத நிலையைத் தவிர்ப்பதற்காகவே இக்கூட்டணியைத் தாம் அமைத்து வருவதாகத் தெரிவித்தார்.

அத்துடன் மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணிக்கும் இக்கூட்டணியில் இணைந்து கொள்ளுமாறு தாம் அழைப்பு விடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மேல் மாகாண தமிழ் மக்களது வாக்குகளைச் சிதறடிக்காது இருக்க வேண்டுமாயின் அக்கட்சி இக்கூட்டணியில் தம்மை இணைத்துக் கொள்ள முன்வர வேண்டும். இல்லையேல் அக்கட்சி தமிழ் மக்களுக்குப் பாரிய துரோகத்தை இழைத்ததாகவே கருதப்படும். முரண்பாடுகள் ஏதேனும் இருப்பின் விட்டுக் கொடுப்பான பேச்சுவார்த்தைகள் மூலமாக அவற்றைத் தீர்த்துக் கொள்ளலாம் எனவும் பிரபா கணேசன் தெரிவித்தார்.

சப்ரகமுவ மாகாணத் தேர்தலில் இ.தொ.கா.வுடன் இணைந்து போட்டியிட முடியுமாயின் ஏன் அவர்களால் மேல் மாகாணத்தில் இணைந்து செயற்பட முடியாது எனவும் பிரபா எம்.பி. கேள்வி எழுப்பினார்.

இதேவேளை மலையக மக்கள் முன்னணியின் முன்னாள் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் பிரதியமைச்சருமான பெ. இராதாகிருஷ்ணன் ஏற்கனவே இ.தொ.கா.வில் இணைந்து இத்தேர்தலில் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பில் வாழும் தமிழ் மக்களின் வாக்குகள் சிதறடிக்கப்படக்கூடாது எனும் நோக்கத்திலும் இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் தமிழ் கட்சிகள் தமக்கிடையே போட்டி அரசியலை நடத்துவது என்பதாலுமேயே நாம் இத்தேர்தலில் கூட்டணி அமைத்துச் செயற்பட முன்வந்தோம் என இந்திய வம்சாவளி மக்கள் முன்னணியின் தலைவர் முத்தப்பன் செட்டியார் தெரிவித்தார். அமைச்சர் அறுமுகனுடனும், பிரபா கணேசன் எம்.பியுடனும் இணைந்து செயற்படுவது தலைநகரில் தமிழ் மக்களுக்கு நல்லதொரு எதிர்காலத்தை நிச்சயம் தரும் எனவும் முத்தப்பன் செட்டியர் தெரிவித்தார். தனித்துவம் பேசி பிரிந்து நிற்கும் ஏனைய தமிழ்க் கட்சிகளும் இதனைப் புரிந்து செயற்பட முன்வர வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

கொழும்பு, களுத்துறை உட்பட கம்பஹா மாவட்டங்களில் ஆசன ஒதுக்கீடுகள் தொடர்பாக இப்போது நாம் பேசி வருகின்றோம். அதில் பெரிதாகப் பிரச்சினை ஏழாது என நான் நினைக்கின்றேன். கொழும்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினராக நான் இருப்பதனால் கொழும்பிலும், களுத்துறை மாவட்டத்தில் அதிக தொழில்சங்கப் பிரதிநிதிகளை எமது கட்சி கொண்டுள்ளதால் அங்கும் எமக்கு அதிக ஆசனங்கள் ஒதுக்கப்படும். ஜனநாயக மக்கள் முன்னணியும் எம்முடன் இணைந்து கொண்டால் அவர்களுக்கும் கட்சி நிலைப்பாட்டிற்கு ஏற்ப ஆசனங்கள் பகிர்ந்து ஒதுக்கிக் கொடுக்கப்படும் என்று பிரபா கணேசன் தெரிவித்தார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.