புத் 66 இல. 01

விஜய வருடம் மார்கழி மாதம் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ர.அவ்வல் பிறை 03

SUNDAY JANUARY 05 2014

 

 
இலங்கைக்கு வெளியார் எவரும் பாடம் புகட்ட வேண்டியதில்லை

இலங்கைக்கு வெளியார் எவரும் பாடம் புகட்ட வேண்டியதில்லை

பிரதியமைச்சர் பைஸர் முஸ்தபா

கண்டி மாவட்டத்தில் அரசியல் பணி செய்த நீங்கள், கொழும்பில் மேற்கொள்ள ஏன் உத்தேசித்தீர்கள்?

கடந்த மாநகரசபைத் தேர்தலின்போதே நான் கொழும்பு அரசியலில் சம்பந்தப்பட்டேன். அதன்போது கொழும்பு மக்களுடன் நெருங்கிய தொடர்பினை ஏற்படுத்திக்கொள்ள எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. அதனால் ஐ.ம.சு. முன்னணிக்கு கொழும்பில் வாக்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொள்ள முடிந்தது. இதனாலேயே மத்திய கொழும்பில் ஐக்கிய தேசியக் கட்சி பெற்ற மேலதிக வாக்குகள் 12000 வரை குறைந்தது. அத்தோடு ஒட்டுமொத்தமாக கொழும்பு நகரிலும் ஐக்கிய தேசியக் கட்சி வாக்குகளின் எண்ணிக்கையினை 21000 வரை குறைக்க எம்மால் முடிந்தது. ஆனால் இதற்கு முன் ஐக்கிய தேசியக் கட்சி சாதாரணமாக 50,000 மேலதிக வாக்குகளால் வெற்றி பெறும் நிலைமையே இருந்து வந்தது.

இத்தொகையினை குறைக்கும் அல்லது கொழும்பு மாநகரசபையினை வெல்லும் வாய்ப்பு கூட எமக்கு இருந்தது. அப்படி இருந்தும் எம்மவர் சிலரே எமது அந்த வெற்றிக்குத் தடையாக செயற்பட்டார்கள். அதனாலேயே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றி பறிபோனது. ஆனால் எமது வாக்கு விகிதாசாரத்தை அதிகரித்துக்கொள்ள அது வாய்ப்பாக அமைந்தது.

இவற்றை நன்கு அவதானித்து வந்த ஜனாதிபதி இப் பொறுப்பை என்னிடம் கையளித்துள்ளார். கொழும்பில் சிறந்த வெற்றியினைப் பெற்றுக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையினை ஜனாதிபதி என்மீது வைத்துள்ளார். அவரது அந்த நம்பிக்கையை காப்பாற்ற ஒருபோதும் நான் பின்வாங்க மாட்டேன்.

ஆனால் கொழும்பு நகரம் என்பது ஐக்கிய தேசியக் கட்சியின் பாரம்பரிய கோட்டை. அதனை வெற்றிகொள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியால் முடியுமா?

அரசியலில் ஆதிக்கம் கோட்டை என்றெல்லாம் ஒன்றுமில்லை மக்களின் விருப்பம் அறிந்து செயற்பட எம்மால் முடியுமாக இருந்தால் அதுவே வெற்றி தோல்வியை தீரமானிக்கும் சக்தியாக அமையும். கொழும்பு நகரில் நாம் மக்கள் அரசியலில் ஈடுபடுவதால் எமது இலக்குகளை அடைவது கடினமல்ல.

அன்று கொழும்பில் சோமாலியத் தோட்டம், கொரியா தோட்டம் போன்றவையே இருந்தன. ஆனால் தற்போது ஜனாதிபதியின் வழிகாட்டலில், பாதுகாப்புச் செயலாளரின் வழி நடத்தலில் எந்தவித அடிப்படை வசதிகளுமின்றி சேரிகளில் வாழ்ந்து வந்தவர்களுக்கு சகல வசதிகளும்கொண்ட புதிய வீட்டுத்தொகுதிகள் வழங்கப்பட்டு வருகின்றன. கொழும்பு வாழ் மக்களின் வசதிகளை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகளை நாம் இப்போது முன்னெடுத்து வருகின்றோம். இதன்படி பார்க்கும் போது கொழும்பு என்றால் அது ஐக்கிய தேசியக் கட்சியின் கோட்டை என்ற எண்ணம் வெகு விரைவில் செல்லுபடியாகாது போய்விடும் என்றே கூற வேண்டும். இதனை அறிந்த ஐக்கிய தேசியக் கட்சி, பலவிதமான வதந்திகளை பரப்பி வருகின்றது. மக்களின் பார்வையை திசை திருப்புவதே இவர்களது நோக்கமாக உள்ளது. ஆனால் அவர்களது அந்த நோக்கம் கைகூடாது.

கொழும்பில் சேரி வாழ்க்கையானது அவற்றில் வசித்து வந்த இளைஞர் யுவதிகளைக் கூட வெகுவாக பாதித்திருந்தது. குறிப்பாக அவர்களின் திருமணங்களின் போது கூட அவர்களது வதிவிடம் ஒரு தடையாகவே இருந்தது. இந்த நிலையினை மாற்றியதன் மூலம் கொழும்பு வாழ் வசதி குறைந்த மக்களின் வாழ்க்கை நிலையினை உயர்த்த எம்மால் முடிந்தது. இது எமது அரசிற்கு கிடைத்த ஒரு வெற்றி என்றே கூற வேண்டும்.

எதிர்வரும் மாகாணத் தேர்தல்களின் போது அரசு அதற்கு எவ்வாறு முகம் கொடுக்க இருக்கின்றது. அதன் வியூகங்கள் எவை என்பதைப் பற்றி தெளிவுபடுத்த முடியுமா?

எமக்கு பெரும் மக்கள் ஆதரவு இருக்கின்றது என்பதில் துளியும் எமக்கு சந்தேகமில்லை. அத்தோடு எமது வெற்றிமீதும் எமக்கு எந்தவித சந்தேகமும் இல்லை. ஆகையால் கொழும்பு, கம்பஹா களுத்துறை உள்ளிட்ட இரு மாகாணங்களிலும் எமக்கு வெற்றி நிச்சயம். எமது தேவைகள் எல்லாம் எமது இந்த வெற்றிகளை மகத்தான வெற்றிகளாக மாற்றிக்கொள்வதேயாகும். அதற்குத் தேவையான அனைத்து அரசியல் தகைமைகளையும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெற்றிருக்கின்றது. இருந்தும் இந்த வெற்றிகளை கைகட்டிப்பார்த்துக்கொண்டிருப்பதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியாது. ஆகையால் நாம் அனைவரும் ஐக்கியப்பட வேண்டும்.

முதலீடுகளை மேலும் ஊக்குவிப்பதற்காக உங்கள் அமைச்சின் மூலம் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களைப் பற்றிக் கூற முடியுமா?

முதலீட்டு ஊக்குவிப்பு என்பது எமது நாட்டுக்கு மிக முக்கியமான, அதே சமயம் நாட்டிற்கு பெரும் உந்து சக்தியாக அமையவல்லது.

அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவின் வழிகாட்டலின் கீழ் இப் பிரிவினை மிக உயர்ந்த நிலைக்கு கொண்டு வருவதே எமது நோக்கம். யுத்தத்தின் பின் இந்த நாட்டை அபிவிருத்தி செய்வதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்தி இருக்கின்றோம். அடிப்படை வசதிகளை மேற்கொள்ளல், விமான நிலையம், துறைமுகம் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியானது முதலீட்டுத் துறையின் வளர்ச்சியினை நோக்காக கொண்டு முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களே.

இதனால் கடந்த நான்கு வருடங்களில் முதலீட்டு ஊக்குவிப்புத் துறையில் பெரும் வளர்ச்சியினை ஏற்படுத்துவதில் எமது அரசு வெற்றி கண்டுள்ளது. நாட்டின் மீது வெளிநாட்டவரின் ஈர்ப்பை ஏற்படுத்துவதன் மூலம் எமது நாட்டின் பொருளாதாரத்தை வலுவூட்ட முடியும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது. நாட்டில் நிலவும் சமாதான சூழ்நிலை முதலீட்டுத்துறையில் பெரும் வளர்ச்சியினை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.

முதலீட்டுத்துறையில் வளர்ச்சி ஏற்படும் என்று நீங்கள் கூறிய போதிலும் நாட்டில் ஏற்பட்டிருக்கும் தளர்வுகளால் வெளிநாட்டு முதலீட்டாளர்களை கவர்வது கடினமான விடயம் என்று எதிர்க்கட்சி கூறுகின்றதே?

இவர்களின் இக் கருத்துக்கள் அவர்களது குரோதத்தினதும் துவேசத்தினதும் வெளிப்பாடுகளே தவிர அக்கூற்றுக்களில் எந்தவித உண்மையும் இல்லை. ஜனநாயகம் பற்றி இவர்கள் எப்படிக் கதைக்கின்றார்கள் என்பது ஆச்சரியமாகவே உள்ளது. இந்த பிராந்தியத்தில் மிக நீண்ட ஜனநாயக வரலாற்றை கொண்ட நாடு என்ற பெருமை எமக்கே உண்டு. அவ்வாறானதொரு நாட்டுக்கு எவரும் நல்லாட்சியினைப் பற்றி பாடம் புகட்ட வேண்டிய அவசியமில்லை. ஒரு நாடு என்ற வகையில் நாம் இப்போது மிகவும் சிறந்த இடத்தைப் பிடித்துள்ளோம். அது தொடர்பான அங்கீகாரங்களை கூட வெளிநாடுகள் எமக்கு வழங்கி இருக்கின்றன. ஆகையால் எதிர்க்கட்சி கூறும் இந்த விடயங்கள் உள்நாட்டிலும் சரி வெளிநாட்டிலும் சரி எடுபடாது.

இன ஒற்றுமையினை ஏற்படுத்துவது பற்றிய உங்கள் கருத்து என்ன?

முப்பது வருட கால யுத்தம் முடிவிற்கு வந்ததன் பின் அடுத்தபடியாக இன ஐக்கியம் மற்றும் ஒற்றுமை ஆகியனவே முக்கியத்துவம் பெறுகின்றது. சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் இனரீதியாக பிளவுபடாது ஒற்றுமையாகவும் நாம் அனைவரும் இலங்கையர் என்ற எண்ணத்துடனும் வாழ்வதே எமது எதிர்காலத்தை வளமாக்க உதவும். இந்த நிலைமையினை கட்டியெழுப்ப வேண்டிய பாரிய பொறுப்பு எம் அனைவருக்கும் இருக்கின்றது. ஆகையால் நாம் அனைவரும் நாட்டைப் பற்றிய எண்ணத்துடன் நாட்டின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப செயற்பட வேண்டும். சில தீய சக்திகள் இங்கே நிலவிவரும் இன ஒற்றுமையினை கெடுக்க முயன்று வருகின்றன. சூழ்ச்சிகள் மூலம் இன ஒற்றுமைக்கு பங்கம் விளைவிப்பது கூடாது. முஸ்லிம் நாடுகள் எமக்கு நீண்ட நாட்களாக உதவி வருகின்றன. ஜெனீவா மனித உரிமைகள் மகா நாட்டின்போதும் இந்த முஸ்லிம் நாடுகளே எமக்கு உதவியது. அதைக் கருத்தில் கொண்டு புரிந்துகொண்டு செயற்படுதல் நல்லது என்றே கருதுகின்றேன்.

ரவி ரத்னவேல்..

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.