புத் 65 இல. 07

நந்தன வருடம் மாசி மாதம் 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ரபியுல் ஆகிர் பிறை 05

SUNDAY FEBRUARY 17 2013

 

 

ரங்கலை பெரு டிவி'னில் மண்சரிவு அபாயம்

ரங்கலை பெரு டிவி'னில் மண்சரிவு அபாயம்

ரங்கலை அரச பெருந் தோட்டத்திற்குச் சொந்தமான ரங்கலை பெரு டிவிசன் லயன் குடியிருப்புகளை அண்மித்த மலைப்பகுதியில் மண்சரிவு அபாயம் குறித்து தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் விடுத்த எச்சரிக்கையை தோட்ட நிர்வாகம் கவனத்தில் கொள்ளாமல் இருப்பதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். தேசிய கட்டட நிறுவகம் 2010ஆம் ஆண்டு ரங்கலை தோட்ட பெரு டிவிசனில் மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் இங்கு வாழும் 25குடும்பங்களை இப்பிரதேசத்தை விட்டு வெளியேறுமாறும் அறிவித்தது. மூன்றாண்டுகள் கடந்தும் இன்றுவரை மக்கள் இடம்பெயராமல் தொடர்ந்து அந்த லயன் குடியிருப்புகளிலேயே வாழ்ந்து வருகின்றனர்.

இது தொடர்பில் தோட்ட நிர்வாகத்திடம் பல தடவைகள் முறையிட்டும் புதிய குடியிருப்புக்களை அமைத்துக்கொள்வதற்கான காணிகளை வழங்காமல் எதுவித அக்கறையுமின்றி இருப்பதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

மண்சரிவு அபாயம் நிலவுவதால் தமக்கு வேறு இடத்தில் காணியை ஒதுக்கித்தருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மெததும்பர பிரதேச சபை மற்றும் மெததும்பர பிரதேச செயலகம் போன்ற அரச தாபனங்களிடம் விடுத்த வேண்டுகோளும் பலனளிக்கவில்லை. மேற்படி அரச தாபனங்கள் இம்மக்களுக்கான மாற்று குடியிருப்புக்களை பெற்றுக் கொடுப்பதில் எதுவித அக்கறையும் கொள்வதாகத் தெரியவில்லை. அண்மையில் பெய்த மழையால் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கிய இம்மக்கள் வேறு இடங்களுக்குச் செல்ல வழியின்றி அச்சத்தின் மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். மழை காரணமாக பாரிய வெடிப்புகள் இப்பிரதேசத்தில் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்திக்கது. அண்மையில் பெய்த அடைமழையால் தற்காலிகமாக இடம்பெயர்ந்தோருக்கு அரசாங்கம் பல்வேறு நிவாரணங்களை வழங்கியபோதும் மெததும்பர பிரதேச சபை மற்றும் மெததும்பர பிரதேச செயலகம் ஆகியன பாதிக்கப்பட்ட தோட்ட மக்களுக்கு எதையும் வழங்கவில்லை. அதேவேளை அயலிலுள்ள கிராமப்பகுதி மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட்டன. ரங்கலையைச் சேர்ந்த இரு உறுப்பினர்கள் மெததும்பர பிரதேச சபையில் அங்கம் வகிக்கின்ற போதிலும் தோட்டப்பகுதி மக்களுக்கு நிவாரணப் பொருட்களை பெற்றுக்கொடுக்க தவறிவிட்டனர்.

இந்நிலை தொடருமானால் இக்குடியிருப்புகளில் வாழும் பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கை மிகவும் கவலைக்குரியதாகவே இருக்கும். எனவே தோட்ட நிர்வாகமும் அரச நிறுவனங்களும் கவனயீன போக்கை விடுத்து மக்கள் நலனில் அக்கறை செலுத்த வேண்டுமென அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.