புத் 64 இல. 12

கர வருடம் பங்குனி மாதம் 05ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 25

SUNDAY MARCH 18  2012

 
சுவையான இலக்கியத் திறனாய்வுகள்

சுவையான இலக்கியத் திறனாய்வுகள்

ஒரு பார்வை

gpரபல திறனாய்வாளர் கே. எஸ். சிவகுமாரன் தனது 75 ஆவது வயது நிறைவையொட்டி, ஒரு சிறப்பு நூலை வெளியிட்டுள்ளார். சமீபத்தில் சென்னையில் 35 ஆவது வருடமாக நடைபெற்ற மாபெரும் புத்தகக் கண்காட்சியில், மணிமேகலை பிரசுரமாக இந்நூலும் வெளியிடப்பட்டது. மணிமேகலை பிரசுரங்களின் முதற்பிரதி பொதியை, நம் புரவலர் ஹாஷிம் உமரே பெற்றுக் கொண்டார் என்பது கவனிப்புக்குரியது. நம் நாட்டில் தமிழ்- முஸ்லிம், சிங்கள நூலாசிரியர்களின் நூல் வெளியீட்டு விழாக்களில் முதற் பிரதிகளை வாங்குவதில் தமிழ் கூறும் நல்லுலகில் இதுகாறும் எவரும் செய்யத் துணியாத சாதனையைப் படைத்து வரும் புரவலர் ஹாஷிம் உமர், நம் நாட்டு திறனாய்வாளர் ஒருவரின் சிறப்பு நூலை, நம் மண்ணிலன்றி தமிழ் நாட்டில் இடம்பெற்ற பெருவிழாவொன்றில் பெற்றுக் கொண்டமை சிறப்பம்சமாகும்.

மேற்கண்ட சிறப்புக்களின் சீர்வரிசைக்குரிய நூலே. ‘சுவையான இலக்கியத்திறனாய்வுகள்” எனும் தலைப்பிலான திறனாய்வு ஆக்கங்களின் தொகுப்பாகும்.

“சுவையான இலக்கியத் திறனாய்வுகள்” என்னும் இந்நூலைத் தொட்டதும், திறந்து பார்க்கும் உணர்வு, தானே ஏற்படுகிறது. கிரவுண் சைஸ் (12 தர 18 செ. மீ) அளவில் 182 பக்கங்களில் 35 மகுடங்களில் அவ்வப்போது பல்வேறு இதழ்களில் திறனாய்வு செய்யப்பட்ட ஆக்கங்களை உள்ளடக்கிய பல்சுவை நூலாக, மேற்படி நூல் நம் சிந்தனைக்கு விருந்து படைக்கின்றது. நம் வாசகர்கள் குறிப்பாக நம் இளம் தலைமுறை பேனாக்காரர்கள் அறிந்த- அறியாத பல தகவல்களை, ஓர் ஆவணக்குறிப்பேடாக இந்நூல் வழங்குகின்றது எனத் துணிந்துரைக்கலாம்.

நூலின் உள்ளடக்க மகுடங்களின் வரிசைக்குள் வராத முதற் தலைப்பு நூலாசிரியரின் விளக்கக் கூற்று ஆகும். இது நூலாசிரியரின் பன்முக இலக்கியப் பங்களிப்புக்களின் விசாலத்தின் விலாசமாக அமைந்திருப்பதுடன், தமிழ் நாட்டு வாசகர்களுக்கு நல்லதோர் அறிமுகமாகவும் திகழ்கின்றது. வரிசையின் முதல் மகுடமான “நான் ஏன் எழுதுகிறேன்?” நூலாசிரியரின் இலக்கிய நோக்கையும் போக்கையும்- அவரது பேனா பயணிக்கும் திக்கையும்- அவரது எழுத்துக்கள் ஏற்படுத்தும் எதிரொலியையும் சாங்கோபாங்கமாக இலக்கிய உலகில் சமப்படுத்துகின்றது. சரிந்து பார்க்கும் கண்களுக்கு முதல் அத்தியாயம் ஒரு கலங்கரை விளக்கமாகவும் ஒளி வீசுகின்றது.

நூலின் சிறப்புக்களைத் தொட்டுக்காட்ட பல மகுடங்களின் கீழ் தரப்பட்டுள்ள பல விஷயங்கள் அணிவகுக்கின்றன. எனினும் பதச்சோறாக ஓரிரு கருத்துக்களை மட்டும் இங்கு பரிமாற விழைந்தேன். பந்தியில் அமரும்படி பவ்வியமாய் அழைக்கிறேன். வரிசையில் 5வது மகுடம் ‘கவிதைக்கு இலக்கணம் உண்டா?” என்பது. இது கவிதை பற்றி மேனாட்டு கவிஞர்கள் பலரின் சிந்தனைகளின் நுட்பங்களை விவரிக்கின்றது. “கவிதையும் அரசியலும்” அடுத்து வரும் அத்தியாயமாகும்.

இது அரசியல் கவிதை என்றால் என்ன? என விளக்கத் துணிந்து மக்களின் பிரச்சினைகளைப் பேசும் கவிதைகளை சிலாகித்து விதந்துரைக்கின்றது. அரசியலை காண முடியாதவாறு அரசியலே கவிதையாக வேண்டும் என சொல்லப்பட்ட தொனி சிந்தனைக்குரியது. ரஷ்ய ஞானியும் எழுத்தாளருமான லியோ டோல்ஸ்டோய் பற்றி திறனாய்வாளர் கலைமுகம் 50ஆவது சிறப்பிதழில் எழுதிய ஆக்கம், 9வது அத்தியாயமாகப் பல்வேறு தகவல்களை தாராளமாகத் தருகிறது என்ற போதும், லியோ டோல்ஸ்டோய் பற்றித் தெரிந்து கொள்ள இவை மாத்திரம் போதாது. இன்னும் நிறைய விடயங்கள் அவரைப் பற்றி அறிவதற்கு உண்டு என நூலாசிரியர் அத்தியாய இறுதியில் கூறியிருப்பது, தேடல் இன்னும் தொடர வேண்டும் என்பதை சொல்லாமற் சொல்கிறது.

நாம் பெருமைப்படத்தக்க ஓர் ஆய்வாளரான கந்தையா சண்முகலிங்கம் எழுதிய ‘அபிவிருத்தியின் சமூகவியல்’ என்ற நூலுக்கென நூலாசிரியர் எழுதிய முன்னுரை 11ஆவது மகுடமாக மணம் வீசுகின்றது. நூலின் குணநலன்களை சிறப்பித்துக் கூறும் நூலாசிரியர், ஆய்வாளர் கந்தையா சண்முகலிங்கத்தின் மேதாவிலாசத்தையும் மெச்சுகின்றார்.

கிழக்கிலங்கையில் ஒரு காலத்திய சிறந்த சிறுகதை எழுத்தாளரான மூத்த படைப்பாளியாம் அ. ஸ. அப்துல் ஸமத் எழுதி வெளியிட்ட ‘எனக்கு வயது பதின்மூன்று’ என்ற சிறுகதைத் தொகுதியை திறனாய்வு செய்த நூலாசிரியர் இலங்கை முஸ்லிம்களின் தமிழ்த் தொண்டினையும் சமகால இலக்கியப் பங்களிப்புக்களையும் நேர்பார்வையோடு 15வது மகுடத்தில் விவரித்திருக்கின்றார். அதேவேளை சமகால எழுத்தாளர் எம். ஐ. எம். முஸம்மில் எழுதிய கதைகள் பற்றியும் சிரேஷ்ட சிறுகதை எழுத்தாளர் மு. பiரின் சிறுகதை பங்களிப்பு குறித்தும் தன் பார்வையை செலுத்தியிருக்கின்றார்.

யாழ்ப்பாணப் பெண்ணின் ஆங்கில நூல் தொடர்பாக கருத்துரை செய்துள்ள நூலாசிரியர் சிவகுமாரன், ஈழத்து சிறுகதைத் திறனாய்வு பற்றியும், மாறிவரும் திரைப்படத் திறனாய்வு முறையைப் பற்றியும் நல்ல பல தகவல்களை குறித்துள்ளார். நம் நாட்டின் முதுபெரும் எழுத்தாளரான ‘மல்லிகை’ ஆசிரியர் டொமினிக் ஜீவா பற்றியும் இளம் ஈரானியப் பெண் நெறியாளர் பற்றியும் சுவிட்சர்லாந்திலிருந்து ஒரு தமிழ்ப் படம் திரையிடப்பட்டது பற்றியும், இதழியல் பற்றியும் நூலாசிரியர் விரிவாக பல விஷயங்களை வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளார்.

இந்த திறனாய்வு நூலின் 35ஆவது மகுடமான இறுதி அத்தியாயம் ‘ஹாஷிம் ஓமர்: தவிர்க்க முடியாத பரோபகாரி’ எனும் தலைப்பில், நிகழ்கால நிதர்சனமொன்றினை நூலாசிரியர் உரத்துக் கூறியுள்ளார். தமிழிலக்கியப் பரப்பில் சடையப்ப வள்ளல் தொடக்கம் சீதக்காதி வரை பலநூறு பரோபகாரிகளைப் பற்றி படித்திருக்கின்றோம். ஆனால்- இவர்களில் எவரொருவரையும் நம்மில் எவரும் நேரில் பார்த்ததில்லை.

மேற்கண்ட வள்ளல்களின் மொத்த உருவாக நம்மில் ஒருவர்- நம் கண்முன்னே தமிழிலக்கிய முயற்சிகளுக்கு வாரி வழங்கி வருகின்றார். அவர்தான் புரவலர் ஹாஷிம் உமர் என்பதை தமிழிலக்கிய உலகம் நன்கறியும். இதை உறுதி செய்யும் வகையில் பிரபல திறனாய்வாளர் கே. எஸ். சிவகுமாரன் “தவிர்க்க முடியாத பரோபகாரி’ எனப் பொருத்தமான தலைப்பிட்டு அர்த்தப்படுத்தியுமிருக்கிறார்.

ஆம்... புரவலர் ஹாஷிம் உமர் தவிர்க்க முடியாத பரோபகாரி மட்டுமல்ல , தட்டிக்கழிக்க முடியாதவரும், தடை செய்ய முடியாதவரும் ஆவார். நம் வண்ணத்தமிழ் மேலும் வனப்பும் வசீகரமும் பெற, புரவலர் ஹஷிம் உமர் சோர்வுறாது வாரி வழங்கி வரும் உதவி, மேலும் தொடர வாழ்த்துவோம். “சுவையான இலக்கியத் திறனாய்வுகள்” எனும் தரமான இந்நூலின் அட்டைப்படமே சற்று மனச் சிணுங்கலை ஏற்படுத்துவதை இங்கு சத்திய எழுத்தாளனால் தொட்டுக்காட்டாமல் இருக்க முடியவில்லை. ஒருவர் கணனி முன்னமர்ந்து எதையோ எழுதிக் கொண்டிருப்பது போன்ற படம் அட்டையை ஆக்கிரமித்துள்ளது. அந்த ‘ஒருவர்’ நூலாசிரியரைத்தான் உருவகப்படுத்துகின்றார்.

அந்த ‘ஒருவர்’ தன் முதுகைத்தான் காட்டுகிறாரே தவிர, தன் முகத்தையல்ல. முகத்தைக் காட்டினால், அது மங்கலகரமாக இருக்கும் இந்த அட்டைப்பட அமைப்பு, நூலாசிரியரின் விருப்பா? அன்றி மணிமேகலையின் மறுப்பா? எனப் புரியாமல் வாசகன் விழிப்பான் என்பது நிச்சயம். சற்று எட்டி யோசித்திருக் கலாமே!

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.