புத் 64 இல. 12

கர வருடம் பங்குனி மாதம் 05ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 25

SUNDAY MARCH 18  2012

 
திறனாய்வுக் கலையில் வளர்ச்சிப் போக்கு

திறனாய்வுக் கலையில் வளர்ச்சிப் போக்கு 2

மார்க்சியத் திறனாய்வு

சமூக இருப்பை அடியொற்றி இலக்கியங்களை விளக்குதல் மார்க்சியத்திலே தலையாய முனைப்புப் பெறுகின்றது. கட்புலனாகும் உலக உறுநேர்வுகளை விஞ்ஞான வழியிலும், தருக்க வழியிலும் தரிசித்தல் மார்க்சியத்தில் முன்னெடுக்கப்படு கின்றது. மெய்யியலாளர் உலகின் உறுநேர்வுகளை விளக்க முயன்றனர். ஆனால், மார்க்சியம் உலகத் நியதிகளை மாற்றியமைப்பதற்குரிய முன்மொழிவுகளைத் தந்தது. வரலாற்றை வர்க்கப் போராக மார்ச்சியம் விளங்கியமை வெறுமனே வாய்ப்பாடு போன்ற கருத்து அன்று. அதனை வரன் முறைப்படுத்திய தருக்க நோக்கிற் தெளிவுபடுத்தப்பட்டுள்ளமை குறப்பிடத்தக்கது. மார்க்சியம் குறிப்பிடும் பறித்தற் செயற்பாடு (Exploitation) சமகாலத்திலே துல்லியமாக வெளிப்படுத்தலைக் கண்டறியக் கூடியதாகவுள்ளது.

பறித்தலின் நேரடியான வெளிப்பாடாக உருவாகும் மனித அன்னிய மயப்பாடு இலக்கிய ஆக்கங்களுக்குரிய பல பரிமாணங்களைத் தூண்டிய வண்ணமுள்ளது. பொருளுற்பத்தி முறை ஏற்படுத்தும் மனித அசைவுகள் அல்லது சமூக நிலைப்பட்ட அசைவியம் (Mobility) இலக்கிய ஆக்கங்களுக்குரிய புதிய தூண்டுதல்களைத் தந்த வண்ணமுள்ளது. மார்க்சிய சமூக அமைப்பின் மாதிரிகையாக்கம், அடிக்கட்டுமானம் மற்றும் மேலமைந்த வடிவங்கள் என்பவற்றால் விளக்கப்படும். சமூகத்தின் அடிக்கட்டு மானமாக பொருண்மிய உற்பத்தி முறைமை, பங்கீடு மற்றும் பரிமாற்றம் ஆகியவை அமைந்துள்ளன. அதன் மேலமைந்த வடிவமாக கருத்துருவாக்கம், கலை இலக்கியங்கள், சமயம், சட்டம் முதலியவை அமைந்துள்ளன.

மார்க்சிய இலக்கிய நோக்கு இறுகிய வைராக்கியப் போக்கைக் கொண்டிராது இதமான நெகிழ்ச்சிப் பாங்கானது. பொருண்மிய நிலைகள் இறுதிநிலை அடிக்கட்டுமானமாக இருந்தாலும் இலக்கியங்கள் அதன் தொடர்ச்சியில் நெகிழ்ச்சிப் பாங்கானவையாக இடம்பெறக்கூடியவை. இவ்வாறு கூறும்பொழுது இறுதிநிலைத் தீர்மானிப்பை உருவாக்கும் பொருண்மியக் காரணியின் விசைகளை மறந்து விடலாகாது. அந்த விசைகள் நேரடியாகத் துலங்காது மறை பொருட்களாக இருக்கும் நிலையில் அவற்றின் தீர்மானிப்பு இல்லை என்று கூறுதல் பொருத்தமான அறிக்கை முறைமையாகாது.

மார்க்சிய இலக்கிய நோக்கு மட்டும் இலக்கியத்தைப் பிரசாரமாக்கியுள்ளது என்பது தவறான ஓர் அணுகுமுறையாகும். மார்க்சிய நோக்குடையவராக இருந்தாலென்ன, எதிர்மார்க்சிய நோக்குடையவராக இருந்தாலென்ன அவர்களின் கருத்தியல் இலக்கிய வடிவில் எங்கோ ஒரு நிலையில் வெளிப்படும் வாய்ப்பு இருத்தலை நிராகரிக்க முடியாது. இவ்வாறான தெளிவான புலக்காட்சி நிலையையும் மார்க்சியமே வெளிப்படுத்தியது.

மார்க்சியம் கலை இலக்கியங்களில் நடப்பியலின் (Realism) நோக்கைக் குறிப்பிடுகின்றது. அக்கருத்தியலை மேலும் கூர்மைப்படுத்தி சோசலிச நடப்பியலை வலியுறுத்துகின்றது. கலை இலக்கியங்களில் சோசலிச நடப்பியல் புதிய பரிமாணங்களைத் தோற்றுவித்தது. நாவல் மற்றும் திரைப்படத் துறைகளில் சோசலிச நடப்பியல் புதிய பரிமாணங்களை ஏற்படுத்தி வருகின்றது. சோவியத்தில் 1905 ஆம் ஆண்டின் போது இலக்கியம் கட்சியின் கருவியாகப் பயன்படுத்தப்பட்டமையானது குறித்த வரலாற்றுக் காலகட்டத்தின் தேவையைப் புலப்படுத்துவதாக அமைந்தது. பின்னர் அந்த நிகழ்ச்சி மார்க்சியத் தரிசனத்தைக் கொச்சைப்படுத்தி விட்டது என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது.

எதிர்மார்க்சிய நோக்குடையவர்கள் இலக்கியம் என்பது புற விதிகளுக்கு உட்படாத தனித்துவமுடையதென விளக்குகின்றனர். ஆனால், தருக்க வழியாக இக்கருத்து அரண் செய்யப்படாதிருத்தலைச் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. விநோதப் பண்புகளை உருவாக்குதல் (Making Strange) பழக்கமின்மையாக்கல் (Defamiliarisation) முதலிய உளச் செயற்பாடுகளை உள்ளத்தின் நேர் மற்றும் எதிர் முரண்பாடுகள் வழியாகவே மார்ச்சிய திறனாய்வு நோக்குகின்றது. ஆனால் எதிர்மார்க்சிய நோக்குடையோர் அதனை இலக்கியங்களுக்குரிய தனித்துவ விதிகளின் தோற்றப்பாடு என்று கருதுகின்றனர்.

மார்க்சிய அழகியல் பற்றி ஆராயும் முன்னெடுப்புக்கள் 1921 ஆம் ஆண்டிலே ஜேர்மனியில் தோற்றுவிக்கப்பட்ட பிராங்போட் சிந்தனா கூடத்தினால் மேற்கொள்ளப்பட்டன. பிராட்டிசத்தையும், மார்க்சியத்தையும் இணைப்பதற்குரிய அறிக்கை முயற்சிகள் அவர்களால் அணுகப்பட்டன. வால்டர் பென்ஜமின், கேர்பட் மார்க்கஸ், தியோட்டர் அடோர்னா, பிரெச்ற் முதலியோரின் கலை இலக்கியச் சிந்தனைகள் மார்க்சியத்தை அடியொற்றிய பல நிலையான வெளி வீச்சுகளின் அனுபவங்களாக முகிழ்ந்தெழுந்தன.

மார்க்சியச் சிந்தனைகளை அடியொற்றியும், மாறுபட்டும் பிரான்சிய மார்க்சியவியலாளராகிய லுயி அல்துஸ்ஸரின் அமைப்பியல் சிந்தனைகள் அமைந்தன. சமூக அடிக்கட்டு மானத்துக்கும் மேலமைந்த வடிவங்களுக்குமுள்ள தொடர் புகளை மார்க்சியம் அறிகை நிலையிலே தருக்கப்படுத்தியமை ஏதிர்மார்க்சியவாதிகளால் ஒற்றைப் பரிமாணத்திலே சுருக்கப் படுத்தப்பட்டும் கொச்சைப்படுத்தப்பட்டும் திரிபுபடுத்தப்பட்டும் வந்தன. குறுகிய வாய்ப்பாடுகளுக்குள் மார்க்சியத்தை இயந்திரப் பாங்கானதாகச் சுருக்கிவிடும் செயற்பாடுகளும் அவர்களால் முன்னெடுக்கப்பட்டன. அத்தகைய அறிமுறையின் செல்வாக்குகள் அமைப்பியலை வலியுறுத்தியோரிடத்தும் ஏற்பட்டன. (மார்க்சியத்தைத் திரிபுபடுத்துவதற்கும் கொச்சைப்படுத்துவதற்கும் மேலைநாட்டில் நுண்மதியாளர் கூலிக்கு அமர்த்தப்பட்டனர் என்ற செய்தியும் உண்டு.)

(அடுத்த வாரம் தொடரும்)

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.