புத் 64 இல. 12

கர வருடம் பங்குனி மாதம் 05ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 25

SUNDAY MARCH 18  2012

நேட்டோவின் நிலைப்பாட்டில்

நேட்டோவின் நிலைப்பாட்டில் ஆப்கானின் அடுத்த கட்டம்

ஆப்கானிஸ்தானில் நேட்டோ படைகளின் வெளியேற்றம் ஏற்கனவே இரண்டு நாடுகளும் திட்டமிட்டபடி 2013ல் தொடங்கி 2014 கடைசிப்பகுதியிலே முடியவுள்ளது.

எஞ்சியுள்ள காலங்களில் நேட்டோ வீரர்களை ஆப்கானிஸ்தானில் வைத்துக் கொள்வதில் காபுலும், வொஷிங்டனும் கடுமையான சாவல்களை எதிர்கொள்ள வேண்டி வரும். நேட்டோ வீரர்களின் பொறுப்பற்ற நடத்தைகள் போக்குகள் என்பன இஸ்லாமியர்களை ஆத்திரம் கொள்ளச் செய்கின்றன. ஏற்கனவே புனித குர்ஆன் பிரதிகளை எரித்தமை சுட்டுக் கொல்லப்பட்ட சடலங்கள் மீது சிறுநீர் கழித்தமை உள்ளடங்கலான பல்வேறு விடயங்களில் நேட்டோ, அமெரிக்கா, மேற்குலகம் மீது முஸ்லிம்கள் வெறுப்புடன் உள்ளமை தெரிந்ததே.

இந்நிலையில் சென்ற வாரம் ஆப்கானில் ஹெல்மன்ட் மாகாணத்தில் 16 முஸ்லிம்கள் அமெரிக்க வீரரினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். பெண்கள் சிறுவர்கள் முதியவர்களே இந்த வீரரின் வெறித்தனமான துப்பாக்கிச் சூட்டில் பலியாகினர். வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த இந்த அப்பாவிகள் இப்படி ஒரு போர் வெறியனால் கொல்லப்படுவோம் என்று நினைத்திருக்க மாட்டார்கள். மேற்குலகின் வழமையான ஊடக தார்மீகத்தை பயன்படுத்தி இப்பொது மக்களையும் தலிபான்கள் என முத்திரை குத்திக் காட்ட எடுக்கப்பட்ட முயற்சிகள் படுதோல்வியில் முடிந்தன.

துப்பாக்கி ரவைகள் துழைக்கப்பட்டு வீதியில் கொல்லப்பட்டுக் கிடந்த 16 பேரும் பொது மக்களே என்பதற்கான சான்றுகள் சாட்சிகள் அப்பட்டமாக கண்டுகொள் ளப்பட்டுள்ளன. ஹெல்மன்ட் மாகாணம் தலிபான்க ளின் செல்வாக்குள்ள பிரதேசமாக இருந்தாலும் இவர்கள் கொல்லப்பட்ட இடம் நேட்டோ வீரர்களின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள பகுதி. இன்னும் சொல்லப்போனால் விமான வீச்சாக இருந்தால் இலக்குத் தவறி விட்டது என்று எதையாவது சொல்லி நேட்டோ தலைமை தப்பித்துக் கொள்ளும்.

இந்த பாரிய பொறுப்பற்ற கொலையிலிருந்து தப்பிக்க முடியாத அமெரிக்கா பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு விட்டது. இக்கொலையை புரிந்த பாதக வீரன் அவசரமாக குவைத்துக்கு அனுப்பட்டுள்ளார். இவருடைய உடல், மன நிலையை மருத்துவ சோதனைக்குட்படுத்த வேண்டியுள்ளதாக நேட்டோ சொல்கின்றது. இவ்வாறான துணிகர துப்பாக்கி வேட்டுக்களால் குலையும் கொத்துமாக மக்கள் கொல்லப்படுவது மேற்குலகின் சாதாரண விடயமாகும். பாடசாலை மாணவன் கைத்துப்பாக்கியால் சக மாணவர்களை சுட்டுக் கொல்வது, களியாட்ட விடுதிக்குள் தனிநபர் கூட்டம் கும்பலாக உள்ளோரை சுட்டுக் கொல்வதும் தனிப்பட்ட குரோதங்களுக்கான மனித வேட்டையாக கொள்ளப்படுகின்றன. ஆனால் நேட்டோ வீரர்களின் செயற்பாடுகள் ஆப்கான் மண்ணில் ஆத்திரமூட்டுபவையாக உள்ளன. தலிபான்களின் கெரில்லா முறையிலான போர் யுத்திகளை எதிர்கொள்ள முடியாமல் குறிப்பாக ஹெல்மன்ட் மாகாணத்தில் நேட்டோ படை தடுமாறுகின்றது.

களமுனையிலுள்ள சக வீரர்கள் வீதியோர அல்லது கெரில்லா முறையிலான தலிபான் களின் தாக்குதல்களால் கொல்லப்பட்டால் அதற்கான பழிவாங் கலாக ஆப்கான் பெண் களை அல்லது சிறுவர் களை கொல்வது அல்லது மத உணர்வுகளை புண்படுத்துவது போன்ற வேலைகளையே நேட்டோ படையினர் மேற்கொள்கின்றனர்.

இவ்வாறான பழிவாங்கல் அல்லது புண்படுத்தும் வேலையாகவும் இக்கொலைகளை கருதமுடியாதுள்ளது. ஏனெனில் அமைதியாக இருந்த பிரதேசம் அப்பாவி மக்கள் சாதாரணமாக நிராயுதபாணியாக நடந்து செல்லும் பாதையோரத்திலே நின்ற பொது மக்கள் 16 பேரும் குறிவைத்து சுடப்பட்டுள்ளனர்.

எனவேதான் ஆப்கானிலுள்ள நேட்டோ வீரர்களின் மன நிலைகள் மாற்றமடையும் முன்னர் அவர்களை அங்கிருந்து வெளியேற்ற வேண்டுமென்ற விருப்பத்தில் காபுலும் வொஷிங்டனும் உள்ளது. ஆனால் நேட்டோ வெளியேறினால் ஆப்கானின் நிலை என்னவாகும். ஹமீத் அல்கர்ஸாயின் அரசு நேட்டோ வீரர்களை நம்பியே உள்ளது. ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட நேட்டோ வீரர்களே ஹமீட் கர்ஸாவின் அரசாங்கத்தை பாதுகாத்து நிற்கின்றனர்.

கோபாவேஷப்பட்டு ஆப்கான் ஜனாதிபதி நேட்டோ வீரர்களை வெளி யேறுமாறு கூறிவிட்டார். ஆனால் உண்மையில் அவர் இப்படைகள் வெளியேறுவதை விரும்புவாரா என்பதை சற்று ஆழமாகவே யோசிக்க வேண்டியுள்ளது. அதேபோல அமெரிக் காவும் படைகளை வெளியேற்ற விருப்ப முடன்தான் உள் ளது என்றும் சொல்லமுடியாது. மீண்டும் ஒரு முறை ஆப்கானிஸ் தான் தலிபான்களிடம் வீழ்வதை மேற்குலகம் விரும்பப்போவதில்லை. அவ்வாறு ஆப்கான் தலிபான்களிடம் வீழ்ந்தால் அடுத்ததாக பாகிஸ்தானும் விழக்கூடிய வாய்ப்புகள் வரும். அங்குள்ள அனைத்து அணு உலைகளும் தலிபான்களிடம் வந்துவிட்டால் மேற்குலகின் நிம்மதியோ கெட்டுவிடும்.

இவ்வாறான பல சிக்கல் நேட்டோ படையின் வெளியேற்றத்தில் உள்ளது. ஆப்கானில் 16 பொது மக்கள் கொல்லப்பட்டதை கண்டிக்கும் பேரணிகள் ஆர்ப்பாட்டங்கள் இலேசில் அடங்கிவிடாது. குர்ஆனை எரித்த விடயம் 40 பேரின் உயிரை காவுகொள்ளும் அளவுக்கு நிலைமை மோசமடைந்துள்ளது. இந்த விடயம் எதுவரை செல்லப்போகுதோ தெரியவில்லை. இவற்றையெல்லாம் எண்ணிப்பார்த்து அதரிப்பதற ஆப்கானுக்கு ஓடிவந்த அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் யோன் பெனிட்டா ஹெல்மன்ட் மாகாணத்தில் படையினர் மாநாடொன்றை நடத்தினார். இவரது பாதுகாப்புக்கு பொறுப்பாய் இருந்த அதிகாரியின் கைத்துப்பாக்கியை வெளியே வைக்குமாறு கூட்டத்தில் கலந்து கொண்ட ஆப்கான் வீரர்களால் வலியுறுத்தப்பட்டது.

இந்நிலைமைகள் நேட்டோ படையினரை ஆப்கான் வீரர்களும் நம்பத்தயாரில்லை என்பதையும் காட்டுகிறது. இவ்வாறு சென்றால் நேட்டோ படையினரின் அணியில் ஆப்கான், அமெரிக்க வீரர்களே தங்களுக்குள் துப்பாக்கிச் சமரில் ஈடுபட நேரிடலாம். இவ்வாறான நிலைமைகள் ஏற்கனவே ஆப்கானில் ஆங்காங்கே நடந்துள்ளன இவை வெளியே வரவில்லை. இந்த இரண்டு படையினரிடையே நம்பிக்கையை கட்டியெழுப்புவது சம்பந்தமாகவே லியோன் பெனிட்டா இங்கு உரையாற்றினார். அமெரிக்க வீரர்களுக்குள்ள குற்றவியல் விடுபாட்டுரிமையை ரத்துச் செய்ய வேண்டுமென ஆப்கான் மூத்த இராணுவத் தலைவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

எவ்வாறாயினும் நேட்டோ வீரர்களின் பணி தொடர ஆப்கான் அரசு வாய்ப்பளிக்க வேண்டுமென்பதே லியோன் பெனிட்டாவின் வேண்டுகோள். சடலங்களை பார்வையிட சென்ற ஆப்கான் ஜனாதிபதியின் சகோதரர் பொதுமக்களால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா இக்கொலைச் செய்து கேட்டு மனமுடைந்து போயுள்ளார். ஏற்கனவே அமெரிக்காவோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள தலிபான்களின் மற்றொரு பிரிவினர் பேச்சுவார்த்தையில் இருந்து விலகிவிட்டனர்.

அருகாமையில் உள்ள ஈரான் இவ்வாறான நிலைமைகளை சாதகமாக்கக் கூடும். பேசி ஹமித் கர்ஷாயியின் நிர்வாகத்தை அமெரிக்கா சாராத அரசாக முன்னெடுக்க ஈரான் முயற்சிக்கலாம் என்ற விவாதங்களும் உண்டு.

ஆப்கான் கொலையை அடுத்து டுபாய் உள்ளிட்ட முஸ்லிம் அரபு நாடுகளுக்கு லியோன் பெனிட்டா விஜயம் செய்தமை இவ்வாறான முன்னெடுப்புக்களை தோல்வியடையச் செய்வதற்கே. தேவையான நேரங்களில் மாத்திரம் நேட்டோ படைகளை வெளியில் எடுக்கவும், ஏனைய நேரங்களில் முகாமிற்குள் முடக்கவும் இனிமேல் திட்டங்கள் வகுக்கப்படலாம்.

தலிபான்களை தேடுதல், முற்றுகையிடல், பரிசோதனை செய்தல் போன்ற விடயங்களில் ஆப்கான் படைகள் ஈடுபடுத்தப்படலாம். இவ்வாறான நிலை எதுவரைத் தொடருமோ தெரியாது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.