புத் 64 இல. 11

கர வருடம் மாசி மாதம் 28ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 18

SUNDAY MARCH 11,  2012

 

முக்கோணத் தொடர் ஆஸி. வசம்

முக்கோணத் தொடர் ஆஸி. வசம்

சி. பி. முக்கோணத் தொடரை மிகுந்த போராட்டத்துக்கு மத்தியில் அவுஸ்திரேலிய அணி கைப்பற்றியது. கடந்த மாதம் 5ம் திகதி ஆரம்பமான மேற்படி போட்டித் தொடரில் லீக் போட்டி முடிவில் 19 புள்ளிகளுடன் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற அவுஸ்திரேலிய அணியும் இலங்கை அணியும் கடந்த 4ம் திகதி ஆரம்பமான மூன்று போட்டிகளைக் கொண்ட இறுதிப் போட்டியில் சந்தித்தன.

முதல் போட்டி மெல்போர்ன் நகரில் கெப்பா மைதானத்தில் நடைபெற்றது. நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற மைக்கல் கிளார்க் முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தை தனது அணிக்குப் பெற்றுக் கொடுத்தார். அதன்படி ஆரம்ப ஜோடியான டேவிட் வோனர்- மெத்தியூஸ் வாடே இலங்கை பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்து ஆரம்ப விக்கெட்டுக்காக 136 ஓட்டங்களைச் சேர்த்தனர். இதில் மெத்தியூஸ் வாடே 64 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். தொடர்ந்து அதிரடியில் கலக்கிய வோனர் 157 பந்துகளில் 13 பெளண்டரி, 2 சிக்சர்களுடன் 163 ஓட்டங்களைப் பெற்று கடைசியாக ஆட்டமிழ்ந்தார். அவுஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்புக்கு 321 ஓட்டங்களைப் பெற்றது. 322 என்ற வெற்றி இலக்கை நோக்கி ஆடிய இலங்கை அணி ஒரு கட்டத்தில் 144 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால் கடைசி வரிசையில் வந்த உபுல் தரங்கவும், நுவன் குலசேகரவும் ஜோடி சேர்ந்து வெற்றிக்காகப் போராடினர். குலசேகர 43 பந்துகளில் 3 சிக்சர், 7 பெளன்டரிகள் அடங்கலாக 73 ஓட்டங்களைப் பெற்றார். தரங்க 60 ஓட்டங்களைப் பெற்றார். இறுதியில் 49.2 ஓவர்களில் 305 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 15 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது. ஆட்டநாயகனாக கன்னி சதம் பெற்ற டேவிட் வோனர் தெரிவானார்.

இரண்டாவது இறுதிப் போட்டி அடிலைட் மைதானத்தில் 6ம் திகதி நடைபெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய ஆஸி. அணி சார்பாக டேவிட் வோனர் 100 ஓட்டங்களையும், தலைவர் மைக்கல் கிளார்க் 91 பந்துகளில் 5 பெளன்டரி, 4 சிக்சர் அடங்கலாக 117 ஓட்டங்களின் உதவியுடன் 6 விக்கெட் இழப்புக்கு 271 ஓட்டங்கள் பெற்றது. 272 என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ஆரம்ப முதலே அதிரடியில் கலக்கியது. தலைவர் மஹேல- டில்ஷான் ஜோடி ஆரம்ப விக்கெட்டுக்காக 176 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். இதில் மஹேல 80 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க டில்ஷான் 106 ஓட்டங்களைப் பெற்றார். 44.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. குமார் சங்கக்கார ஆட்டமிழக்காமல் 52 ஓட்டங்களைப் பெற்றார். ஆட்டநாயனநாக திலகரட்ன டில்ஷான் தெரிவானார். மூன்று போட்டிகள் கொண்ட இறுதியாட்டத்தில் 1-1 என்ற ரீதியில் சமநிலையில் இருந்த அணிகளின் வெற்றியைத் தீர்மானிக்கும் மூன்றாவது போட்டி அடிலைட் மைதானத்தில் 8ம் திகதி நடைபெற்றது. நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கை அணித் தலைவர் மஹேல அவுஸ்திரேலிய அணியைத் துடுப்பெடுத்தாடப் பணித்தார்.

இலங்கைப் பந்து வீச்சாளர்களின் துல்லியமான பந்துவீச்சில் தடுமாறிய அவுஸ்திரேலிய அணி 231 ஓட்டங்களையே பெற்றது. ஆரம்ப வீரர்களான வாடே 49 ஓட்டங்கள், வோனர் 48 ஓட்டங்களை ஆஸி. அணி சார்ப்பாக அதிகூடிய ஓட்டமாகப் பெற்றனர். பந்துவீச்சில் மஃரூப் 40 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் ஹேரத் 36 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டையும் கைப்பற்றினார். இலகுவான இலக்கைத் துரத்திய இலங்கை அணி மெக்கெயின் சிறந்த பந்து வீச்சுக்கு முகம் கொடுக்க முடியாமல் 48.5 ஓவர்களில் 215 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து 16 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. கடைசிவரை போராடிய உபுல் தரங்க 71 ஓட்டங்களைப் பெற்றார். ஆட்ட நாயகன் விருதைப் பெற்ற மெக்கெய் 28 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களைக் கைப்பற்றினார். தொடரில் ஆகக் கூடுதலான ஓட்டமாக 513 ஓட்டங்களைப் பெற்ற திலகரத்ன டில்ஷான் போட்டித் தொடரின் நாயகனாகத் தெரிவானார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.