புத் 64 இல. 11

கர வருடம் மாசி மாதம் 28ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 18

SUNDAY MARCH 11,  2012

 

ஓடும் ரயிpலில் அதிகாரி மர்ம மரணம்!

ஓடும் ரயிpலில் அதிகாரி மர்ம மரணம்!

பயணியுடன் ஏற்பட்ட தகராறு காரணமா?

எவரைக் கேட்டாலும் கிடைக்கும் பதில் நல்ல மனிதர், எவருக்கும் உதவுபவர், கடமையை நேர்மையாக செய்பவர் என்பதே. இவர் கடமையாற்றும் திணைக்கள ஊழியர்களும் இப்படியே கூறுகிறார்கள். இப்பேர்ப்பட்டவருக்கு ஏற்பட்ட மரணம் சகிக்க முடியாதுலுள்ளதாகக் கூறப்படுகிறது.

நாற்பத்தாறாம் இலக்க பதுளை தபால் சேவை புகையிரதம் மாலை ஆறுமணிக்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தை நோக்கி பயணத்தை ஆரம்பித்தது. கடந்த பல வருடங்களாக புகையிரத திணைக்கள மாளிகாவத்தை பிரிவில் கடமையாற்றினார். ஆர். எம். வீரசிங்க என்பவர். படுக்கை பிரிவுகளை பரிசோதிப்பது இவரது கடமை. பிங்கிரிய, பனாவெலையைச் சேர்ந்த இவர் அண்மையில் கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது இதர பரிசோதகர்கள் மற்றவர்களை பரிசோதித்துக் கொண்டிருந்தனர். பயணத்துக்கான அனுமதிச் சீட்டை பரிசோதிப்பதில் வீரசிங்கவுக்கு பயணியொருவருடன் வாக்குவாதம் ஏற்பட்ட விடயம் புகையிரதம் ‘கிரேட் வெஸ்டர்ன்’ புகையிரத நிலையத்தை நெருங்கும் போது ஏனைய ஊழியர்களுக்கு தெரியவந்தது. புகையிரதம் தரித்து நின்றதும் நிலைய அதிபரிடம் செல்ல தயாரானார் வீரசிங்க. இதனையறியாத புகையிரதம் பயணத்தை தொடர சமிக்ஞை செய்யும் அதிகாரி தம் கடமையை செய்தார்.

எமக்குக் கிடைத்த தகவலின்படி பிரயாணச் சீட்டை பரிசோதிப்பதில் ஏற்பட்ட பிரச்சினையை நிலைய அதிபரிடம் கூற வீரசிங்க சென்ற போது புகையிரதம் மீண்டும் பயணத்தை ஆரம்பிக்கவே திரும்பிவந்த இவர் புகையிரதத்திலேற இன்னும் சிலரும் இவருடன் ஏறியுள்ளனர்.

பதுளை- கொழும்பு புகையிரதத்தில் குழப்ப நிலையேற்பட்டுள்ளதாக தலவாகலை புகையிரத நிலையத்துக்கு தகவல் எட்டியுள்ளது. புகையிரதத்தினுள் வைத்து வீரசிங்க தாக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்தது. இவர் தாக்கப்படும் போது மனைவி, மற்றும் மூன்று மகள்களும் நினைவுக்கு வந்திருக்கலாம். அங்கு பலரிருந்தும் உதவிக்கு வந்திருக்கவில்லை. இவரை காப்பாற்ற ஒருவரேனும் முன்வராதது புதிராயுள்ளது என திட்டமிடல் பிரிவின் பணிப்பாளர் விஜய சமரசிங்க தெரிவித்தார்.

“என் கணவர் ஒரு அப்பாவி எவருக்கும் உதவும் பண்பு அவரிடமிருந்தது. நான் பெரிய மகளடன் கொழும்புக்கு சென்ற போது என் கணவர் ரயில் பெட்டிக்குள் அடித்துக் கொல்லப்பட்டுள்ளதையறிந்தேன்.’ என மனைவி ஏ. ஏ. சுபத்ரவதி தெரிவித்தார்.

புகையிரதம் தலவாக்கலையை அண்மித்த போது வீரசிங்க கீழே சாய்ந்த நிலையில் காணப்பட்டார்.

இப்போது நள்ளிரவு பன்னிரெண்டு மணியை தாண்டியிருந்தது. புகையிரதம் அட்டன் நோக்கி வந்தபோது வீரசிங்கவுடன் பிரச்சினையிலீடுபட்டவர்களை தேடி புகையிரத நலைய அதிகாரிகளும் ஊழியர்களும் குழுமியும் அங்கு ஒருவரையேனும் காண முடியவில்லை. சம்பவத்தை நேரில் கண்டவர்கள் ஒருவருமில்லையெனக் கூறப்படுகிறது. பொலிஸாரின் உதவியுடன் வீரசிங்கவை ரெயில் நிலைய ஊழியர்கள் திக்ஓய ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்றனர். அனுமதிக்கும் முன்னர் அவர் இறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. சோதனைகள் நடைபெற்றும் தடயங்களேதும் கிடைக்கவில்லை. புகையிரதத்தினுள் சுமார் நான்கு மணித்தியாலங்களாக இக்குழப்ப நிலையிலிருந்துள்ளதாகவும் இச்சமயம் புகையிரத இரண்டாம் வகுப்பு நித்திரை பிரிவில் ஊழியரொருவர் கடமையிலிருந்துள்ளாரெனவும் தெரியவந்தது.

நள்ளிரவில் நடைபெற்ற இச்சம்பவம் அதிகாலை ஐந்துமணியளவில் தெரியவந்துள்ளது. என் தம்பியுடன் நான் கையடக்க தொலைபேசியில் பேசிய போது தம்பிக்கு பதிலாக வேறொருவர் பேசினார். அவர் நித்திரையிலுள்ளாரென்றார். மீண்டும் நாம் தொடர்பு கொண்ட போது எம்மிருவரிடையே சிறிய பிரச்சினையேற்பட்டது. இப்போது உமது தம்பி நித்திரையிலுள்ளார். என் பணப்பர்சை உமது தம்பி என்னிடமிருந்து எடுத்தபோது நான் அவரின் கையடக்க தொலைபேசியை பறித்துக்கொண்டேன்” எனவும் அக்குரல் கூறியது. இக்குரலுக்குரியவன்தான் என் தம்பியை தாக்கியிருப்பான் என இறந்த வீரசிங்கவின் மூத்த சகோதரி ‘சோமா ரணசிங்க’ தெரிவித்தார்.

மகள்மாரான நதீஷா தரங்கனி மற்றும் ஷானிகா, வத்சலா ஆகியோர் தந்தையை இழந்து தாயுடன் தவிக்கின்றனர்.

“இறந்த வீரசிங்க சிறந்த குணமும் கடமையுணர்வும் கொள்டவர் முப்பது வருடங்களுக்கு மேலாக இவர் கடமையாற்றுகின்றார். நானுஓய பக்கமாக புகையிரதத்தில் ஏதோ ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளதாக அன்று நான் அறிந்தேனென நாவலப்பிட்டி பிரதேச போக்குவரத்து அதிகாரி சி. என். ரணசிங்க தெரிவித்திருந்தார்.

“குடும்பத்தில் அக்கறையுடைய இவர் ஒரு நேர்மையான அதிகாரி கடமைகளிலிருந்து அவர் ஒருபோதும் தவறியதில்லை. இவருடைய மறைவு எம்மனைவரையும் சோகத்திலாழ்த்தியுள்ளதென மாளிகாவத்தை ரயில் பிரிவின் பொறுப்பாளர் எம். கே. திலக் குலரத்ன தெரிவித்தார். தள்ளிவிடப்பட்டு அல்லது கீழே விழுந்ததால் மூச்சுத்திணறி மரணம் சம்பவித்துள்ளதாக மரண விசாரணையில் தெரியவந்தது. இச்சம்பவம் சம்பந்தமாக ரம்புக்கனை பகுதிகளிலும் சோதனை நடத்தப்பட்டது. இங்கு ஒருவருடைய கையிலிருந்த கையடக்கத் தொலைபேசி கைப்பற்றப்பட்டது.

இத்தொலைபேசி இறந்த வீரசிங்கவினுடையது. ரயில் பெட்டியில் கீழே சாய்ந்திருந்த துரையின் பக்கம் இத்தொலை பேசியிருந்தது. இதனை பெரிய துரையிடம் கொடுப்பதற்கு எடுத்து வந்தேன் என்றார் அந்நபர்.

இவரை விசாரணை செய்த போது இறந்தவருக்கும் நமக்கும் ரெயில் பெட்டியினுள் வாக்குவாதம் ஏற்பட்டது உண்மை. ஆனால் அவரது மரணத்துக்கு தான் பொறுப்பாளியல்ல வென அவர் தெரிவித்தார். சந்தேக நபரை கைது செய்த பொலிஸார் மேலதிக விசார ணைகளுக்காக இவரை அட்டன் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். கடமையிலிருந்த போது இவர் இறந்ததால் ரயில்வே திணைக்களம் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும், அக்ரஹார காப்புறுதித் திட்டத்தின் கீழ் குடும்பத்துக்கு உதவுவதற்கும், கடமையிலிருந்த போது இவர் இறந்ததால் பொது நிர்வாக அமைச்சின் மூலமாக உதவுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் மாளிகாவத்தை புகையிரத பிரிவின் அதிகாரி எம். கே. திலக் தெரிவித்தார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.