புத் 64 இல. 09

கர வருடம் மாசி மாதம் 14ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 04

SUNDAY FEBRUARY 26,  2012

 

பிள்ளை மடுவங்கள் முன்பள்ளிகளாக

மலையகத்தில் முன்பள்ளிக் கல்வி:

பிள்ளை மடுவங்கள் முன்பள்ளிகளாக

மாற்றப்பட வேண்டும்

இன்றைய நவீன உலகில் சிறுவர்கள் இளம் பராயத்திலேயே பல விடயங்களை அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. அது மட்டுமன்றி புதிய விடயங்களை அறிந்து கொள்வதிலும் சிறார்கள் ஆர்வம் காட்டுகின்றனர். சிறுவர்களின் அறிவுத்தேடலை பெரும்பாலும் முன்பள்ளிகளே நிறைவேற்ற வேண்டிய நிலையிலுள்ளன.

சிறுவர்களின் அறிவாற்றலை விருத்தி செய்வதுடன், அவர்களின் அறிவுத் தேடலையும் ஆர்வத்தையும் ஊக்குவிக்கும் வகையில் முன்பள்ளி கல்வித்திட்டங்கள் அமைந்துள்ளன.

ஆனால் மலையகத்தில் 40 வீதமான சிறுவர்களுக்கே முன்பள்ளிக் கல்வி கிட்டுகிறது. ஏனைய சிறார்கள் பாடசாலை செல்லும் வயதை அடையும் வரை பெரும்பாலும் பிள்ளை மடுவங்களிலேயே காலத்தை கழிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை உள்ளது.

முன்பள்ளிக்கு செல்லாத சிறுவர்கள் உரிய பருவம் வந்த பின் பாடசாலை செல்லும் போது அங்குதான் அவர்கள் அ, ஆ.... வை தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது. இந்த நிலையில் முதலாம் தரத்தின் பாடங்கள் அவர்களை மலைக்க வைப்பதுடன், மனம் நொந்து போகச் செய்கின்றது. இன்றைய கல்வித்தரத்தின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாத அவர்களுக்கு பாடசாலைக் கல்வி வேப்பங்காயாக கசந்து விடுகிறது.

இதுவே அவர்கள் நாளடைவில் பாடசாலையை விட்டு இடைவிலக காரணமாகி விடுவதுடன், மலையகக் கல்வியின் பின்னடைவிற்கும் வழிசமைத்து விடுகிறது. இன்று மலையகக் கல்வியின் முன்னேற்றம் பற்றி பல்வேறு மட்டங்களிலும் பிரஸ்தாபிக்கப்படுகிறது. எமது சமூகம் எங்கே இடறுகிறது, எங்கே தடம் மாறுகிறது, எங்கே தேங்கி நிற்கிறது என்பதை ஆராய்ந்து அவற்றை நிவர்த்தி செய்வது சமூக ஆர்வலர்களின் கடமையல்லவா?

மலையகக் கல்விக்கான சிறந்த அடித்தளம் அமைக்கப்பட வேண்டும். அது முன்பள்ளிகளிலிருந்தே ஆரம்பிக்கப்பட வேண்டும்.

மலையகத்தில் எண்ணற்ற தொழிற்சங்கங்கள் உள்ளன. ஒவ்வொரு தொழிற்சங்கங்களும் ஒரு முன்பள்ளி அமைத்துக் கொடுத்தால் கூடு அனைத்து தோட்டங்களிலுமே முன்பள்ளிகள் தோன்றிவிடும். எமது சமூகத்தின் கல்வியுயர்விற்கு வழியமைக்க முன்பள்ளி கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பது அவசியம். மலையகத்தில் அனைத்து பிள்ளை மடுவங்களும் முன்பள்ளிகளாக உருவாக வழிசமைக்கப்பட வேண்டும். மலையக சிறார்கள் அனைவருக்கும் முன்பள்ளிக் கல்வி கிட்ட வேண்டும்.

இன்றைய உலகில் எந்தவொரு விடயத்தை செயல்படுத்துவதற்கும் உண்மையாக அமைவதற்கும் மையப் பொருளாக அமைவது கல்வியே!

வள்ளுவப் பெருந்தகை தந்த திருக்குறள் இன்றும் என்றும் எமக்கு வழிகாட்டியே! அதேபோன்று பாரதி தந்த புதுக்கவிதைகள் இன்றும் எமக்கு வலிமை சேர்த்து நிற்கின்றன. இவர்கள் கற்றதை, சிந்தித்ததை உலகிற்கு எடுத்தியம்பியவர்கள். அதில் மனித குலம் பயன்பெற்றது. பெறுகின்றது அதே கல்வியை நாமும் கற்றும் பின் நிற்பது கவலை தருகின்றது.

மலையகத்தின் கல்விமான்களும், படித்த இளைஞர், யுவதிகளும், சமுதாயத்தை பற்றி அக்கறையுள்ளவர்களும் இன்றும் ஏனையோரை விமர்சித்துக் கொண்டிருக்கின்றனர். தவிர தான் இந்த சமூகத்திற்கு ஆற்ற வேண்டிய பணி என்ன? இந்தச் சமூகத்தின் முன்னேற்றத்தில் எமது பங்களிப்பை நாம் நிறைவேற்றியுள்ளோமா? என்பதைப் பற்றி சிந்திக்க மறந்தவர்களாகவே உள்ளனர். மலையக சமூகத்தின் விடுதலைக்கு உண்மையாக பாடுபட வேண்டியவர்கள் கல்வியாளர்களும், இளைஞர், யுவதிகளுமே! எமது சமூகம் பின்னடைந்து நிற்பதற்கு காரணங்கள் ஆயிரம் இருக்கலாம். இவற்றை தகர்த்தெறிந்து வழிகாட்ட வேண்டும். எனவே மலையக சமூகத்தின் எதிர்காலத்திற்கு கல்விமான்கள் முன்வர வேண்டும்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.