புத் 64 இல. 09

கர வருடம் மாசி மாதம் 14ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 04

SUNDAY FEBRUARY 26,  2012

Short Story

ண்.! மணி ஒலிக்கின்றது. விஞ்ஞான பாடம் தீர அடுத்தது ‘லை(ப்)ரரி பியரியட்’ எல்லோர் முகத்திலும் வழமையான சந்தோசம். இனி காலையில் கொண்டு வந்த சிற்றுண்டிகளைப் பகிர்ந்து உண்டு, தேநீர் குடித்து விட்டு, அளவளாவிக் கொண்டே லை(ப்)ரரியை நோக்கிக் காலாற நடந்து சென்று, மனதிற்குப் பிடித்ததை வாசித்து கொஞ்ச நேரம் ‘ரில்லெக்ஸ்’ ஆகலாம்.

நேராக லை(ப்)ரரியை நோக்கி நீண்ட காற் சுவடுகள் பதிக்கின்றேன்.

சக மாணவிகள் ஒவ்வொருவராக வரத் தொடங்குகின்றனர். லை(ப்)ரரி நிறைகின்றது. விநயலதாவும், மீனாட்சியும் என்னைப் பார்த்து ஏதேதோ முணு, முணுப்பது கேட்கின்றது. எதையும் கவனத்தில் கொள்ளாமல், பலவந்தமாக ஊன்றி வாசிக்க முயலுகின்றேன். முடியவில்லை. பார்வை கண்ணாடி ஜன்னல் வழியாக வெளியே செல்லுகின்றது.

பாடசாலையின் பரந்த முற்றம். அதனைத் தொடர்ந்து விசாலமான விளையாட்டு மைதானம். யாரோ ஒரு செல்வந்தச் செட்டியார் பாடசாலைக்கு அன்பளிப்பாகக் கொடுத்தது. சுற்றிலும் தென்னை, பலா, மா, துரியன் மரங்கள். அத்துடன் பச்சைப் பசேலென்ற இலைகளுடன் பார்வையைக் கவ்வும் வேப்ப மரங்கள். இடையிடையே நேர்த்தியாக வளர்க்கப்பட்ட பூச்செடிகள். எல்லாவற்றிற்கும் மேலாக முக்கால் வாசி முற்ற நிலத்தையும் தன் நிழலால் மூடிக் குளிரூட்டும் பாரிய அரச மரம்.

சமீபத்தில் கம்பிகளில் உரசும் அதன் கிளைகளை மின்சார சபை ஊழியர்கள் வெட்டியிருக்கின்றனர். இப்பொழுது மின் கம்பிகள் மிகத் தெளிவாகத் தெரிகின்றன. அதனால் அங்கே தெரியும் ஒரு வெறுமை! ஆனால் அளவுக்கும் அதிகமாக! ஏதோ ஓர் உயிரோட்டத்தையும் சேர்த்து இழந்தது விட்டதைப் போல!!

பட்டென்று நினைவுக்கு வருகின்றது. ஆம்....! எங்கே அந்த இளம் கிளிகள்? காலை நேரக் குளிரில் கதிரவனின் ஒளியை நோக்கி ஒன்றையொன்று ஒட்டி இருந்து உறவாடி, கிண்ணாரக் கதைகள் பேசி கீச்சிடுமே! மொத்தம் பத்து! எப்பொழுதும் எண்ணிப் பார்ப்பதில் எனக்கொரு சந்தோசம்!

மனம் பதை பதைக்கின்றது. சிலவேளை மின்சார சபை ஊழியர்கள் அவற்றை..... சேச்சே... இருக்காது. எனது கண்கள் கம்பி வழியாக வலது புறமாகவும் இடது புறமாகவும் ஊர்ந்து செல்கின்றன. அதோ அவை வெட்டப்பட்ட அரசு மரக் கிளையொன்றின் மேல் கூட்டமாக உட்கார்த்திருக்கின்றன. ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு.... ஆங்.... ஒன்பது..... ஒன்பது மாத்திரமே! பத்தாவது கிளி எங்கே சென்றது? அதற்கு என்ன நடந்தது?

தணிந்த மனம் மீண்டும் வருந்துகின்றது. காணாத அந்த கிளிக்காக மனம் பிரார்த்திக்கின்றது. கடவுளே அந்த கிளிக்கு ஒன்றும் நடந்திருக்கக் கூடாதே! பிரார்த்தனையுடன் தேடலும் தொடர்கின்றது. கண்களை மின் கம்பிகளின் அற்றம் வரை மிக உன்னிப்பாக ஓட விடுகின்றேன். அங்கே மின் கம்பத்தின் உச்சியில் ஒரு சிறு பச்சைப் பந்து போலக் கூனிக்குறுகி இருக்கும் அது என்ன? அசைகின்றதே! சந்தேகமே இல்லை. நான் தேடிக்கொண்டிருக்கும் பத்தாவது கிளி. மனம் சந்தோசத்தில் ஆழ்கின்றது.

ஆனால் ஏன் அது தனித்திருக்கின்றது? என்ன நடந்தது? கூட்டத்திலிருந்து பிரித்து விடப்பட்டதா? அல்லது கூட்டாளிகளின் கொள்கை பிடிக்காமல் தானே பிரிந்து தனித்திருக்க முடிவு செய்து விட்டதா? என்னைப் போல!

பார்க்கவீ.....! திடுக்கிட்டு சுய நினைவடைகின்றேன். விநயலதா மெதுவாக என் அருகில் வருகின்றாள். “உனக்கு என்ன நடந்திச்சி?” ஏன் இப்பிடி எங்களை எல்லாம் விட்டு ஒதுங்கி ஒதுங்கி போற?” விநயலதாவின் சத்தம் லை(ப்)ரரியின் அனுமதி அளவைத் தாண்டுகின்றது. லை(ப்)ரேய்ரியனின் கண்கள் எங்களை நோக்கி உருளுகின்றன.

நிலமையைப் புரிந்து கொண்ட விநயலதா என் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு லை(ப்)ரரியின் அடுத்துள்ள ‘பெல்கனியை நோக்கி நடக்கின்றாள். கூடவே பரமேஸ்வரி, ரோகினி, உமா, சுகந்தி எல்லோரும் நிவேத வல்லி மாத்திரம் கலங்கிய கண்களுடன் சற்று தூரத்தில்!

விநயலதா என் காதருகில் வந்து, அடக்கிப் பிடித்த குரலில் கத்துகிறான். “ஏன்டீ பார்க்கவீ இப்பிடி நடந்துக்கிற? என்னோட ‘பெஸ்ட் ஃபிரண்ட்’ பார்க்கவியா இதுன்னு என்னால நம்பவே முடியல. நீ இப்ப நடந்துக்கிற முறை இருக்கே..... ச்சே..... ஒனக்கு என்னா பைத்தியமா பிடிச்சிருக்கு? வாயைத் தொறந்து பதில் சொல்லேன்டீ!

அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த நான் அனலாகக் கொதித்து வெடிக்கின்றேன். “ஆமாடி எனக்கு பைத்தியம்தான் பிடிச்சிருக்குது. உங்களப் போல உள்ளவங்களோட நட்பு வச்சேனே? அப்ப பைத்தியம் பிடிக்காம வேற என்னடீ பிடிக்கும்? இப்ப எல்லாரும் போயி அந்த நீலிக் கண்ணீர் வடிக்கிற நிவேத வல்லியோட சேர்ந்தீட்டீங்க இல்ல? எல்லாரும் என் கை மேல அடிச்சி சத்தியம் செய்து என்னடி ‘கோரஸ்சா சொன்னீங்க? மறந்தீட்டிங்களா? போங்கடி உங்க நட்பும் ‘ப்ரொமிஸ்சும்’ என்றபடி வகுப்பறையை நோக்கி நடக்க முயன்றேன்.

என்னைத் தோளில் பிடித்துத் தடுத்து நிறுத்திய விநயலதா, “இதோ பார் பார்க்கவீ, நடந்தது நடந்து போச்சி. அதுக்காக நிவேத வல்லிவி நம்ம கிட்ட எத்தனையோ தடவ மன்னிப்பு கேட்டுட்டா. பின்னே என்னவாம்? அதோட இன்னும் ஒரு மாசத்தில ‘ஒ.எல்.டெஸ்ட்’ முடிஞ்சிரும். நாம எல்லாம் எங்கெங்க பிரிஞ்சு போகப் போகிறோமோ. நமக்கே தெரியாது. எல்லாத்தையும் நம்ம ‘ரிசல்ட்ட’ வச்சி நம்மளோட அம்மா, அப்பாதான் முடிவு செய்யப் போறாங்க.

இப்பவே ரோசினியும் சுகந்தியும் அவுங்க அம்மா அப்பாக்கள், லண்டன் ஏ.எல். செய்ய வேற பாடசாலைகளில போட முடிவு செய்யப் போறாங்கன்னு சொல்லி அழுது புலம்புறாங்க. அப்பிடி பிரிஞ்சாலும் நாம எல்லோரும் கடைசி வரை ‘பெஸ்ட ஃபிரன்(ட்)ஸ்’சாகவே இருக்கனுமா? இல்லையா? அதனால யாரும் யாரோடையும் குறையையோ, தவறையோ மனசில வச்சிக்க வேணாம். நிவேத வல்லியோட ‘ஷேக் ஹேண்ட் கொடுத்திட்டு ‘ஸ்வீட்’ எடுத்துக்க. இன்னைக்கி அவளோட ‘பேர்த்டே’ங்கிறது உனக்கு நல்லாத் தெரியும் தானே? சிநேகம் கலந்த கோபத்துடன் சொல்லி முடிக்கிறாள் விநயலதா. நிவேதவல்லி கண்களில் கண்ணீர் ததும்ப, என் அருகில் வந்து ‘ட்ரே’யை நீட்டுகிறாள். அதனைக் கைகளால் ஒதுக்கிய நான் ‘பெஸ்ட் விஷஸ்’ என்று மொட்டையாக முனகிவிட்டு முன் நோக்கி நடக்கின்றேன். பின்னால் நிவேதவல்லி விக்கி, விக்கி அழுவது எனக்குக் கேட்கின்றது.

வகுப்பறை மீண்டும் நிறைகின்றது. சரித்திர பாடம். டீச்சர் இன்னும் வரவில்லை. திடீரென வகுப்பிலே பிரின்சிபல் மேடம். “வசுமதி டீச்சர் அவசரமா ‘சோர்ட்’ லீவில வீட்ட போயிருக்கிறா. பிள்ளைகள் சத்தம் போடாம பாடங்களை எடுத்து ‘ரிவிஷன்’ செய்யுகோ. தவணைப் பரீட்சையும், ஓ.எல். பரீட்சையும் தொடங்கப் போவது ஞாபகம் இருக்குத்தானே?” கட்டளை இடும் தொனியில் சொல்லி விட்டுப் போகிறார்.

எல்லோரும் தத்தமது முன்பில் கிடக்கும் புத்தகங்களை வெறுமனே எடுத்து வாசிப்பது போல பாசாங்கு செய்கின்றனர். நானும் ‘பேக்கிலிருந்த வினா விடைத் தாள்களை எடுத்து முன்னால் விரித்து வைக்கின்றேன்.

ஐந்து நிமிடங்கள் கூட ஆகி இருக்காது. மீண்டும் வழமையான அரட்டை ஆரம்பிக்கின்றது. அரசியல், சினிமா, பாட்டு, கச்சேரி, மிமிக்ரி என்று, பாடத்திற்கும், பரீட்சைக்கும் ஒட்டும் சம்பந்த மில்லாத எல்லாம்! முழு வகுப்பையும் நோட்டம் விடுகின்றேன். நிவேத வல்லி மாத்திரம் எதையோ அமைதியாக இருந்து எழுதிக் கொண்டிருக்கிறாள். அவள் எழுதுவது என்ன? ஊன்றிக் கவனிக்கின்றேன். அவளின் முன்னால் குவிந்து கிடக்கின்றன ஓட்டோகிறாஃப் புத்தகங்கள்!

எரிச்சலாக இருக்கிறது எனக்கு. பிரிவுத் துயரைப் பேனாவின் முனையில் அடக்கப் பார்க்கிறாளா? பிரிவுத் துயர் என்றால் இவளுக்கு என்னவென்று தெரியுமா? போன வருஷம், பெஸ்ட் ஃபிரன்ட்ஸா ஒன்பது வருஷங்களாக ஒன்றாகப் படித்த சாரதாவும், சுமதியும் தவிர்க்க முடியாத காரணங்களால் பாடசாலையை விட்டுப் பிரிந்து போன துயத்தைத் தாங்க முடியாமல், நாங்க எல்லோரும் அவர்கள் இரண்டு பேரையும் கட்டிப்பிடித்து அழும் பொழுது, ‘நல்ல வேடிக்கை, டெலி ட்ராமா போல இருக்கு’ என்று கூறி எள்ளி நகையாடியவள் அல்லவா?

அதனை கண்டித்துப் பேசிய எங்களுடன், ‘இதெல்லாம் சர்வ சாதாரண விசயம். இதற்கெல்லாம் அழுவது சுத்த அசட்டுத் தனம்’ என்று சண்டையிட்டவளாயிற்றே. நட்பு என்றாள் என்ன? பிரிவுத் துயர் என்றால் என்ன என்று அறியாத ஒரு ஜடம் அல்லவா இவள்! குவித்து வைத்துக் கொண்டு ஓட்டோகிறாஃப் எழுது கிறாளா? கோபமும், வெறுப்பும் ‘குப்’ பென்று உயர்ந்து என் நாடி, நரம்புகளைத் தாக்குகின்றன.

அந்த பிரியாவிடை தினத்திலிருந்துதான் நானும் விநயலதா உட்பட்ட அனைவரும் இவளுடன் எக்காரணம் கொண்டும் நட்பு வைப்பதில்லை என்ற வைராக்கியத்தோடு இருந்தோம். ஆனால் மற்றவர்களை எல்லாம் படிப்படியாகத் தனது சாதுர்யத்தால் மயக்கி, அவர்களின் வைராக்கியத்தைத் தகர்த்து என்னிடமிருந்து பிரித்துத் தன் வசமாக்கியவள், இப்பொழுது என்னையும் தன் வசமாக்கிய பின் எங்கள் சபதத்தையும், ஒற்றுமையையும் பற்றிச் சொல்லிச் சொல்லி சிரிக்கப் போகின்றாள். இதனை விளங்கிக் கொள்ளாமல் எல்லோரும் அவளுக்கு நேசக் கரம் நீட்டி விட்டார்களே! நினைக்கும் பொழுது எல்லோர் மேலும் எனக்கு வெறுப்புணர்வு ஏற்படுகின்றது. பாடசாலை விடும் வரை அதனைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கின்றேன்.

பாடசாலை விட்டதும், பஸ் பிடித்து வீட்டை அடைகின்றேன். வாசலில் கால் வைத்ததுதான் தாமதம், வழமைபோல டெலிஃபோன் மணியின் அலறல்! பாட்டி ரிசீவரைக் கையில் எடுக்கின்றாள். “பார்க்கவீ கண்ணு தினமும் கூப்பிடுற அதே பொண்ணு. நிவேத வல்லி. உன்னோட பேசனுமாம். தேம்புறா.... வந்து ஏதாவது பேசு” பாட்டி பரிந்துரைக்கின்றாள்.

“உனக்கு வேற வேல இல்லையா பாட்டி? தினமும் சொல்றேன் தானே, அவ கூப்பிட்டா நான் இல்லேன்னு சொல்லுன்னு” கத்துகின்றேன். ரிசீவரைக் காதில் வைத்துப் பார்த்த பாட்டி நிராசையுடன்” பாவம், வச்சிருச்சி அந்த பொண்ணு” என்று அனுதாபத்துடன் சொல்லிக் கொண்டே ரிசீவரைக் கீழே வைக்கின்றாள்.

உடுப்பு மாற்றி, முகம் கழுவி சாப்பாட்டு மேசைக்கு வருகின்றேன். அம்மாவின் சமையல் வழமை போல இன்றும் அற்புதமாக இருக்கின்றது. மலர்ந்த முகத்துடன் என் அருகில் நின்று எனக்குப் பிடித்தவைகளை எல்லாம் பரிமாறிய அவள், கண்களெல்லாம் சிவந்த மாதிரி இருக்கு. சாப்பிட்டுட்டு நல்லா படுத்து தூங்கு. நான் அப்பாவுக்கு சாப்பாடு குடுக்கனும் நல்லாவே நேரமாச்சி என்றபடி அடுக்களையை நோக்கி அவசரமாக நடக்கிறாள்.

சாப்பிட்டு விட்டு படுக்கை அறையை அடைகின்றேன். அங்கே கட்டிலில் உட்கார்ந்து பாட்டி ‘பகவத்கீதை’ வாசித்துக் கொண்டிருக்கின்றாள்” பரீட்சை என்னய்க்கிடீ தங்கம் ஆரம்பிக்குது? நல்லா படிக்கிற தானே? பாட்டி பல்வியமாகக் கேட்கிறாள். “அடுத்த புதன் கிழமை வரை. அது வரைக்கும் ஸ்டடி லீவு என்கின்றேன். இன்னைக்கி வியாழன்... அப்ப இன்னும் அஞ்சு நாட்கள்! பார்க்கவீ கண்ணு, இது உனக்கு மட்டும் இல்ல. நம்ம எல்லாத்துக்கும் மிகவும் முக்கியமான பரீட்சை. நாங்க எல்லாரும் எதிர்காலத்தில உன்ன என்னென்னவாவோ பார்க்க கற்பனை செஞ்சிக்கிட்டிருக்கோம். நல்லா படிக்கனும். கவனத்த அங்கேயும், இங்கேயும் சிதற விட்டுடக் கூடாது. சின்ன சின்ன விசயங்களை எல்லாம் பெரிசாக்கி, மனசை சஞ்சலப்படுத்திக்கக் கூடாது.

இந்த நேரத்திலதான் எல்லாத்தோடயும் சந்தோசமா இருந்து மனச லேசா வச்சிக்கனும். அப்பத்தான் படிக்கிறது ஆழமா நெஞ்சில பதியும். பதிஞ்சது தடங்கல் இல்லாம நெனவில வரும். அப்ப பரீட்சைய நல்லா எழுதலாம்” என்கின்றாள் சிநேகத்துடன்.

‘நீ என்னா பாட்டி சொல்ற? என்கின்றேன் பாட்டியைப் பார்த்து.

“ஆமாடி கண்ணு, நீ அந்த பிள்ளையோட இல்ல, யாரோடையும் கோபமா பேசாத. மன்னிப்பு கேக்கிறது மனுச குணம்! மன்னிக்கிறது தெய்வ குணம்!! என் பேத்தி தெய்வ குணம் உள்ளவளாத்தான் வளரனும். அதுதான் இந்த பாட்டிக்கு பெருமை. குரோதமும், கோபமும், வைராக்கியமும் நினைவு சக்திய இல்லாமப் பண்ணிடும். அதனால பல கஷ்டங்களுக்கும் துன்பங்களுக்கும் மனுசர் ஆளாக, வேண்டி வரும். இதைத்தான் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா பகவத் கீதை’யில விவரிக்கிறாரு”.

“பாவம் அந்த நிவேத வல்லி. எத்தனை நாளா அழுவுது? எதுக்காக? உன்னோட சிநேகிதத்த திரும்பவும் பெறனும்கிறதுக்குத் தானே? எவ ஒருத்தியும் நட்புக்காக யார் பின்னாலேயும் இப்பிடி அலைய மாட்டா. “குறைவையும் தவறையும் மறந்து நிறைவை மாத்திரம் பாக்கிறதுதான் உண்மையான நட்பு. சாவதானமா யோசிச்சு பாரு” என்று நட்பு பற்றிய பல விசயங்களைச் சொல்லிக் கொண்டிருந்த பாட்டி அப்படியே குறட்டை விட்டு உறங்கத் தொடங்குகின்றான். எனது இமைகளிலும் பாரம் ஏறுவதை உணருகின்றேன். அப்படியே உறக்கம் என்னையும் அணைத்துக்கொள்கின்றது.

மறுநாள் குளித்து முடித்து, தொழுது, தீபமேற்றி, பூஜை செய்து, திரு நீறால் நெற்றி வரைந்து, அள்ளிச் சொறுகிய வெள்ளி முடியுடன் அழகு தேவதையாக பின் புற ‘பென்ஞ்’சிலே பேசாமல் அமர்ந்திருக்கின்றாள் என் செல்லப் பாட்டி!

அவளின் இடது கைத் தலத்திலே வீற்றிருக்கும் வெண்புறாக் குஞ்சு வலது கையில் வைத்திருக்கும் தானியங்களை உரிமையுடன் கொத்தித் தின்று கொண்டிருக்கின்றது. சிதறிய தானியங்களை சிரத்தையுடன் தேடித்தின்னும் மற்ற புறாக்கள் பாட்டியின் மடியிலேற மறுபடியும், மறுபடியும் முயற்சித்துக் கொண்டிருக்கின்றன.

என்னைக் கண்டதும் பாட்டி முகம் மலர்ந்து சிரிக்கின்றாள். எந்திரிச் சிட்டியா தங்கம்? வா, வந்து அந்த பாத்திரத்தில இருக்கிற சோளத்தை எடுத்து இதுகளுக்குக் குடு. பாவம், எவ்வளவு பசியோட என்னையே சுத்தி, சுத்தி ‘க்ருக், க்ருகு’ன்று சத்தமிட்டு சோளத்தைக் கேக்குது! பரிதாபப் படுகின்றாள் என் பாட்டி.

பாட்டியிடம் எல்லோருக்கும் பிடித்த சமாச்சாரமே இதுதான். மனிதராகட்டும், மிருகமாகட்டும், பறவையாகட்டும் அல்லது பசியோடு வரும்எந்த ஜீவராசிகளாகட்டும், பாச மழை பொழியத் தொடங்கிவிடுவாள் அவற்றின் மேல். பாட்டியைப்போல எல்லோரையும், எல்லாவற்றையும் நேசிக்க என்னாலும் முடியுமென்றால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைக்கும் பொழுதே என் மனம் இனிக்கத் தொடங்குகின்றது.

அம்மா, அப்பா, பாட்டி ஆகியோரின் அன்பும், கவனிப்பும் எனக்கு அளவிலா மகிழ்ச்சியையும், ஊக்கத்தையும் அளித்திருந்த போதிலும் புதன் கிழமை வரை ஒரே விரக்தியாகவே இருந்தது. எதிலுமே நாட்டம் ஏற்பட வழி இருக்கவில்லை. ஒரே படிப்பு! படிப்பு!! எவரிடமிருந்தும் டெலிஃபோனோ, செல்லோ, எஸ்.எம். எஸ்சோ ஒன்றுமில்லை. எல்லோரும் படிப்பில் ஒரே ‘பிஸி’ போலும்! ஆனால் எனக்கு இருப்பு கொள்ளவில்லை. மீண்டும், மீண்டும் டயல் செய்கின்றேன்.

விநயலதாவின் செல் ‘சுவிட்ச் ஒஃப்’ மீனாட்சியின் ‘லைன்கட்’ ரோகினி எல்லைக்கு அப்பால இப்படி எல்லோரினதும் தொடர்பு ஏதோ ஒரு விதத்தில் முடக்கப்பட்டிருக்கின்றது. எல்லாமே பெற்றோர்களின் ‘பொசிட்டிவ்’வான புத்தி போலும். வழமையான வெறுப்புக்குப் பதில் மனம் ஆனந்தப் படுகின்றது. மக்களின் நல் எதிர்காலத்திற்காக அவர்கள் என்ன என்னவெல்லாம் செய்ய வேண்டி இருக்கின்றது. மெதுவாகச் சிரிக்கின்றேன்.

தவணைப் பரீட்சை முடிந்து இன்றோடு இரண்டு நாட்களாகி விட்டன. இன்று “க்லாஸ் பா(ர்)ட்டி! எங்கும் ஒரே சந்தோசம்! இன்னும் மூன்று வாரங்களில் அரசாங்கப் பரீட்சை தொடங்கப் போகின்றது. ஆனால் ஒருவர் முகத்திலும் டென்ஷனே இல்லை. காரணம் நடந்து முடிந்த பரீட்சை கடினமாக இருந்த போதிலும் அனைவரும் அதிகமான ‘ஏ’க்களையே எடுத்திருந்தோம். அதனால் எதிர்வரும் பரீட்சையை நல்லபடியாக எழுதலாம் என்ற நம்பிக்கை! ‘பா(ர்)ட்டி’ தொடங்குகின்றது. க்ளாஸ் பா(ர்)ட்டி என்ற பொழுதிலும் அதனைப் பிரியாவிடைப் பார்ட்டியாகவே உணருகின்றோம். மேசைகளை வரிசையாக அடுக்கி சுற்றிலும் நாற்காலிகளிட்டு அமைதியான முறையில் ஆரவாரமில்லாமல் எல்லோரும் அளவளாவிக் கொண்டிருக்கின்றோம். இனிப்பு, காரம் என்று பல வகைச் சிற்றுண்டிகளும், தேநீர், குளிர்பான வகைகளும் பரிமாறப்படுகின்றன.

எல்லோரும் அபரிமித சந்தோசத்தில் மிதந்த பொழுதிலும், அடுத்த வருடம் வேறு, வேறு பாடசாலைகளுக்குப் போகப் போகிறோமே என்ற துக்கம் நீறு பூத்த நெருப்பாக நிறைந்திருக்கிறது அனைவரினதும் மனங்களில். விருந்துபசாரத்தை அனுபவித்துக் கொண்டே எல்லோரும் ஓட்டோகிறாஃப் புத்தகங்களில் சிநேக வசனங்களைக் கவிதையாக்கிக் கொண்டிருக்கின்றோம்.

“பார்க்கவீ, இந்தா உன்னோட ஓட்டோகிறாஃப் புத்தகம்” என்ற படி மீனாட்சி எனது “புக்”கைத் தருகின்றான். ஒவ்வொருவரும் என்ன என்ன எழுதியிருக்கிறார்கள் என்று படிக்க என் உள்ளம் துடிக்கின்றது. இரண்டு வாரங்களுக்கு முன்பிருந்தே சக மாணவிகளின் ‘புக்’குகளைப் போல என்னுடையதும் வகுப்பில் வலம் வந்து கொண்டிருந்தது.

ஆர்வத்துடன் திறக்கின்றேன். எல்லோரும் இருக்கைகளை விட்டெழுந்து என்னைச் சூழ்ந்து கொள்கின்றார்கள். எல்லாமே வேடிக்கையான விநோதமான, சிநேகமான, தெய்வீக தத்தவ ரீதிகளிலான வரிகளும், கவிதைகளும், ஒவ்வொன்றையும் ரசித்தும், சிரித்தும் நண்பிகளுடன் வாசித்த நான், அடுத்த ஏட்டை ஆனந்தத்துடன் புரட்டுகின்றேன்.

ஏடு நனைந்திருக்கின்றது. தண்ணீரா..... அல்லது கண்ணீரா? நடுவிரலால் தொட்டு பெரு விரலில் தேய்த்துப் பார்க்கின்றேன். ஈரம் இதயத்தில் படுகின்றது. உற்று நோக்குகின்றேன். ஓட்டோகிறாஃபை.

“குற்றம் புரிந்தவள், கோருகிறாள் மன்னிப்பு!

இதயத்தைத் திறப்பாயா? எளியவளை ஏற்பாயா?”

பெயரும் கையொப்பமும் கண்ணீரால் கரைந்து போய் இருக்கின்றன. கண்கள் குளமாகின்றன. “குறையையும், தவறையும் மறந்து நிறைவை மாத்திரம் காண்பதுதான் உண்மையான நட்பு” பாட்டியின் வார்த்தைகள் நெஞ்சிலே தைக்கின்றன.

மதுவாக எழுந்து கலங்கிய கண்களுடன் அங்குமிங்கும் நோக்குகின்றேன். “என்னடி ஆச்சு? ஏன் அழறே?” நண்பிகள் அதிர்ச்சியுடன் கேட்கின்றார்கள். பதில் சொல்ல முடியாமல் பதைபதைக்கும் என் மனம் ஒரு பதிலுக்காக ஏங்குகின்றது. எங்கே அவள்? நிவேதவல்லி! எல்லோரையும் விலக்கிக் கொண்டு வெறிபிடித்தவளைப் போல அங்குமிங்கும் ஓடுகின்றேன். எங்குமே அவள் இல்லை. சிலவேளை..... மாடியில்!

என் கால்கள் நீண்ட மாடிப்படிகளை நொடிப்பொழுதில் ஓடிக் கடந்து லை(ப்)ரரியை அடைகின்றன. அங்கும் இல்லை. பெல்கனியை நோக்குகின்றேன். அங்கே கைப்பிடிச்சுவரைப் பிடித்தவாறு முற்றத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கும் நி....வே....த.வ..ல்...லி!

மெதுவாக அவளை நோக்கி நகர்கின்றேன். உடலிலே ஒரு நடுக்கம்! உள்ளத்திலே ஓடையாக ஒழுக ஆரம்பிக்கும் நட்பு!! தழ, தழக்கும் குரலில் “நிவேதா” என்கின்றேன். நிவேதா மெதுவாகத் திரும்புகின்றாள். கண்களிலிருந்து கண்ணீர் தாரை, தாரையாகக் கொட்டுகின்றது. எனது நட்பை ஏற்கமாட்டாயா பார்கவீ” கெஞ்சும் குரலில் அழுது கொண்டே என்னைப் பார்த்து கேட்கின்றாள். அவளை அப்படியே இறுக அணைத்து முத்தமழை பொழிகின்றேன். தொடர்ந்து வந்த என் நண்பிகள் அனைவரும் எங்களோடு சேர்ந்து அழுது ஆனந்தக் கண்ணீர் வடிக்கின்றனர்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.