புத் 64 இல. 09

கர வருடம் மாசி மாதம் 14ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 04

SUNDAY FEBRUARY 26,  2012

 

தோட்டத் தொழிலாளர்கள் பெரும் நெருக்குதலுக்குள்ளாகி இருப்பதை

தோட்டத் தொழிலாளர்கள் பெரும் நெருக்குதலுக்குள்ளாகி இருப்பதை

எவராலும் மறுக்க முடியாது
 

சட்டத்தரணி ஏ. பி. கணபதிப்பிள்ளை

“மலையகத்தின் வரலாற்று ஆவணங்களைப் பாதுகாக்க வேண்டிய பாரிய பொறுப்பு, நம்மிடம் இருக்க வேண்டும். இதனை உணர்ந்து செயல்பட வேண்டியது காலத்தின் அவசியத் தேவையாகும். அப்போதுதான், எதுவுமில்லாதவர்கள் என்ற நிலைமாறி, அனைத்து தகைமைகளையும் கொண்டவர்கள் மலையக மக்கள் என்பதை உலகுக்கு நிரூபிக்கக் கூடியதாக இருக்கும்”

இவ்வாறு, சிரேஷ்ட சட்டத்தரணியும், ஐக்கிய தோட்டத்தொழிலாளர் சங்கத் தலைவருமான ஏ. பி. கணபதிப்பிள்ளை, அப்புத்தளை ஐக்கிய தோட்டத் தொழிலாளர் சங்கப் பணிமனையில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வொன்றில், தலைமைவகித்துப் பேசுகையில் குறிப்பிட்டார்.

மலையக நாட்காட்டி” அறிமுகமும், சிரேஷ்ட தொழிற்சங்கவாதியுமான அமரர் பி. பி. கந்தையாவை நினைவு கூருமுகமாகவும் மேற்படி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அவர் தொடர்ந்து பேசுகையில்:- நமது நாடு பொருளாதார ரீதியில் நிலைத்து நிற்கக்கூடியவகையில் தமது தேகத்தையே, அர்ப்பணித்தவர்களே மலையக சமூகத்தினர். அத்தகையவர்களின் வரலாற்றைத் தாங்கி ‘மலையக நாட்காட்டி’ வெளிவந்திருப்பது, நல்லதொரு உதாரணமாகும். முன்னாள் தலைவர்களான எஸ். நடேசன், எஸ். மாரியப்பா பி. பி. கந்தையா போன்றோர் மலையக மக்களின் துயரங்களை சுமந்து கொண்டு அர்ப்பணிப்புடன் சேவையாற்றியவர்கள். இதன் காரணமாகவே அவர்கள் மக்கள் மனதில் உறுதியான இடத்தைப் பிடித்திருக்கின்றனர். அதனை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் ‘மலையக நாட்காட்டி’ தனித்துவப் போக்கில் செயல்பட ஆரம்பித்திருப்பதும் பாராட்டக் கூடியதொன்றாகும்” என்றார்.

தொழில் உரிமை கல்வி ஆய்வாளர் ஏ. சி. ஆர். ஜோன் தமதுரையில்:- “தோட்டத் தொழிலாளர்கள் குடித்து அழிகின்ற சமூகமென்றும் அவர்கள் தமது வருமானத்தின் பெரும் பகுதியை மதுவுக்கே செலவு செய்கின்றனரென்றும் உண்மைக்குப் புறம்பாக பேசிக் கொண்டு வரும் தோட்ட நிருவாகத்தினர் அறிக்கைகளை மட்டுமே வெளியிட்டு வருகின்றனர். தோட்ட முகாமைத்துவத்தினரோ தமது சுயலாபம் கருதி தோட்டங்களைச் சுரண்டி ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

தோட்டக் கம்பனிகளுடன் தோட்டத் தொ¡லாளர்கள் செய்து கொண்டுள்ள கூட்டு ஒப்பந்தம் ஒரு சிலரின் பாராடுதலுக்கும் ஒரு சிலரின் விமர்சனத்திற்கும் வெறுப்பிற்கும் உட்படுத்தப்பட்டுள்ளன. எது எப்படியிருந்தாலும் தோட்டத் தொழிலாளர்கள் பெரும் நெருக்குதலுக்குள்ளாகியிருப்பதை எவரும் மறைக்க முடியாது. கூட்டு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த போதிலும், அதன் சாதக பாதகங்களை தோட்டத் தொழிலாளர்கள் அறிந்துகொள்ள வாய்ப்புகள் கிடைக்காமையினால் தோட்ட முகாமைத்துவத்தினரிடம் கையேந்தி நிற்கும் நிலையே இருந்து வருகின்றது.

இதனைத் தவிர்க்கும் வகையில், தோட்டத் தொழிலாளர்கள் விழிப்புணர்ச்சி அடைய வேண்டும். இது விடயத்தில் நாம் கூடிய அக்கறை செலுத்த வேண்டியுள்ளது. எமது சமூக வரலாறு மறக்கப்பட்டுவிடக் கூடாதென்ற நிலையினை உள்வாங்கியே மலையகத்தில் பல்வேறு வகைகளிலும் தகவல்களைத் திரட்டி, ‘மலையக நாட்காட்டி’யை உருவாக்கியுள்ளேன். அடுத்து வரும் வருடங்களில், மலையகத்தின் வரலாற்று பொக்கிஷமாக இம் “மலையக நாட்காட்டி அமையுமென்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்” என்றார்.

ஐக்கிய தோட்டத் தொழிலாளர் சங்கப் பொதுச் செயலாளர் ஆ. முத்துலிங்கம் தமதுரையில் “மலையகப் பெருந் தோட்டத்துறை மக்களுக்கு பெற்றுக் கொடுக்கப்பட்ட உரிமைகளைப் பயன்படுத்துவதுடன், அவ் உரிமைகளைப் பாதுகாக்கவும் வேண்டும். இவ் உரிமைகளைப் பெற்றுக் கொடுள்வதற்கு தொழிற்சங்கங்களும், தொழிலாளர்களும் கொடுத்த விலையோ அதிகமாகும். அர்ப்பணிப்புக்கள், உயிர்த்தியாகங்கள் மத்தியிலேயே தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளைப் பெற முடிந்துள்ளது. ஆகையினால் பெற்றுக்கொள்ளப்பட்ட உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ளல் வேண்டும். பெருந் தோட்டத்துறையின் கல்வி, சுகாதாரம் மற்றும் சேம நலத்திட்டங்கள் ஆகியனவற்றைதாமே தோட்டத் தொழிலாளர்களுக்கு பெற்றுக்கொடுத்ததாக தோட்டக் கம்பனிகள் கூறுவதில் எவ்வித உண்மையுமில்லை.

ஆகவே, தோட்டத் தொழிலாளர்கள் பிரிந்து நின்று செயல்படாமல் பலமிக்கதான ஓர் அணியின் கீழ் அணிதிரள வேண்டியது காலத்தின் அவசியமாகவுள்ளது அதன் மூலமே, எமது சமூகத்தின் அடையாளத்தை உரிமைகளை தக்கவைக்கக் கூடியதாக இருக்கும்” என்றார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.