புத் 64 இல. 09

கர வருடம் மாசி மாதம் 14ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 04

SUNDAY FEBRUARY 26,  2012

மாய மா(வா)ன்!

மாய மா(வா)ன்!

ஷெல்லிதாசன்

துரோகியும் நண்பனென
துணைக்கு வருவான் - உனது
தோள்மேலே கையைப் போட்டு
நெருக்கி நடப்பான்!

அன்னையைப்போ லகலாது
அன்பைச் சொரிவான் - தன்னை
ஆழமாக நம்பு தற்காய்
அனைத்தும் பொறுப்பான்!

இல்லாத வகை யெல்லாம்
உன்னைப் புகழ்வான் - உனக்கு
ஏற்றவாறு தன் செயலை
மாற்றி அமைப்பான்!
பின்னும் முன்னும் உன் செயலை
நோட்டம் விடுவான் - தனது
பின்னும் வலை அமைப்புக்களை
மெல்ல விரிப்பான்’

பலவீன நாடிகளை
தேடி அறிவான் - உனது
பசிக்கேற்ற ரசனைகளால்
தோய வார்ப்பான்!

உச்சியிலே உன்னை யேற்றி
கிறங்க வைத்து - தனது
உச்ச பலன் உயிரெடுத்து
மாய மாவான்!


அகரம் அறியாத(வர்)  தகரம்

ஆசுகவி அன்புடீன்

ஆதியை மறைத்து
அந்தத்தைப் புகழும்
அந்தகன்களா அவர்கள்
மரங்களுக்கு மாலை சூட்டுகிறார்கள்
வேர்களை விலக்கி வைத்துவிட்டு....??

கருப்பா(ட்)டு மந்தைக்குள்
ஒரு வெள்ளாடு
கண்டு கொள்ளப் படாதது எங்கனம்?
மறைக்க முடியுமா
முழுப் பூசணிக்காயை சோற்றுக்குள்....?
முடியுமா மூட சுளகால் சூரியனை....?
பூக்களை விலக்கிவிட்டு
முட்களை நுகரும் ஒட்டகங்களா அவர்கள்....?

கனி இருக்க
காய் பறிக்கும்
கபோதிச் செயலை
என்னவென்று சொல்வது?

மரத்தைச் சொல்லித்தானே
பழத்தைச் சொல்வது
பழத்தைச் சொல்லி
மரத்தையார் மறைப்பது.....?

இலையைக் காட்டி
மரத்தை வினவலாம்
மரத்தை மறைத்து
இலையை யார் இரசிப்பது?

அகரம் தமிழுக்கு சிகரம்
அச் சிகரம் அறியாதவர்
வெறும் தகரம்தான் போங்கள்!


பசியாதே வயிறே!

பாலமுனை வாஹீட்

ஒருசாண் வயிறே - நீ
ஒருபோதும் எனக்கு
பசியாதிருப்பாயானால்
பதவி தொழில் கேட்டு
எவனிடமும் சென்று
சிரம் பணியமாட்டேன்.
உடுதுணி இல்லாவிடினும்
ஒதுங்கிடுவேன் மூலையிலே.


துயர் துடைத்திடுங்கள்!

வாசுகி குணரத்தினம்

யார் மூட்டிய தீயிது
நமது பெண்களின்
குருதி உறைந்து விடும்
போல் தெரிகிறது
பிய்த்து எறிந்து விடின்
பற்றி எரியும்
பகைவர்களின் கைகள்
போராட்டம் ஓய்ந்து
புதுவாழ்வைத் தேடி
தேரோட்டம் தொடங்கும் போது
யார் தேட்டம் இதுவென்று
யாருக்கும் புரியவில்லை
குழம்பித் தவிக்கின்ற
குலப் பெண்கள்
கைகளில் வாளேந்தி
காமுகர் உடம்பினை
கிழித்து எடுத்திடுங்கள்
இது விடுதலையின் ஆரம்பம்
பயந்து ஒதுங்காமல்
பாய்ந்து சீறிடுங்கள்
பெண்கள் அமைப்பெல்லாம்
பெருமை பேசும் தலைவியெல்லாம்
பெயரளவில் தான் என்று
இப்போது புரிகின்றது.
எல்லோரும் ஊமையாகி
இருக்கின்ற அமைப்பெதற்கு
சந்தர்ப்பம் கதவைத் தட்டும்
சதிகாரர் யார் என்று
சரித்திரம் நாளை சொல்லும்
வென்றிட எழுந்து வாரீர்
வெற்றிவாள் கையிலேந்தி
கொடுமை செய்யும் பாதகரை
குவிந்து வீழ்த்திடுவீர்!


பிரிவு

எப். பஸ்ஹா நிஸார்

காற்றோடு கைகோத்து
கலகலப்பாய் உலா வந்த
கல்லூரி வளாகம்.....

பட்டப் பெயர் சூட்டி,
பட்டாசாய் சிரித்த
பகிடிவதை நேரங்கள்......

கிண்டலடித்த மாணவனை
அதிபரிடம் மாட்டி வைத்த
கிலி கொள்ளும் குறும்புகள்......

இளமைத் தென்றலின்,
இதயத் துடிப்பான
சுற்றுலாப் பயணங்கள்.......

ஆசிரியரைக் கண்டு,
ஆரவாரமாய்ப் புரட்டிய
புத்தகப் பக்கங்கள்......

நண்பியின் உணவை
நடிப்பாய்த் திருடிய
இடைவேளைப் பொழுதுகள்.....

நினைக்க நினைக்க இனிக்கும்
நெஞ்சினில் நிதம் வீற்றிருக்கும்
நட்பின் ஞாபகச் சின்னங்கள்!


குழந்தை வளர்ப்போம்

பா. முருகானந்தம்

குழந்தை குழந்தை
என்று பல நாள்
வேண்டி கிடைத்தவரும்
இன்றும் கிடைக்காதவரும்
பலருள்ளர்

குழந்தை கிடைத்தவர்களில்
கல்லைக் கட்டி
கிணற்றில் போட்டவர்
ஒருவர்!
சீலையில் சுற்றி
மலக்குழியில் போட்டவர்
இன்னொருவர்!

பெட்டி ஒன்றில்
தூக்கிப் போட்டவர்
இன்னும் ஒருவர்!

கழுத்தை தெரித்து
கொன்று விட்டவர்
இன்னும் ஒருவர்

விற்று விட்டு
ஓடிச் சென்றவர்
இன்னும் ஒருவர்

புதைத்து விட்டு
பேசாமல் இருந்தவர்
இன்னும் ஒருவர்!

பெற்ற செல்வத்தை
யாவரும் பாசம் காட்டி
வளர்க்கும் சிறந்த
மானிடராவோம்!


என்ன வாழ்க்கை இது?

கவிஞர் செ. குணரத்தினம்

பிறந்தவுடன் என்கழுத்தை
பிடித்து நெரித்திருந்தால்
இறந்திருப்பேன்; அதன் பிறகு
எதையாவதென்னுடைய
இறப்பிற்கோர் காரணத்தை
எடுத்தச் சொல்லி
மறைத்திருக்கலாம், அம்மா
மறந்தே போனாள்!

இப்போது என்னைத்திட்டி
ஏசுவதால் என்ன பயன்?
அப்பாக்கு உழைத்துப் போட
அவர் சோம்பல் விடுவதில்லை!
எப்போதும் அம்மாவோடு
இளந்தாரிக் கூத்துக் காட்டி
இப்போதும் மாசமவள்!
இதற்கெல்லாம் நான் பொறுப்பா?

தங்கைகள் நால்வருக்கும்
தமையன் நான் என்றாச்சு!
பொங்கியெழும் வறுமைகண்டு,
“பொறுப்புள்ள மகனா நீயும்!
எங்களுக்கு மூத்தபிள்ளை!
இளந்தாரி சும்மா நாளும்
இங்கிருந்தால் சாப்பாட்டிற்கு
என்னவழி?” என்றழுவார்!

அப்பனைப்போல் நானுமொரு
அநியாயப் பிறவியானேன்
எப்படி உழைப்பேன்? கை கால்
இயங்காத சொத்தியாக
இப்புவியில் பிறக்க வைத்த
என்னம்மை, அப்பனுக்கு
துப்பரவாய் அறிவேயில்லை’
தூ! இதென்ன துயரவாழ்வு?


நினைவிருக்கிறதா?

கவிஞர் எஸ். ரபீக்

எப்போதாவது
உன் ஊருக்கு
வரும் போது
முதன் முதலில்
உன் நினைவுகளே
என் கையைப் பிடித்து
அழைக்கின்றன.

மர நிழலில்
தெரு மணலில்
கவிதைகளை
எழுதிப்பார்த்து
நான் நகர்ந்து
சென்ற பிறகு
நீ வந்து
எதை எதையோ
எழுதிப்பார்த்தாயே
நினைவிருக்கிறதா?

மேடையில் ஏறியதும்
எல்லோரும் எனைப்பார்க்க
நான்
உன் வீட்டு திசை பார்த்து
பேசினேனே
நினைவிருக்கிறதா?

மாலை நேரம் ஆனதும்
வீட்டு முற்றத்தை
பெருக்கும் சாட்டில்
எனக்காக
காத்துக்கொண்டிருந்தாயே
நினைவிருக்கிறதா?

உன் வீட்டில் இருந்து
உணவு வந்தால்
அம்மா சமைத்ததை
சாப்பிடாமல்
உன் வீட்டு சமையலை
சாப்பிட்டேனே
நினைவிருக்கிறதா?

அப்பா என்னை
அடிக்கும் போதெல்லாம்
அதற்காக
உண்ணாமலும்
உறங்காமலும்
இருந்தாயே
நினைவிருக்கிறதா?

ஆற்றில் நான்
குளிக்கப்போகையில்
உன் வீட்டார்
ஆடைகளை எல்லாம்
அள்ளி வந்து
துவைக்கத் தொடங்கி
என்னையும்
தாமதப்படுத்தினாயே
நினைவிருக்கிறதா?

பள்ளிக்கூடம்
செல்லாத நாளில்
நோட்டுப்புத்தகங்களை
வாங்கிச் சென்று
பாடங்களை
எழுதி அனுப்பினாயே
நினைவிருக்கிறதா?

பரீட்சையில்
என்னைவிட
அதிக புள்ளிகளை
பெறும் போது
அதைக் கொண்டாடாமல்
இருந்தாயே
நினைவிருக்கிறதா?

இன்று
தெரிந்தவருக்கெல்லாம்
உன் திருமண அழைப்பிதழை
அனுப்புகிறாய்
நானும்
உனக்குத் தெரிந்தவன்தான்
நினைவிருக்கிறதா?


உனை விஞ்ச இயலுமோ?

ரிஸானா இல்யாஸ்

எழுதப்படும்
எல்லா எழுத்துக்களும்
உன்
எழுது கோலின்
மைத்துளியில் இருந்து
இரவல் வாங்கப்பட்டவை

வரையப்படும்
வண்ண ஓவியங்கள் எல்லாம்
உன்
கற்பனையில் இருந்து
காப்பியடிக்கப்பட்டவை

வடிக்கப்படும்
எல்லா வடிவங்களும்
உன்
வல்லமையிலிருந்து
வார்த்தெடுக்கப்பட்டவை

எழுத்து ஆக்கி
எண் கோத்து...

பா ஓதி
பரிசில் பெற்று....
அப்பப்பா......!
எத்தனை எத்தனை
சிறப்புப் பட்டங்கள்
மறைந்து போகும் - இம்
மா மனிதர்களுக்கு?

ஏன்....
நீ மட்டும்
நீயாக....
நிலைத்தவனாய்....?

தனித்துவமாய்......?
எதுவும்
தேவையற்றவனாய்......?

ஓ......!
அத்தனைக்கும்
ஆதி மூலம் நீயன்றோ?
என் இறைவா......!
உன்னை விஞ்ச
இங்கு
எவர்தான் உளரோ?


பேய் வடிவில் வந்ததென்ன பெருங்கடலே?

கீழ்கரவை கி.குலசேகரன்

உன்னை நம்பி வாழ்ந்திருந்தோம்
பெருங்கடலே! என்றும்
உன் கரையில் வாழ்ந்ததெங்கள்
பரம்பரையே!
எம்மையிங்கு அழிக்க வந்தாய்
ஏன் கடலே? - நீ
எமனாவாய் எமக்கென்று
எண்ணலையே!... .... (உன்னை)

நீயின்றி வாழ்வில்லை
என்றிருந்தோம்! - என்றும்
நின் கரையைத் தாய் மடியாய்
நினைத்திருந்தோம்!
பேய் வடிவில் வந்ததென்ன
பெருங்கடலே - நீ
பேரழிவைத் தந்ததென்ன?
புரியல்லையே!.... ..... (உன்னை)

பொங்கி வந்து உயிர்களை நீ
பலியெடுத்தாய்!
பொருளோடு பொன்னையும் நீ
பறித்தெடுத்தாய்!
எங்கு செல்வோம்? எமக்கெதுவும்
புரியல்லையே - நீ
எமை அழிக்க ஏன் வந்தாய்
தெரியல்லையே! .... .... (உன்னை)


நினைவுக்கு வருகிறாய்!

- எம்.ஏ. றமீஸ் -

உன் பிரிவின்
மெளனங்களை
மொழி பெயர்த்தபடி
இரவும் நானும்!

தொலைவில் இருந்து
துன்புறுத்துகிறாய்....
தொந்தரவுகளோடு நான்.

உன் காதல்
எனக்கு
பலமா
பலவீனமா புரியவில்லை
ஆனால்

என் அன்புக்கு கிடைத்த
தண்டனை நீ!

கடற்கரையில்
உன் நினைவுகளோடு
நடந்து சென்றேன்
ஓட்டிக் கொண்டது
மணலாக
உன் ஞாபகங்கள்!

உன்னை
மறக்க நினைக்கும்
போதுதான்
அடிக்கடி
நினைவுக்கு வருகிறாய்!!

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.