புத் 64 இல. 09

கர வருடம் மாசி மாதம் 14ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 04

SUNDAY FEBRUARY 26,  2012

 
தேசியப் பிரச்சினைக்கான

தேசியப் பிரச்சினைக்கான

தீர்வில் ஜனாதிபதியின் ~~செனட்'' எனும் எண்ணக்கரு

ஈராண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் வைத்து இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குடன் இடம்பெற்ற பேச்சுக்களின் போது முதன் முதலாக ஜனாதிபதி தேசியப் பிரச்சினைக்கு ஒரு தீர்வாக 13 வது திருத்தத்துக்கு அப்பால் செல்லும் தமது நோக்கத்தை வெளிப்படுத்தினார். ஆனால் சமீபத்தில் கருத்துக்கூறிய ஜனாதிபதி - 13 வது திருத்தத்துக்கு அமைவாக அதிகாரப் பகிர்வுக்கு தயார் என்று தான் கூறிய போதிலும் மாகாண சபைகளுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்குவதற்குத் தயாராக இல்லை என்று கூறியிருந்தார்.

அப்படியானால் ஜனாதிபதி பிரச்சினைக்குத் தீர்வாக முன்மொழிந்த 13+ என்பது உண்மையில் எதனைப் பொருள்படுத்தியது என்ற ஆச்சரியம் பலருக்கும் ஏற்பட்டது. சிறுபான்மையினருக்காக ஆட்சிக் கட்டமைப்பில் போதியளவு பிரதிநிதித்துவத்தை வழங்கும் வகையில் செனட் சபையை தாபிப்பதே ஆச்சரியத்துக்கு விடையாயமைந்தது, அதனையே அரசாங்கமும் கூறுகிறது. உண்மையிலேயே- ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2010ல் தேர்தலுக்கு முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனமான "மஹிந்த சிந்தனை எதிர்கால நோக்கு" கையேட்டில் அடங்கியுள்ள வாக்குறுதிகளில் ஒன்றே செனட் சபை தாபிப்பாகும் என சுட்டிக்காட்டப்படுகிறது.

இந்திய வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணாவுடனான சந்திப்பின் போது அரசியலமைப்புக்கான 13 வது திருத்தத்தை நிறைவேற்ற உடன்பட்டதாகவும் பிளஸ் என்பது செனட்டை தோற்றுவிப்பதாகும் என்றும், 13 வது திருத்தத்தின் கீழான பொலிஸ் அதிகாரங்கள் விவகாரம் உத்தேச பாராளுமன்ற தெரிவுக்குழுவினாலேயே தீர்மானிக்கப்பட வேண்டியிருக்கும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

அது அவ்வாறிருக்க- சிறுபான்மையினருக்காக ஆட்சிக் கட்டமைப்பில் போதியளவு பிரதிநிதித்துவத்தை வழங்குதல் என்ற பிளஸ் எனும் செனட் இனப்பிரச்சினைக்கு தீர்வாகவன்றி மாநகர சபை, மாகாண சபை என்ற வரிசையில் மற்றுமொரு சபையாக அமைந்துவிடலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. செனட்சபை அங்கத்தவர்கள்- ஒரு ஆளுநர் நியமனம் போன்றது என்றும், வர்ணிக்கப்படுகிறது. அதேநேரம் தமிழ் மக்களோ முஸ்லிம் மக்களோ தங்களது பிரதிநிதித்துவங்களை ஆட்சிக் கட்டமைப்பில் அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையையோ, செனட்டையோ முன்மொழியவில்லை என்று கூறப்படுகிறது.

விளக்கமளிப்பு

இந்திய பிரதமர் மன்மோகன் சந்தித்த தருணத்தில் பல வருடங்களுக்கு முன்பு கூறியதே 13 பிளஸ் என்பதாகும். ஜனாதிபதியே செனட் பற்றியும் பிரஷ்தாபித்தார். பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெறாதவர்களை மாகாண மட்டத்திலிருந்து பிரதிநிதிகளாக உள்வாங்கிக் கொள்ளும் ஒரு மத்திய கட்டமைப்பாகவே செனட் இருக்கும். குறிப்பிடத்தக்களவான தமிழ், முஸ்லிம் மற்றும் ஏனைய குழுவினரை உள்ளடக்கியதாக சபை அமையும். இந்த செனட் சபை- மாகாண நலன்களை மத்திப்படுத்தவும், இடமளிக்கவும் உறுதிணையாக செயல்படுமாம். சட்டங்கள் அமுலாகவும், செயல்பாடுகாணவும் பாராளுமன்றமும், செனட்டும் உடன்பட வேண்டியிருக்கும், பாராளுமன்றம் உண்மையான பிரதிநிதித்துவத்தை வழங்காது என்ற வகையில் செனட் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கலாம் என பிரிக்கப்படுகிறது.

ஏற்க மறுப்பு

இதேவேளை இந்திய பிரதமரிடம் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் வழங்கிய வாக்குறுதியை மீள அழைத்த தமிழ்க் கூட்டமைப்பின் குரல் கொடுக்கும் முக்கியஸ்தர் ஒருவர்- பிணக்குக்கு தீர்வு காணும் வகையில் ஒரு செனட்டை தாபிக்கும் அரசாங்கத்தின் முயற்சியை நிராகரித்தார். இனப்பிரச்சினைக்கு செனட் ஒரு முழுமையான தீர்வல்ல, ஒரு மொத்த அதிகாரப் பகிர்வில், ஒரு பகுதிமாத்திரமே மாகாணமட்டத்தில்' அதிகாரங்களுடன் குழப்பிக் கொள்ளத் தேவையில்லை எனச் சுட்டிக்காட்டிய அவர் ஐக்கிய இலங்கைக்குள் மாகாணத்தின் தேவைக்கேற்ப அந்த மாகாணத்தை அபிவிருத்தி செய்வதே எமது தேவையாகும் என்றார்.

இதேவேளையில் ஹினிதி தலைவர் ஆர். சம்பந்தனை ஜனாதிபதி அழைத்து கலந்துரையாடியுள்ளார். அரசாங்கத்துக்கும் ஹினிதி க்கும் இடையிலான பேச்சுக்களி லேயே தீர்வுகள் எட்டப்பட வேண்டும் என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு கண்டடையப்படுகின்ற தீர்வு பாராளுமன்றத் தெரிவுக்குழு முன்பாக வைக்கப்படுகையிலேயே தங்களால் தெரிவுக்குழுவில் பங்கேற்க முடியும் என்று கூறியுள்ளதையும் இவ்விடத்தில் சுட்டிக்காட்ட முடியும். இனப் பிரச்சினைக் கான தீர்வு, அதிகாரப் பகிர்வு சம்பந்தமாக கலந்துரையாடி எட்டப்படுகின்ற தீர்வையே தெரிவுக்குழு முன்பாக கொண்டு செல்வதாக ஏற்கனவே உடன்பட்டிருந்ததையும் சுட்டிக்காட்டுகின்றனர்.

அரசாங்க முக்கியஸ்தர்

கடந்த ஆறு- ஏழு வருடங்களாக கலந்துரையாடப்படுகின்ற ஒரு விவகாரமே செனட் எனக்குறிப்பிடுகின்ற அரசாங்க அமைச்சரொருவர்- தான் ஒரு திஜிஞிவி அங்கத்தவராக இருந்தவன் என்றவகையில் சர்வகட்சி பிரதிநிதிகள் கூட்டத்திலும் கருத்துப் பரிமாற்றத்துக்காக செனட் என்ற யோசனை முன்வைக்கப்பட்டதை எடுத்துரைத்தார்.

செனட் சபையானது மாகாண சபைகளை மத்தியில் பிரதிபலிக்கும் அதாவது செனட்டில் மாகாண சபைகளின் பிரதிநிதிகளும் இருப்பார்கள். ஒன்பது மாகாண சபைகளில் இருந்தும் பிரதிநிதிகளை செனட், உள்வாங்கிக் கொள்ளுமாதலால், மத்திய அரசின் ஏதேனும் சட்டவாக்கம் தொடர்பாக தத்தமது கருத்துக்களை முன்வைக்கும் வாய்ப்பு அனுமதிக்கப்படுகிறது.

ஆட்சிக் கட்டமைப்பில் சம்பந்தப்பட வேண்டிய அதிகமான முக்கியஸ்தர்கள் உள்ளனர். ஆனால், பல்வேறு காரணங்களுக்காக சமகால அரசியல் முறைமைகளில் பங்கேற்காதிருக்க தீர்மானித்த வண்ணமுள்ளனர். தொழில் வாண்மை மிக்கவர்கள் துறைசார் நிபுணர்கள், சமூகத்தில் பெறுமதிமிக்க முக்கியஸ்தர்கள் போன்றோரில் பெரும் பான்மையானோர் அரசியலுக்குள் பிரவேசிப்பதற்கு இஷ்டமின்றி காணப்படுகின்றனர்.

இதனை அடியொற்றியே 1978ம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டம் தேசியப் பட்டியல் என்ற ஒரு உபாயத்தை அறிமுகப்படுத்தியது. துரதிஷ்ட வசமாக அது ஒரு அரசியல் அகதிமுகாம் போன்றாகி விட்டது. வாக்காளர்களால் நிராகரிக்கப்படுகின்ற அரசியல் வாதிகள் பாராளுமன்றத்திற்குள் பின்கதவால் நுழைகின்ற உபாயமாக தேசியப் பட்டியல் மாறியுள்ளதையும் மறுப்பதற்கில்லை.

உண்மையிலேயே, தேசியப் பட்டியலின் மூலக்குறிக்கோள்- ஆட்சிக் கட்டமைப்பில் கட்டாயம் பங்காற்ற வேண்டியவர்களுக்கு இடமளிப்பதற்கானதாகவே இருந்தது. ஆனால் அத்தகையோர் அரசியல் முன்னெடுப்புகளில் இணைய இஷ்டமின்றி இருந்தனர். ஆகவே உத்தேச செனட்சபை அத்தகைய இரட்டைப் பங்காற்றும். அந்த வகையில் அந்தவகையான பிரேரணையை கருத்துப் பரிமாற்றத்துக்குள்ளாக்கலாம் என்று கூறப்படுகிறது.

அரசியல் புத்திஜீவிகள் அரசியல் முன்னெடுப்புகளுக்குள்ளேயே பிரவேசிக்க இஷ்டமின்றியிருக்கிறார்கள் எனில், எவ்வாறு செனட்டுக்குள் பிரவேசிக்க முடியும். அது அரசியலலில்லையா என்று அரசியல் ஆய்வாளர்கள் கேள்வி எழுப்பக்கூடும், அவ்வாறு அவர்கள் செனட் என்ற அரசியலை விரும்பாவிடின்- அதுவும் காலக்கிரமத்தில் அகதிகள் முகாம் என வர்ணனைக்குள்ளாகும், தேசியப் பட்டியல் போன்றாகி விட்டதா?

பாராளுமன்ற மேலாண்மை பகிரப்படுவதை விரும்பாத சில சக்திகள்- அதனை நடக்கவைக்கும் செனட்டையும் விரும்புவரோ என்பது நியாயமான தர்க்கமாகும். தேசியப் பட்டியல் கட்சித் தலைவரின் நேசத்துக்குரியவர்களுக்கே சொந்தமானது என்றாலும் குறித்த பட்டியல் மூலமாக புத்திஜீவிகள் உள்வாங்கப்படவில்லை என்று அடித்துக் கூறிவிடவும் முடியாது.

செனட் வரலாறு

1883ம் ஆண்டு டிசம்பர் மாதம் 06ம் திகதி சேர் ஆர்த்தர் ஹெமில்டன் கோர்டன் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட பழைய சட்டவாக்க கவுண்சில் கட்டிடத்தில் செனட் அமையப் பெற்றிருந்தது. 1971 ம் ஆண்டு ஒக்டோபர் 02ம் திகதி செனட் இல்லாதொழிக்கப்பட்டது. செனட் அமையப் பெற்றிருந்த கொழும்பு கோட்டையிலுள்ள கட்டடத்தில் வெளிநாட்டமைச்சு நிலை கொண்டுள்ளது.

சோல்பரி அரசியலமைப்பின் கீழ் ஸ்தாபிப்புக்கண்ட பாராளுமன்றத்தின் மேல் சபையான செனட் 1947 இல் செயல்பாட்டுக்கு வந்தது. 24 ஆண்டுகளுக்குப் பிறகே ஒழிவு கண்ட செனட் ஒழிப்பு சட்டமூலத்துக்கு 1971 ஒக்டோபர் 02ல் ஆளுநர் நாயகம் ஒப்பமிட்டார். 30 அங்கத்தவர்களைக் கொண்ட செனட் சபைக்கு பிரதிநிதிகள் சபையால் 15 பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மிகுதி 15 பேர் ஆளுநர் நாயகத்தால் நியமிக்கப்பட்டனர். ஒரு செனட்டரின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகளைக் கொண்டதாக இருந்தது. ஆரம்பத்தில் முதல் செனட்டில் சில செனட்டர்களுக்கு பதவிக் காலம் குறுகிய காலமாயமைந்தமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய யாப்பின் படி ஒரு அமைச்சராக ஒருவர்நியமிக்கப்பட வேண்டுமானால் அவர்- தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற பிரதிநிதியாகவோ அல்லது நியமிக்கப்பட்ட பாராளுமன்ற பிரதிநிதியாகவோ இருக்க வேண்டும் என்பது போல் அன்றைய யாப்பின் பிரகாரம் அமைச்சர் பதவிக்கு உரித்தாகுவதற்கு அவர் மக்கள் பிரதிநிதியாக அல்லது நியமிக்கப்பட்ட பிரதிநிதியாக இருக்க வேண்டும் அல்லது செனட்டராக இருக்க வேண்டும்.

அந்த வகையில் செனட்டர்கள் பலர் அமைச்சர்களாக இருந்துள்ளனர். அமைச்சராக்குவதற்காக பலர் செனட்டர்களாக்கட்டுள்ளதையும் அறிய முடிகிறது. மாத்திரமன்றி, அமைச்சுப் பதவிகள் குறிப்பாக நீதி அமைச்சர் பதவி செனட்டர் ஒருவருக்கே வழங்கப்பட்டு வந்துள்ளதை வரலாற்றில் அவதானிக்க முடிகிறது. இந்தடிப்படையில் 1959 செப்டம்பரில் படுகொலை செய்யப்பட்ட பிரதமர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கவின் இடத்திற்கு மனைவியான சிறிமாவை நியமிப்பதற்கு செனட்டுக்கு உள்வாங்கச் செய்யப்பட்டே நியமனம் மேற்கொள்ளப்பட்டது.

அன்று 1959/1960 காலப்பகுதியில் செனட்டர்களில் ஒருவராக இருந்த எம்.பி. டி சொய்ஸா என்பவர் திருமதி சிறிமா பண்டாரநயாக்கவை உள்வாங்கிக் கொள்வதற்காக ராஜினாமா செய்தார். 1960 ஜுலையில் ஒரு செனட்டர் என்றடிப்படையிலேயே திருமதி சிறிமா பண்டாரநயாக்க பிரதமராக நியமிக்கப்பட்டார். 1965 மார்ச்சிலேயே அத்தனகல்ல தேர்தல் தொகுதியில் இருந்து 16500க்கு மேற்பட்ட பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்துக்கு தெரிவானார்.

செனட்டர்கள்- அமைச்சர்கள்

சுதந்திர இலங்கையில் 1947/52, 1952/53, 1953/56, 1956/59, 1960/65, 1959/65, 1965/70 + 71 காலப்பகுதியில் இருந்த அமைச்சரவைகளில் செனட்டர்களே நீதித்துறை அமைச்சர்களாக இருந்துள்ளனர். முறையே சேர் லலித்த ராஜபக்ஷ எம்.டபிள்யூ. எச்.டி. சில்வா, வெலன்டைன் எஸ். ஜெயவிக்ரம, எட்மன்ட் ஜோசப் குரே, சாம் பி.சி. பெர்ணான்டோ, ஜி.சி. டி. டீசில்வா, ஏ.எப். விஜேமான்ன, ஜே.எம். ஜெயமான்ன போன்றோர் பதவி வகித்துள்ளதை காண முடிகிறது. இதுதவிர செனட்டர் சேர் ஒலிவர் குணத்திலக்க- உள்நாட்டலுவல்கள் - கிராமிய அபிவிருத்தி, விவசாயம்- உணவு நீதி ஆகிய துறைகளுக்கான அமைச்சராக மூன்று தடவைகளிலும் செனட்டர் சேர் கந்தையா வைத்தியநாதன்- வீடமைப்பு சமூகசேவைகள் அமைச்சராகவும், செனட்டர் ஏ.பி. ஜெயசூரிய- உள்நாட்டலுவல்கள் அமைச்சராகவும், சுகாதார அமைச்சராகவும், உள்ளூராட்சி மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சராகவும், மூன்று தடவைகளில் பதவி வகித்துள்ளார்.

செனட்டர் சி. விஜேசிங்க 56/59 ல் தேசிய மயமாக்கப்பட்ட சேவைகள் மற்றும் கப்பல்துறை அமைச்சராகவும் 60/65 காலப்பகுதியில் குறித்த துறைகளோடு தொழில் அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். செனட்டர் லயாட் ஜெசுந்தர- உள்ளூராட்சி வீடமைப்பு மற்றும் 1960 ல் புதிதாக உருவாக்கப்பட்ட உள்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சராகவும் இருந்துள்ளார். செனட்டர் எம்.வி.பி.பீரிஸ்- சுகாதார சமூக சேவைகள் அமைச்சராகவும், வர்த்தக வாணிப அமைச்சராகவும் பொறுப்பேற்றிருந்துள்ளார். செனட்டர் செல்லைய்யா குமாரசூரியர்- தபால் தொலைத் தொடர்புகள் அமைச்சராக பதவி வகித்துள்ளார்.

முக்கிய செனட் தகவல்கள்

1948ம் ஆண்டில் ஜூலையில் சேர் ஒலிவர் குணதிலக்க லண்டனுக்கான சிலோன் உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டதையடுத்து அவரது இடத்துக்கு செனட்டர் ஈ.ஏ.பி. விஜேரட்ண/உள்நாட்டலுவல்கள் கிராம அபிவிருத்தியமைச்சராக நியமிக்கப்பட்டார். 1953 நவம்பர் 07ம் திகதி செனட்டர் சேர் லலித் ராஜபக்ஷ நிதியமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து செனட்டர் ஈ.டி. விக்கிரமநாயக்க அப்பொறுப்புக்கு நியமிக்கப்பட்டார்.

1953 ஒப்டோபர் 22ம் திகதி ஜி.ஜி. பொன்னம்பலம் ராஜினாமா பண்ணியதையடுத்து செனட்டர் சேர் கந்தையா வைத்தியநாதன் கைத் தொழில், வீடமைப்பு சமூக சேவைகள் அமைச்சராக நியமிக்கப்பட்டார். செனட்டர் எம். டபிள்யூ. என். எச். டி. சில்வா இரண்டு நாட்களுக்கு மாத்திரம் நீதி அமைச்சராக எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கவின் இரண்டாவது அமைச்சரவையில் பதவி வகித்தார். அவர் ராஜினாமா செய்ததும், அவரது இடம், வெலன்டைன் எஸ். ஜெயவிக்ரமவினால் பொறுப்பேற்கப்பட்டது.

1971ம் ஆண்டு ஒக்டோபர் 02ம் திகதி செனட் ஒழிக்கப்பட்டதைத் தொடர்ந்து அன்றைய தினம் நீதி அமைச்சராக இருந்த செனட்டர் ஜெ.எம். ஜெமான்ன தனது பதவியை ராஜினாமா பண்ணியதையடுத்து பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்க, அவரது பொறுப்புகளுக்கு மேலதிகமாக நியதிமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்.

நியமன எம்பியான ஜோன் றொட்ரிகோ ராஜினாமா செய்தததைத் தொடர்ந்து, அவரது இடத்துக்கு 1972 பெப்ரவரியில் பிரதிநிதிகள் சபைக்கு செனட் உறுப்பினராக இருந்த செல்லைய்யா குமாரசூரியர் நியமிக்கப்பட்டார்.

எது எவ்வாறாயினும் காணி பொலிஸ் அதிகாரங்களை வழங்காமல் இரண்டாவது சபையாக ஒரு செனட்டை தோற்றுவிப்பதை அடையாப்படுத்தும் குறித்த உத்தேச முன்மொழிவு- 13+ என்பதை 13 வது திருத்தமும் செனட்டும் மைனஸ் காணி பொலிஸ் அதிகாரங்கள் என வரைவிலக்கணப்படுத்தலாம்.


போகிற போக்கில்...
நதிகள் பின்னோக்கிப் பாய்வதில்லை

தம்பர் என்ன பைபிளை வச்சு கண் வாங்காமல் பாக்கிறியள், அப்பிடி என்ன புதினம்.

என்ன வாத்தியார், புனிதமான பைபிளை இந்த ஊரைக் கொள்ளையடிச்சு ஏதோ நான்தான் தமிழ்ப் பத்திரிகைச் சாம்ராச்சியத்தின் வழிகாட்டிக் கெந்திப்பாயுற இந்தப் பேப்பருக்கு முடி சூட்டு றியள் வாத்தியார் உந்தப் பேப்பரிலை கூட்டுறவைக் குட்டிச் சுவராக்கிறவையிற்றைக் கொடுத்து புனிதமான கூட்டுறவைக் கொள்ளிவச்சு அரிச்சமாதிரி எழுதிக்கிடக்கு. இந்தக் கொடுமைக்கு எதிராக மக்கள் புனிதப்போர் புரிய வேண்டும் எண்ட மாதிரியல்லோ எழுதிக் கிழிச்சிருக்கிறாங்கள்.

உண்மைதான் தம்பர், உவை தூக்கிப் பிடிக்கிற கூட்டுறவுப் பிதாமகர்கள் செய்த சேவையை இப்ப நினைச்சாலும் நெஞ்சாலை இரத்தம் வரும். மக்கட் சேவை என்று யாருக்குத் தம்பர் உவை சேவை செய்தவை, வந்த மண்ணெண்ணெயை ஆருக்கோ பரல் பரலாய் குடுத்திட்டுச் சனங்கள் பயிருக்கு இறைக்கத் தவித்தபோது வீட்டிலை குரோட்டனுக்கும் பூக்கண்டுக்குமல்ல இறைச்சுக்கொண்டு மிச்சம் மீதியைப் புரோக்கர் மாரைக்கொண்டு கொடுப்பித்துத் தங்கட பையை நிரப்பி ஏப்பம் விட்டவை. அண்டைக்கும் இதை எழுதி இருக்கலாந் தானே? சனங்கள் முந்நூறு முந்நூற்றைம்பது ரூபாவுக்கு எண்ணெய் வாங்கி இறைக்க இல்லையோ? அந்த எண்ணெய் சங்கத்துக்கு வராமல் ஆரும் செளதியிலை இருந்து இறக்கினவையோ?

எல்லாரும் ஒருவனுக்காகவும், ஒருவன் எல்லாருக்காகவும் என்ற கூட்டுறவுப் புனித தத்துவத்தை, மாற்றியல்லோ சொல்லிக் காட்டினவை. மக்களை வருத்தி, ஏமாத்தி எத்தனையோ கோடி ரூபாவைத் தேடி அதை அழிச்சதோட இல்லாமல் பாதுகாப்புக்கெண்டு சொல்லிப் பந்தம் பிடிக்க வைப்பகத்திலை வச்ச இலட்சங்களுக்கு இண்டைக்கேற்பட்ட கதி என்ன? கூட்டுறவின்ரை வரன் முறைகளுக்கப்பால் பொருட்களின் விலையை, மக்களை வருத்திக் கூட்டி வித்து ஈட்டிய லாபம் இண்டைக்கு எங்கே? இலாபத்தை யார் யாருக்கோ தாரை வார்த்துச் கொடுத்திட்டு மிச்சம் மீதியையும் வட்டுவாகல் ஆற்றிலை போட்டுவிட்டு வெறுங்கையோடை வந்ததை ஒருக்கால் திரும்பிப் பார்த்தா சில விடயங்கள் தேடலுக்கு உதவும். அந்தப் புனிதர்களை புடம்போடவேண்டிய ஒரு தேவையும் இருக்கும் தானே? சில விடயங்களைக் கண்டறிய சில மாதங்களுக்கு ஒரு இடைக்கால நிர்வாகத்தை அமைச்சு இருக்கிறார்கள் போலத் தம்பர். அது மட்டுமல்லத் தம்பர், இந்தக் குறுகிய காலத்திலை சில விளையாட்டுகளும் வெளியாலை அரைச்சல் புகைச்சலாக இங்கை காதுக்கு வருகுது. மடிச்சுக் கட்டிறவையின்ரை நெருக்கமான ஒருத்தர் மீள்குடியேற்றம் நடந்தும் நடக்காததும் ஒரு சந்தர்ப்பத்தில் தலைவர் பொறுப்பை எடுத்துக் கொண்டார். அவர் என்ன செய்திருக்கிறார் எண்டால் சங்கத்தை நடாத்தக் காசில்லை என்று எவ்வித நடைமுறைகளையும் கையாளாமல் உசுப்பேத்திய காலத்துத் துணிச்சலோடு பதினைந்து, இருபது இலட்சங்களை மனைவியின் பேரில் வைப்பில் இட்டுச் சங்கத்தை இயக்க வைத்தாராம்.

நல்ல விடயந்தானே வாத்தியார். இவைகளைப் போல ஆக்கள் தான் தலைவராய் வரவேணும். வீக்க தூக்கம் பார்க்காமை நடத்த வேணுமெண்டா காசுக்காரன்தான் தலைவராய் வரவேணும். அப்படிப்பட்ட ஆக்களை விலத்திப்போட்டு சப்பி சருவட்டையைத் தலைவராக்கினால். உந்தப் பேப்பர்காரர் விடுவினமோ, அப்ப சரியாகத் தான் எழுதியிருக்கின்றான்.

அது சரிதான் தம்பர், வேரோடத்தான் விழாத்தி முளைக்கிறது. காசு குடுத்தாரோ குடுக்க இல்லையோ அது பிரச்சினையில்லைத் தம்பர். பிறகு நடந்த வேலைதான் கூட்டுறவுக்குக் கொள்ளிவச்ச கதை. குடுத்த காசுக்கு 20 வீத வட்டியை மாதம் மாதம் அறவிட்டுக்கொண்டு முதலையும் பாதுகாப்பாய் அல்லோ வைச்சிருக்கினம். இண்டைக்குக் கணக்குப் பார்த்தால் முதலை அரைவாசியை வட்டியாய் வாங்கிப்போட்டினம். இதைவிட பெரிய வேட்டைத் திருவிழாவை அதே சங்கத்தைச் சேர்ந்த பொது முகாமையாளர் தன்ரை இரண்டு லொறியைச் சாமான் ஏத்தப் பாவிச்சு ஊரிலை உலகிலை நடக்காத கூலியைச் சுடச் சுடக் கறந்திருக்கிறார். கறந்த காசைக் கணக்குப் பாக்கிறதாகக் கதை. கூட்டுறவு அதிகாரிகளும் அங்கை என்னத்தை ஆய்வு செய்யினம் என்று தெரிய இல்லை. இந்த விளையாட்டுகள் தொடர வேண்டும் என்கிறது தான் அந்த பைபிள் காரன்ரை ஆசை.

அண்டைக்கு யாழ்ப்பாணத்திலை கூட்டுறவுத் தந்தை வீரசிங்கம் அல்லது அளவெட்டி மல்லாகப் பொன்னம்பலம் போன்ற தூய்மையான தலைவர்களை யாரும் தூக்கி வீசியிருந்தால் இந்தக் கொதிப்பைக் கொதிச்சிருக்கலாம். இங்கையும் மக்களுக்காகச் சில தலைவர்கள் இருந்திருக்கிறார்கள். மக்களின் நலனுக்காக இலாபத்தை மட்டும் நோக்கமாகக் கொள்ளாது செயற்பட்டிருக்கிறார்கள்.

சங்கத்துக்கு இலாபத்தைக் காட்டி, அதில் ஒரு பகுதியைத் தாங்களும் சுருட்டி, இண்டைக்கு எல்லாமே ‘சிவசிவா’ எண்டு சொல்ல வைச்சுவிட்டுத் தலைமைச் செயலகத்தையும் தீ மூட்டி எரிச்ச புனிதர்களுக்குப் பூப்போட்டுப்பூசிக்கும் பத்திரிகைகள், ஒன்றை மட்டும் உணர வேண்டும். நதிகள் ஒருபோதும் பின்னோக்கிப் பாய்வதில்லை. கொஞ்சம் பொறுத்துப் பாருங்கள், உங்களின் புனிதர்களின் திறன்களை.

வன்னியன்

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.