புத் 64 இல. 09

கர வருடம் மாசி மாதம் 14ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 04

SUNDAY FEBRUARY 26,  2012

 

தமிழ் மொழியை உலகிற்கு எடுத்துச் சென்றவர்கள் இலங்கைத் தமிழர்களே

தமிழ் மொழியை உலகிற்கு எடுத்துச் சென்றவர்கள் இலங்கைத் தமிழர்களே

மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் ஏற்பாட்டில் அதன் முன்னாள் செயலாளரும் நாடகக் கலைஞரும் எழுத்தாளருமான அமரர் கே. கோவிந்தராஜ் நினைவாக நடத்திய கவிதை, சிறுகதை போட்டி பரிசளிப்பு விழா அண்மையில் மாத்தளையில் நடைபெற்றது.

மன்றத்தின் தலைவர் தெளிவத்தை ஜோசப் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் மாத்தளை பிரதேச சமூக தொண்டு நிறுவன பிரதிநிதிகள், ஆலய பரிபாலன சபை உறுப்பினர்கள், பிரதேச பாடசாலை அதிபர்கள், எழுத்தாளர்கள் ஆகியோர் மங்கல விளக்கேற்றினர்.

மன்ற செயற்குழு உறுப்பினர் கவிதாயினி லுணுகலை ஸ்ரீயின் வரவேற்புரையுடன் ஆரம்பமான இவ்விழாவில் தெளிவத்தை ஜோசப் தலைமையுரை ஆற்றினார். மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் தோற்றம், வளர்ச்சி குறித்து எடுத்துரைத்த அவர் அடுத்த வருடம் மலைநாட்டு எழுத்தாளர் மன்றம் பொன்விழா ஆண்டை கொண்டாடவிருப்பதாகவும் இன்றைய பிரபல எழுத்தாளர்கள் பலர் மலைநாட்டு எழுத்தாளர் மன்ற பாசறையில் வளர்ந்தவர்கள் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

இந்நிகழ்வின் போது தெளிவத்தை ஜோசப் எழுதிய அமரர் கே. கோவிந்தராஜ் பற்றிய குறிப்பும் விநியோகிக்கப்பட்டது.

போட்டிக்கு வந்த சிறுகதைகள் பற்றி அதன் நடுவர் குழாம் சார்பாக மலைநாட்டு எழுத்தாளர் மன்ற இணைச் செயலாளர் பதுளை சேனாதிராஜா உரையாற்றினார்.

மலையக சிறுகதைகள் மலையக மக்களின் வறுமை நிலையையும் குறைபாடுகளையும் மாத்திரம் சுட்டிக்காட்டாது வளர்ச்சிப் பாதைகளையும் பதிவு செய்ய வேண்டும் என சுட்டிக்காட்டினார். கிடைக்கப்பெற்ற கதைகளில் முதலாம் இடத்துக்கான கதை தெரிவு செய்யப்படாத நிலையில் இரண்டாம், மூன்றாம் பரிசுகளே வழங்கப்படுகின்றன எனவும் தெரிவித்தார்.

இலக்கிய ஆர்வலர் மாத்தளை பீர் முஹம்மது உரையாற்றும் போது; எழுத்தாளர்கள் காலத்தின் பதிவாளர்களாக விளங்குவதாகவும் ஈழத்து படைப்புக்கள் அதில் முன்னணியில் நிகழ்வதாகவும் தெரிவித்தார்.

ஈழத்து தமிழ் இலக்கிய படைப்புக்கான நோபல் பரிசு கிடைக்க வேண்டும் என்ற தனது ஆர்வத்தையும் வெளிப்படுத்தினார்.

போட்டிக்கு வந்த கவிதைகள் தொடர்பாக மலைநாட்டு எழுத்தாளர் மன்ற இணைச் செயலாளர் இரா. சடகோபன் தனதுரையில் இத்தகைய போட்டிகள் நடத்தப்படுவதனால் எழுத்தாளர்கள் எவ்விதம் ஊக்குவிக்கப் படுகின்றார்கள் என்பதை தனது அனுபவத்தின் ஊடாக எடுத்துரைத்தார்.

ஈழத்து தமிழ் இலக்கிய நூல்களை தமிழகத்துக்கு அனுப்புவதில் உள்ள தடையை நீக்குவது குறித்து இந்திய உயர்ஸ்தானிகரகம் சிந்திக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

சிறுகதை எழுத்தாளர் பெ. வடிவேலன் வெற்றிபெற்ற எழுத்தாளர்களுக்கான வாழ்த்துரையையும் மலைநாட்டு எழுத்தாளர் மன்ற காப்பாளர் மாத்தளை கார்த்திகேசு நன்றியுரையையும் வழங்கினர்.

பிரதம அதிதியாக கலந்து கொண்ட இலங்கைக்கான உதவி இந்திய தூதுவர் ஆ. நடராஜன் இலங்கையில் இந்திய வம்சாவளியினர் தமிழ் இலக்கிய துறையில் சாதனையாளர்களைக் கொண்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்றும், இலங்கைத் தமிழ் மக்களே உலகளாவிய ரீதியில் தமிழ் மொழியை எடுத்துச் சென்றுள்ளனர் என்றும் தெரிவித்தார். விழாவின் இறுதி நிகழ்வாக வெற்றி பெற்றோருக்கான பரிசளிப்பு இடம்பெற்றது. சிறுகதையில் இரண்டாம் பரிசு பெற்ற பதுளை உமாபதி, கவிதையில் முதலாமிடம் பெற்ற சிவனு மனோகரன் ஆகியோருக்கு பிரதம அதிதி பரிசில்களை வழங்கினார். கவிதைக்கான இரண்டாம், மூன்றாம் பரிசுகளை மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் காப்பாளர் எம். வாமதேவன், உபதலைவர் ப. ஆப்தீன் ஆகியோர் வழங்கினர். கவிதை மற்றும் சிறுகதை போட்டிகளில் தலா 10 பேருக்கு ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டன. மலையகத்தின் மூத்த எழுத்தாளர்களான அந்தனி ஜீவா, கவிஞர் அல் அஸ¤மத் உட்பட பல எழுத்தாளர்களும் சமூக ஆர்வலர்களும் பாடசாலை மாணவர்களும் விழாவில் கலந்து சிறப்பித்தனர். மலைநாட்டு எழுத்தாளர் மன்ற செயற்குழு உறுப்பினர் மல்லியப்பு சந்தி திலகர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.