புத் 64 இல. 09

கர வருடம் மாசி மாதம் 14ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 04

SUNDAY FEBRUARY 26,  2012

ஜெனீவாவில் வீண் பழி!

ஜெனீவாவில் வீண் பழி!

இலங்கையை மட்டுமல்லாது உலக நாடுகள் பலவற்றையுமே தமது பயங்கரவாத செயற்பாடுகளினால் திக்குமுக்காடி சிந்திக்க வைத்த எல். ரி. ரி. ஈ இயக்கத்தை அவர்களது சுமார் முப்பது வருட கால அதீத வளர்ச்சியின் பின்னர் முற்றாக அழித்து இன்று நாட்டில் பயப்பீதியை இல்லாமல் செய்து, அமைதி சமாதானத்தைத் தோற்று வித்திருக்கும் ஜனநாயக முறையில் மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் மீது உலக நாடுகள் சில எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாததொரு வாதத்தை நடத்தி வருகின்றன.

ஜெனீவா மாநாட்டில் இலங்கைக்கு எதிராக குற்றச்சாட்டு சுமத்தப்படுமா? உலக அரங்கில் வெற்றிகரமாக பயங்கரவாதத்தை ஒழித்த அரசு, அதே உலகின் முன்னால் செய்யாத குற்றத்திற்காக சிலரால் முன்னெடுக்கப்படும் சதிமுயற்சி காரணமாக கூனிக்குறுகி நிற்க வேண்டிய நிலை ஏற்படுமா? என்பது பற்றியும், அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதனை இலங்கை அரசு எவ்வாறு சமாளிக்கும்? சமாளிக்க முடியுமா? எனும் கேள்விகளும், ஐயப்பாடுகளும் கடந்த இரு வாரங்களாக நாட்டுமக்கள் முன்பாக எழுந்து நிற்பதைக் காணமுடிகிறது.

புலம்பெயர் தமிழ்ச் சமூகத்திற்குள் ஊடுருவிக் காணப்படும் எல். ரி. ரி. ஈ. ஆதரவாளர்கள் சிலர் தமது சர்வதேச வலைப்பின்னலூடாக சில உலக நாடுகளை தமது பக்கம் ஈர்த்து இலங்கைக்கு எதிராகச் சில பொய்க் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி சர்வதேச விசாரணை நடத்தக் கோரி வருகின்றனர். உள்நாட்டு யுத்தத்தில் உண்மையில் என்ன நடந்தது என்பதை சற்றும் அறியாத உலக நாடுகள் சில ‘சனல்-4’ போன்ற போலியாக வடிவமைக்கப்பட்ட ஒலி ஒளி நாடாக்களைப் பார்த்துவிட்டு ஒரு ஜனநாயக நாட்டின் அரசிற்கு எதிராக குரல்கொடுத்து வர முனைந்துள்ளன.

அதிலும் ஆச்சரியமும், அதிர்ச்சியும் தரும் விடயம் யாதெனில், எல்.ரி. ரி. ஈ. பயங்கரவாதிகளால் தமக்கும், தமது நாட்டிற்கும் கூட ஆபத்து எனக் கூக்குரலிட்டு அந்த இயக்கத்தை அழிக்குமாறு உதவிகள் பல செய்த சில நாடுகளும் கூட இன்று இலங்கை அரசிற்கு எதிராகக் கிளம்பியுள்ளமையானது வேடிக்கையாகவும் உள்ளது.

எதிரியை அழிப்பதே யுத்தத்தின் இலக்கு. அதிலும் கொடிய கனரக ஆயுதங்களுடன் ஒருகணம் தாமதித்தாலும் கொன்று குவிக்கக் காத்திருக்கும் பயங்கரவாத அமைப்பொன்றின் மீது நல்லவர் யார், கெட்டவர் யார் என்று நின்று கதைத்துப்பேசி யுத்தம் இடம்பெறவில்லை. இன்று இலங்கை அரசிற்கு எதிராக குரல் கொடுத்துவரும் அனைத்து நாடுகளிலுமே பெரும்பாலும் உள்நாட்டு யுத்தம் நடைபெற்றுவருகிறது. அதிலும் சில நாடுகள் வேறு நாடுகள் மீது கூட தேவையற்ற யுத்தத்தை வலிந்துகட்டி நடத்தியும் உள்ளன.

இந்நிலையில் யுத்தம் என்பது இருதரப்பு அடித்துப் பிடித்து விளையாடிவிட்டு டாட்டா காட்டிவிட்டு திரும்பிச் செல்வது போல நடைபெற்றிருக்க வேண்டும் என்று இன்று கதைசொல்ல முனைவது எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விடயம். தமது நாட்டிற்கும் எல்லைப்புறத்திற்கும் ஆபத்து வரும் என்பதால் கண்களை மூடிக்கொண்டு அழிக்குமாறு ஒற்றைக்காலில் நின்று உதவிகளும் கொடுத்து காரியத்தைச் சாதித்துக் கொண்டபின் இன்று அவர்கள் கூறவிளையும் கதைகளும், கற்பனைகளும் வெற்றிகண்டும் பழியைச் சுமந்துவரும் இலங்கை அரசாங்கத்திற்கு நிச்சயம் வேதனையளிப்பதாகவே அமைந்திருக்கும்.

வல்லரசுகள் எனக் கூறி தாம் மட்டும் பயங்கரவாதத்தை ஒழிப் பதற்காக இன்னொரு ஜனநாயக நாட்டின் எல்லைக்குள் அத்துமீறித் தனது படைகளை அனுப்பி கைது செய்யச் சந்தர்ப்பமும், கால அவகாசமும் இருந்த போதும் சுட்டுக் கொல்வதும், விசாரணை எதுவுமே இன்றி ஒருதலைப் பட்சமாக மரண தண்டனை விதிப்பதும் நாடுகளில் அதிகாரத்திலிருப்போருக்கு எதிராக கலவரங்களைத் தோற்றுவித்து பிரிவினைகளுக்கு வித்திட்டு வருவதும் எந்தவகையில் நியாயமாகும்?

அத்துடன் தமது சொந்த தாய் நாட்டிற்கு எதிராக சில உலக நாடுகள் தூக்கிவரும் போலியான போர்க்குற்றச்சாட்டுக்கு எதிராகச் செயற்படாது, ஏதோ இந்த நாட்டிற்கும் தமக்கும் சந்தர்ப்பமே இல்லாதது போன்று அதற்கு ஆதரவாகச் செயற்பட்டுவரும் உள்நாட்டவர்களின் வஞ்சகமான மனநிலையை என்னவென்று சொல்வது?

இது எமது தாய்நாட்டுக்கு உலக அரங்கில் வெறுமனே பொய்யாக திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டுவரும் ஒரு சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டு என நன்கு தெரிந்திருந்தும் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் அல்லது ஆட்சியாளரைப் பழிவாங்க வேண்டும் என்பதற்காக ஈனச்செயலில் ஈடுபட்டுவரும் எதிர்க்கட்சிகளை முதலில் இல்லாதொழிக்க வேண்டும். நாட்டுப்பற்று அறவே இல்லாத இவர்களை மக்கள் தமது வாக்குகள் மூலமாக அடுத்த தேர்தலில் வீட்டிற்கு அனுப்ப வேண்டும்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்காக குரல் கொடுப்பதில் தவறில்லை. ஆனால் புலிகளால் கொல்லப்பட்ட உங்கள் தலைவர்களையும் பொதுமக்களையும் பற்றிச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். புலிகளின் கொலைப் பட்டியலில் இன்று குரல் எழுப்பும் உங்களில் பலரது பெயர்களும் இருந்ததை மறந்துவிடக் கூடாது. அதனால்தானே புலிகள் இருந்தபோது உங்களது வாகனத்திற்கு முன்னாலும், பின்னாலும் பொலிஸாரும், படையினரும் பாதுகாப்புத் தந்தனர். உங்களது வீடுகள் முன்பாக பாதுகாப்பரண்கள் அமைத்து இரவு, பகலாக புலிகளிடமிருந்து பாதுகாத்து வந்தனர்.

இன்று அமெரிக்காவிற்கும், பிரித்தானியாவிற்கும், ஜெனீ வாவிற்கும் உங்களால் சென்று பேச, குரல் எழுப்ப இந்த அரசு புலிகளை அழித்தமையாலேயே முடிகிறது என்பதை நீங்கள் மறந்து செயற்படுகிaர்கள். இலங்கையில் விவேகமற்ற எதிர்க் கட்சிகள் சிலவற்றுடன் இணைந்து உள்நாட்டுக் குழப்பத்தை மீண் டும் ஏற்படுத்த முயலும் தீய நோக்குக் கொண்ட சில சர்வதேச சக்திகளுக்கு நீங்கள் உங்களை அறியாமலேயே மறைமுகமாக உதவி செய்கிaர்கள் என்பதை உங்களுக்கு ஞாபகமூட்டுகிறோம்.

முப்பது வருடங்களுக்கும் மேலாக தமிழ்ச் சமூகம் இந்நாட்டில் பட்ட துன்பங்கள், சந்தித்த இழப்புகள் அனுபவித்த கொடுமைகளுக்கு இப்போதுதான் விடிவு பிறந்துள்ளது. நல்லது செய்வதாக நினைத்து அதனைக் கெடுத்து தமிழ் மக்களை மீண்டும் இருண்ட யுகத்திற்குள் தள்ளிவிடக் கூடாது என்பதே எமது வேண்டுகோளாக உள்ளது. தாய்நாட்டிற்கு வேண்டுமென்றே சோடிக்கப்பட்ட ஒரு அவப்பெயர் வருகிறது என்றதும் தனது தாய்க்கு ஏற்படும் அவப்பெயராகக் கருதி, தமது எதிர்ப்புக்களை காட்டி நிற்கும் உண்மையான இலங்கையருக்கு எமது நன்றிகள்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.