புத் 64 இல. 09

கர வருடம் மாசி மாதம் 14ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 04

SUNDAY FEBRUARY 26,  2012

ஆப்கானிஸ்தானில் கடும்போக்காளர்கள் ஆர்ப்பாட்டம்

ஆப்கானிஸ்தானில் கடும்போக்காளர்கள் ஆர்ப்பாட்டம்
 

ஏ.ஜி.எம். தெளபீக்

ஆப்கானிஸ்தானில் ஆர்ப்பாட்டங்கள் மோதல்கள் கல்லடிகள் எனக்கலவரங்கள் இந்த வாரம் களைகட்டின. தலைநகர் காபூலுக்கு வடக்கேயுள்ள பக்ராம் நேட்டோ படை முகாமில் முஸ்லிம்களின் புனித வேத நூலான குர்ஆன் மற்றும் சமய நூல்கள் ஆவணங்கள் குப்பையில் போட்டு எரிக்கப்பட்டதால் ஏற்பட்ட விளைவுகளே இவை. இந்த முகாமிலுள்ள களஞ்சியசாலைகள் வாசிகசாலையை துப்புரவு செய்த போது படையினர் நான்கு குர்ஆன் பிரதிகளையும் இன்னும் சமய நூல்களையும் குப்பையிலே எறிந்து தீயிட்டனர் என்பதே விடயம். ஆனால் இவை வேண்டுமென்று செய்யப்பட்டதா இல்லை தெரியாமல் நடந்ததா என்பதை கண்டறிய விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளதுடன் மேல் மட்ட குழுக்களும் நியமிக்கப்பட்டுள்ளன. கிறிஸ்தவர்களைப் பெரும்பான்மையாகவும் மேலைத்தேய நாகரிகங்களை அடிப்படையாகவும் கொண்ட அமைப்பே நேட்டோ. இப்படை வீரர்களுக்கு குர்ஆனைப் பற்றியோ அரபு எழுத்தணிகள் குறித்தோ அல்லது ஆப்கானிஸ்தான் மொழியில் (உர்து) எழுதப்பட்ட சமய நூல்களின் விளக்கங்களோ தெரியாதிருக்கலாம் இதனால் குர்ஆன் பிரதிகள், சமய நூல்கள் என்பன குப்பைத் தொட்டியில் எறியப்பட்டுள்ளன என்கிறார் ஆப்கானிஸ்தானிலுள்ள அமெரிக்க இராணுவத் தலைவர் ஜோன் அலியான்.

நிலைமைகளின் பாரதூரமான விளைவுகளைப்புரிந்து கொண்ட நேட்டோ தலைமை இனிமேல் அவ்வாறு நடைபெறாமல் கவனமாயிருப்போம் மார்ச் மாதத்துக்குள் இஸ்லாமியரின் புனித நூல், மற்றும் சமய நூல்கள் குறித்து நேட்டோ வீரர்களுக்குப் பயிற்சியளிப்போம் அவற்றை எவ்வாறு கையாள்வது என்ற விளக்கங்களை விரைவில் வழங்குவோம் என்கின்றது. முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகவும் அடிப்படைவாதம் முற்போக்குவாதம் மிதவாதம் போன்ற பல கொள்கைகலுள்ள மக்களையும் கொண்டதே ஆப்கானிஸ்தான்.

ஏற்கனவே நேட்டோ விமானங்களின் குண்டு வீச்சு பொதுமக்களைப் பலி கொள் கின்றமை, வகை தொகையின்றிய கைது, கட்டுப்பாடு பாகிஸ்தானில் வஸிரிஸ்தான் மாகாணத்திலும் ஆப்கானிஸ்தானில் ஹெல்மண்ட் மாகாணத்திலும் வீசப்படும் இலக்குத்த வறிய குண்டு வீச்சுகள், ஏவப்படும் எறிகணைகள், குறிவைக்கப்படும் முக்கியஸ்தர்கள் என்பவற்றால் நேட்டோ படையினர் மீது கடும் வெறுப்பாயுள்ளனர் ஆப்கானியர். இந்தக் கால கட்டத்திலா இது நடக்க வேண்டும். மொத்தம் நான்கு புனித குர்ஆன்கள் உட்பட 70 சமய நூல்கள் குப்பையில் எரிக்கப்பட்டுள்ளன. இவற்றைக் கண்ணுற்ற முகாமுக்குள் பனியாற்றிய முஸ்லிம் ஊழியர்கள் குர்ஆனையும் ஏனைய நூல்களையும் காப்பாற்றும் முயற்சியில் தங்கள் கைகள், விரல்களையும் நெருப்புக்கு இரையாக்கி விட்டனர்.

இவ்வளவு உறுதியாக இஸ்லாத்தைப் பின்பற்றும் மக்கள் வாழும் ஆப்கானிஸ்தானில் நேட்டோ படைகள் எவ்வளவு அவதானமாக நடந்து கொள்ள வேண்டுமென்பதே பலரது கேள்வி. 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலும்இது போன்ற குர்ஆன் பிரதிகள் எரிக்கப்பட்ட சம்பவத்தால் ஆப்கானிஸ்தான் எங்கும் ஆர்ப்பாட்டங்கள் அலை மோதின. காபுலிலுள்ள நேட்டோ தலைமையகத்துக்குள்ளே தற்கொலைக் குண்டு வெடித்துச் சிதறியது. இதில் மூன்று நேபாள வீரர்களும், தலைமையகத்தில் பணியாற்றிய 04 உள்ளூர் வீரர்களும் பலியாகினர். நேட்டோ வீரர்களின் கடந்த கால செயற்பாடுகளை கவனிக்கின்ற ஆப்கானியர்கள் என்ன வகையிலும் நேட்டோ படையினரை நம்பத்தயாரில்லை.

அண்மையில் மோதலில் பலியான தலிபான்களின் சடலங்கள் மீது நேட்டோ வீரர்கள் சிறு நீர் கழிக்கும் வீடியோ ஒளி நாடாக்களும் வெளியாகி அனைவரையும் திகிலடைய வைத்தது. அப்பிள் பழங்களைச் சுவைப்பதைப் போல் ஆப்கானிஸ்தான் பெண்களைச் சுவைக்கின்றோம். இதைவிட மகிழ்ச்சியான நாள் இல்லை என்பதெல்லாம் சில வீரர்களின் கருத்து இன்னும் தீவிர வாதத்தைப் போதிக்கும் வசனங்கள் குர்ஆனிலுள்ளன என்பதும் மேலைத்தேய வாடையில் வளர்ந்த சிலரின் அபிப்பிராயம். இப்பின்னணியில் நோக்கும் போது தலிபான்களைப் பழிவாங்குவதைப் போல் முழு முஸ்லிம்களையும் நேட்டோ வீரர்கள் கொச்சைப்படுத்துகின்றனரோ தெரியாது. பக்ராம் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் (தலிபான்கள்) குர்ஆன் வசனங்களைப் படித்தால் மீண்டும், மீண்டும் தீவிரவாத போக்கில் இணைவர். இதனால்தான் முகாமிலிருந்த சமய நூல்கள் எரிக்கப்பட்டன என்பதும் நேட்டோ வீரர்களிடமிருந்து இதுவரைக்கும் வெளியே வராத கருத்துகள். இப்போது ஆப்கானிலுள்ள அமெரிக்க தூதரகம் மூடப்பட்டு விட்டது.

நேட்டோ உயரதிகாரிகள் வெளிநாட்டு முக்கியஸ்தர்களின் வாசல் தலங்களில் கடுமையான பாதுகாப்புப் போடப்பட்டுள்ளன. ஆப்கான் இராணுவ உயரதிகாரிகள் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தைகளையும் நடத்தியுள்ளனர். சுமார் மூவாயிரம் பேர் வரை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதாக தகவல்கள் கூறுகின்றன.

கட்டுக்கடங்காமல் போன சனக் கூட்டம் ஆப்கான் அரச சொத்துக்கள், வீதியால் சென்ற வாகனங்கள், இராணுவ முகாம்கள் அனைத்தையும் அடித்து உதைத்து ரகளை செய்தது. ஆப்கானிலுள்ள நேட்டோ தலைமையகத்தில் செவ்வாய்க்கிழமை தற்கொலைக் குண்டுத் தாக்குதலும் வெடித்துச் சிதறியது. இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட ஆப்கானிஸ்தானியர்கள் காபூல் ஜலாலாபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களிலுள்ள நேட்டோ முகாம்களை தீ வைத்தும் பொல், கற்களால் எறிந்தும் சேதப்படுத்தினர். பதிலுக்குத் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் ஒருவர் காயமடைந்தார். இதையடுத்து செய்தி சேகரிப்புக்காகச் சென்ற ஏ. எப். பி. செய்தியாளர் ஆர்ப்பாட்டக்காரர்களால் தாக்கப்பட்டார். நிலைமையின் விபரிதங்களையுணர்ந்து கொண்ட ஆப்கான் அரசு நேட்டோப் படைகளை முகாம்களுக்குள் முடக்கி ஆப்கான் வீரர்களைக்கொண்டு நிலைமைகளைக் கட்டுப்படுத்தியது.

வெள்ளிக்கிழமையன்று ஜும்ஆத் தொழுகை முடிவடைந்ததும் ஆர்ப்பாட்டங்கள் உக்கிரமடைந்தன. 14 பேருக்கு மேல் பலியாகி இன்னும் பலர் காயமடைந்ததுடன் ஆப்கானிஸ்தான் முழுவதும் கலகம் வெடிக்கும் அபாயம் நிலவியது. பராக் ஒபாமா நடந்தவற்றுக்கு மன்னிப்புக் கோரியுள்ள போதும் ஆப்கான் ஜனாதிபதியிடம் எழுத்து மூலம் உத்தியோகபூர்வமாக மன்னிப்புக் கோர வேண்டுமெனக் கோரப்பட்டுள்ளது. கடும் போக்காளர்களான தலிபான்கள் அமெரிக்க நலன்கள் மீது தாக்குதல்களை தீவிரப்படுத்துமாறு மதத்தின் பேரால் மக்களை கேட்டுள்ளதால் என்ன நடக்கப் போகுதோ என்ற பீதியில் மேற்குலகுள்ளது.

இவ்வாறான செயற்பாடுகளை மன்னிப்போம் மறப்போம் என்ற கோணத்தில் அமெரிக்காவும், ஆப்கானிஸ்தானும் உறவுகளை அடிக்கடி மேலும் மேலும் புதுப்பித்துக் கொண்டாலும் ஆப்கான் பாகிஸ்தான் மக்களது மன நிலையும் நேட்டோ வீரர்களின் உளப்பாங்கும் மோதல் நிலையிலேயுள்ளன. ஆப்கானிஸ்தானில் 1996 ம் ஆண்டு முதல் 2001 ம் ஆண்டு வரையிருந்த தலிபான்களின் ஆட்சி எவ்வளவு மேலானது இஸ்லாமிய உயிரோட்டத்துக்கு தலிபான்களின் நிர்வாகம் எவ்வளவு ஆதரவானது என்பதையும் இங்குள்ள மக்கள் சிந்திக்கத் தொடங்கியுள்ளனர். நேட்டோ படையினரின் பத்தாண்டு கால இராணுவ நடவடிக்கைகளில் அண்மைக்கால செயற்பாடுகள் அந்நாட்டு மக்களை ஆத்திரமூட்டுவனவாயுள்ளன. இதனால் தான் 2014 ஆம் ஆண்டுக்குள் ஆப்கானிஸ்தானிலுள்ள நேட்டோ படைகளை வாபஸ்பெற தீர்மானிக்கப்பட்டதோ.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.