புத் 64 இல. 09

கர வருடம் மாசி மாதம் 14ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 04

SUNDAY FEBRUARY 26,  2012

 

இந்திய வம்சாவளியினர் எதிர்கொள்ளும் சவால்கள்

இந்திய வம்சாவளியினர் எதிர்கொள்ளும் சவால்கள்
 

(12-02-2012 அன்றைய தொடர்ச்சி)

லயன் வீடு காணிப் பிரச்சினைகள்

இன்று வரையிலும் மாற்றம் காணாத லயன் முறைகள் மக்கள் வாழ்வுடன் விலக மறுக்கின்றது. மலையகம் பல மாற்றங்களை அடைந்து வருகின்ற போதிலும் லயன் முறைகளில் மட்டும் எதுவித மாற்றமும் ஏற்படவில்லை. மலையக மக்களின் வீடமைப்பு முறையினை நாம் எடுத்து நோக்கினால் 1924, 1930 களில் கட்டப்பட்ட ‘லயன்’ வீடுகளிலேயே வாழ்ந்து வருகின்றனர். பெரும்பாலான தோட்டங்களில் லயன் அறைகளில் எவ்வித திருத்த வேலைப்பாடுகளும் செய்யப்படாமல் மழைக் காலத்தில் கூறைகளில் தண்ணீர் வீட்டினுள் வருமளவிற்கு காணப்படுவதுடன் அறைகள் சிறியதாகவும் மலசல கூட வசதியற்றதாகவும் போக்குவரத்து வசதியற்றதாகவும் சுத்தமான நீரைப் பெற்றுக்கொள்ள முடியாமலும் காணப்படுகின்றனர். இத்தகைய அடிப்படை வசதிகளற்ற நிலையில் காணப்படும் இந்த லயன் வீடுகள் கூட அவர்களுக்கு சொந்தமானதில்லை.

வீட்டு வசதி இன்மையால் எட்டு, ஒன்பது பேர் ஒரு கொட்டிலில் அடைக்கப்பட்ட அடிமைகள் போல் வாழ்கின்றனர். இதனால் தமது அந்தரங்கங்களைப் பேணுவதில் மிகவும் சிரமத்தினை எதிர்நோக்குகின்றனர்.

தேசிய ரீதியில் சராசரியாகத் தனியொருவனுக்கு சுமார் 100 சதுர அடி வாழ்விட வசதி காணப்படுகிறது. ஆனால் தோட்டப்புறங்களில் வாழ்வோருக்கு 46 சதுர அடி வாழ்விட வசதியே காணப்படுகின்றமையானது இவர்களின் இன்னல்மிக்க வாழ்வினை எடுத்துக்காட்டுவதாக அமைக்கின்றது. அதிக எண்ணிக்கை கொண்ட குடும்ப உறுப்பினர்கள் இவ் சிறிய அறையில் வசிக்கும் நிலையுள்ளது. அத்தோடு ஒவ்வொரு அறைக்குமான இடைவெளி குடும்பங்களுக்குமான இடைவெளி சிறிதும் இல்லாததினால் நோய் பரவுகையை தடுத்தல் நோயாளர்களை பாதுகாத்தல் சுகாதார முறைகளை கையாளுதல் என்பன இயலாதுள்ளது. வீடு போதியளவு வசதியின்மை அவர்களின் கல்வி நிலையிலும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது.

சுகாதாரப் பிரச்சினைகள்

அரசாங்கமும் தமது சுகாதார சேவைகளின் மூலம் வைத்தியசாலைகளுக்கு பல உதவிகளை செய்கின்றது. இந்த சேவைகளானது இலங்கையின் எல்லா வைத்தியசாலைகளுக்கும் சமமான அளவில் பகிரப்படுகின்றனவா? என்பதே கேள்வியாக உள்ளது.

இலங்கையின் பெருந்தோட்டத்துறையில் உள்ள வைத்தியசாலை கள் இவ்வாறான வளப்பங்கீட்டின் போது புறக்கணிக்கப்படுகின்றன.

அதாவது அரசாங்கத் தின் வைத்திய சுகாதார வளங்கள் மாவட்ட வைத்தியசாலைக்கு கிடைக்கப்பெறுகின்றன.

ஆனால் மாவட்ட வைத்தியசாலைக்கு கீழ் இயங்கும் பெருந்தோட்ட வைத்தியசாலைகளுக்கு வளங்கள் கிடைக்க பெறுவதில்லை. இதனால் பெருந்தோட்ட மக்கள் தமது வைத்திய சுகாதார சேவைகளை பெற முடியாது உள்ளனர்.

அடிப்படை ஆவணங்கள் பெற்றுக்கொள்ளாமையால் எதிர்கொள்ளும் சவால்கள்

பெருந்தொகையான மக்கள் வாக்காளர் அட்டைகள், பிறப்பு சான்றிதழ்கள், இறப்பு சான்றிதழ்கள் அற்றவர்களாகவும் வாக்காளர் அட்டையில் பதியப்படாதவர்களாகவும், தமது தேசியத்தை நிரூபித்துக்கொள்ள முடியாதவர்களாகவும் இருக்கின்றனர். ஆனால் தேசிய அபிவிருத்திக்காக தமது உழைப்பை மட்டும் வழங்கி வருகின்றனர்.

அடிப்படை ஆவணங்கள் பெற்றுக்கொள்ள முடியாமையால் பல இளைஞர்கள் கைது செய்து தடுத்து வைக்கப்பட்ட சம்பவங்களும் மலையகப் பகுதியில் நடந்திருக்கிறது.

இலங்கையில் இந்திய வம்சாவளியினர் அரச தொழில் வாய்ப்புகளில் இணைத்துக் கொள்ளப்படுவது குறைவாகவிருத்தல்

இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் இலங்கை மொத்த சனத்தொகையில் 5.4 வீதமாவர். ஆனால் அரச தகவல் ஒன்றியத்தின் அறிக்கையின்படி இவர்களில் 0.1% மட்டுமே அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

மாகாண அரச சேவைகளில் 0.2% ஈடுபட்டுள்ளனர்.

பெருந்தோட்ட தொழில் வாய்ப்புகள் கூட வெளியாருக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. உதாரணமாக பிள்ளை பராமரிப்பு நிலையங்களில் கூட 80% வீதமானவர்களுக்கு சமூக நல உத்தியோகத்தர்கள் கூடு ஏனைய சமூகத்தவர்களாகவே இருக்கின்றனர்.

மலையக பட்டதாரிகளுக்கு வேலையில்லாப் பிரச்சினைகள்

2011 ஆம் ஆண்டின் இறுதிக் காலப்பகுதியில் மேற்கொண்ட தரவு சேகரிப்பின் அடிப்படையில் 245 க்கு மேற்பட்ட மலையக பட்டதாரிகள் (நுவரெலியா, கண்டி, மாத்தளை, பதுளை, இரத்தினபுரி, கேகாலை) ஆகிய மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தி தொழில் வாய்ப்பின்றி முடக்கப்பட்டுள்ளனர். கடந்த 10 வருட காலமாக மலையகத்தில் பட்டதாரிகளுக்கான எந்தவிதமான வேலை வாய்ப்பையும் ஏற்படுத்தியிருக்காத நிலையே காணப்படுகின்றது. மேலும் மலையகத்தவர் இலங்கை அரச தொழில் வாய்ப்புகளில் உள்வாங்கப்படும் வீதம் மிகவும் குறைவானதாகும். (தொடரும்)

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.