ஹிஜ்ரி வருடம் 1436 ரபீஉல் ஆகிர் பிறை 24
ஜய வருடம் மாசி மாதம் 02ம் நாள் சனிக்கிழமை

SATURDAY, FEBRUARY 14 2015
வரு. 83  இல. 39
 
இலங்கையின் சர்வதேச நலன்களுக்கு அமெரிக்காவின் உறவு சிறந்த வாய்ப்பு

இலங்கையின் சர்வதேச நலன்களுக்கு அமெரிக்காவின் உறவு சிறந்த வாய்ப்பு

ஐ. நா. மனித உரிமை அறிக்கை பிற்போடப்படும்

இலங்கைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அறிக்கை வெளியிடுவது பிற்போடப்படும் என நம்புவதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரியைச் சந்தித்த பின்னர் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இலங்கைக்கு எதிரான ஐ. நா மனித உரிமைகள் பேரவையின் அறிக்கையை செப்டெம்பர் அல்லது அதற்குப் பின்னர் வெளியிட வேண்டும். இதற்கு அமெரிக்கா, பிரித்தானியா, பொதுநலவாய நாடுகள் எதிர்வரும் மாதங்களில் தமக்கு ஒத்துழைப்பு வழங்கும் என எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா இலங்கைக்கு அச்சுறுத்தல் அல்ல, அமெரிக்காவு டனான உறவு இலங்கைக்கு சிறந்ததொரு வாய்ப்பு என்றும் மங்கள சமரவீர கூறியுள்ளார். இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவுகள் கடந்த சில வருடங்களாக விரிசல் கண்டுள்ளது. புதிய அரசாங்கம் இந்த நிலைமையை மாற்றி மீண்டும் இரு நாடுகளுக்குமிடையில் நல்லுறவை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் அமைச்சர் குறிப் பிட்டார்.

இந்தச் சந்திப்பில் புதிய அரசாங்கத்தின் நூறுநாள் வேலைத் திட்டம் மற்றும் அரசாங்கம் முன்னெடுத்திருக்கும் நல்லிணக்கசெயற்பாடுகள் உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் அமைச்சர் மங்கள சமரவீர ஜோன் கெரிக்கு விளக்க மளித்திருந்தார்.

மனித உரிமைகளை உறுதிப்படுத்தி ஊழல், மோசடிகள் இல்லாத சூழ்நிலையை உருவாக்குவதற்காக மக்கள் புதிய அரசாங்கத்தை தேர்ந்தெடுத்துள்ளனர். இந்த அரசாங்கத்தின் நூறுநாள் திட்டம் எவ்வாறு நிறைவேற்றப்படப்போகின்றது என்பதை அமெரிக்கா ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாக அந்நாட்டின் இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி தெரிவித்துள்ளார்.

புதிய அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுவதற்கு அமெரிக்கா எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக இலங்கைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அறிக்கை வெளியிடுவது ஒத்திவைக்கப்பட வேண்டும் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அமெரிக்காவில் கோரிக்கை விடுத்திருந்தார்.

உள்நாட்டு பொறிமுறையொன்றின் மூலம் இந்த விடயம் குறித்து விசாரணை நடத்துவதற்கு புதிய அரசாங்கத்திற்கு கால அவகாசம் தேவை என்பதால் அறிக்கை வெளியிடப்படுவது பிற் போடப்படவேண்டும் என அவர் கூறி யிருந்தார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி