ஹிஜ்ரி வருடம் 1436 ரபீஉல் ஆகிர் பிறை 24
ஜய வருடம் மாசி மாதம் 02ம் நாள் சனிக்கிழமை

SATURDAY, FEBRUARY 14 2015
வரு. 83  இல. 39
 
பொறுப்புக் கூறக் கூடியதாகவும் சர்வதேச தரம் வாய்ந்ததாக இருக்க வேண்டும்

மனித உரிமைகள் விசாரணை பொறிமுறைகள்

பொறுப்புக் கூறக் கூடியதாகவும் சர்வதேச தரம் வாய்ந்ததாக இருக்க வேண்டும்

மனித உரிமை மீறல் விசாரணைகள் தொடர்பான பொறிமுறைகள் பொறுப்புக் கூறக்கூடியதாகவும், சர்வதேச தரம்வாய்ந்ததாகவும் அமையவேண்டும் என ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான்கீ மூன் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான விசாரணைகள் குறித்த ஐ.நா செயலாளர் நாயகத்தின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லையென்றும், புதிய அரசாங்கம் உள்ளூர் பொறிமுறையொன்றில் விசாரணையை முன்னெடுக்கும் எனக் கூறியிருப்பது குறித்து பான்கீ மூன் அறிந்திருப்பதாகவும், ஐ.நா. செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமை நியூயோர்க்கில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த போதே ஐ.நா செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் இவ்வாறு கூறியுள்ளார்.

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி பாலித கொஹன ஐ.நா.செயலாளர் நாயகத்தைச் சந்தித்துள்ளார். இந்தச் சந்திப்பு பிரியாவிடைக்கான சந்திப்பு என்றும் பான்கீ மூனின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

யுத்தத்துக்குப் பின்னரான இலங்கையின் செயற்பாடுகள் பொறுப் புக்கூறக்கூடியதாகவும், சர்வதேச தரத் துக்கு அமைவானதாகவும் அமைய வேண்டும் என்பதே ஐ.நா செயலாளர் நாயகத்தின் எதிர்பார்ப்பாகும். இது இலங்கையில் ஜனநாயகத்தையும், சமாதானத்தையும் நீடித்து நிலைக்கச் செய்வதற்கு அடிப்படையாக அமையும் என்றும் நம்புவதாகவும் ஐ.நா.செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் மேலும் தெரி வித்துள்ளார்.

இதேவேளை, அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, ஐ.நா. செயலாளர் நாயகம் பான்கீமூனைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதுடன், பான்கீ மூனை இலங்கைக்கு வருமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி