ஹிஜ்ரி வருடம் 1436 ரபீஉல் ஆகிர் பிறை 24
ஜய வருடம் மாசி மாதம் 02ம் நாள் சனிக்கிழமை

SATURDAY, FEBRUARY 14 2015
வரு. 83  இல. 39
 
ஜனாதிபதி நாளை இந்தியா பயணம்

புதிய அத்தியாயம் ஆரம்பம்

ஜனாதிபதி நாளை இந்தியா பயணம்

‘ஜனாதிபதியையும் தூதுக்குழுவையும் வரவேற்க இந்திய அரசும் மக்களும் பெரு மகிழ்ச்சியுடனேயே உள்ளனர்’

பிரதமர் மோடி தெரிவிப்பு லோரன்ஸ் செல்வநாயகம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பினை ஏற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை 15 ஆம் திகதி இந்தியாவுக்கான மூன்று நாள் விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளார்.

ஜனாதிபதியாகப் பதவியேற்று இவர் மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.

இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொள்ளும் இலங்கை ஜனாதிபதியையும் தூதுக் குழுவினரையும் வரவேற்பதற்கு இந்திய அரசாங்கமும் மக்களும் பெரும் மகிழ்ச்சியுடன் காத்திருப்பதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளார். இலங்கையின் புதிய ஜனாதிபதிக்கு மகத்தான வரவேற்பளிப்ப தற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ள இந்தியப் பிரதமர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்திய விஜயம் இலங்கை - இந்திய நல்லுறவில் புதிய அத்தியாயத்தைத் தோற்றுவிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்றைய தினம் காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கலந்துரையாடிய போதே இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது, இம்முறை உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்கேற் கும் இலங்கை அணியினருக்கு இந்தியப் பிரதமர் தமது வாழ்த்துக்களைத் தெரி வித்துள்ளார். 1996ல் இலங்கை கிரிக்கெட் அணி உலகக் கிண்ணத்தை வெற்றி கொண் டதை நினைவுகூர்ந்து தமது வாழ்த்துக்க ளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

அதேவேளை, உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணிக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமது வாழ்த்துக்களை இதன்போது தெரிவித்தார்.

இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளும் இலங்கை ஜனாதிபதி இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, இந்திய அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் உயர்மட்ட முக்கியஸ்தர்களையும் சந்திக்கவுள்ளார்.

அத்தோடு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து இரு தரப்பு பேச்சுவார்த்தைகளையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொள்வார்.

தமது விஜயத்தின் போது புகழ்பெற்ற பெளத்த வழிபாட்டுத் தலமான புத்த காயாவைத் தரிசிக்கும் ஜனாதிபதி அதனையடுத்து திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரர் தேவஸ்தானத்துக்கும் சென்று வழிபாடுகளில் கலந்து கொள்ளவுள்ளார். (ஸ)

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி