ஹிஜ்ரி வருடம் 1435 ஷவ்வால் பிறை 29
ஜய வருடம் ஆவணி மாதம் 10ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, AUGUST ,26, 2014
வரு. 82  இல. 202
 
கைப்பணிப் பொருட்களை உலகளவில் சந்தைப்படுத்த ~~சில்ப உதானய 2014'' கண்காட்சி

கைப்பணிப் பொருட்களை உலகளவில் சந்தைப்படுத்த ~~சில்ப உதானய 2014'' கண்காட்சி

ஓகஸ்ட் 28 முதல் 31 வரை கொழும்பில்

நாட்டின் கைவினை கைப்பணி துறையை மேம்படுத்தும் நோக்கிலும் கைப்பணியாளர்களுக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சிறந்த சந்தை வாய்ப்பினை பெற்றுக் கொடுக்கும் பொருட்டும் ‘சில்ப உதானய 2014’ கண்காட்சியும் விற்பனைச் சந்தையும் எதிர்வரும் 28ஆம் திகதி கொழும்பில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளது.

ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா கண்காட்சி நிலையத்தில் எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை காலை 10 மணி முதல் இரவு 8 மணிவரையில் மேற்படி கண்காட்சியும் விற்பனைச் சந்தையும் பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்படும்.

தேசிய அருங்கலைகள் பேரவை மற்றும் தேசிய வடிவமைப்புச் சபை ஆகியவற்றுடன் இணைந்து ‘சில்ப உதானய 2014’ என்னும் கண்காட்சிக்கான ஏற்பாடுகளை பாரம்பரிய கைத் தொழில்கள் மற்றும் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தியமைச்சு மேற் கொண்டு வருகின்றது.

இது தொடர்பில் விளக்கமளிக்கும் விசேட செய்தியாளர் மாநாடு பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறு தொழில் முயற்சி அபிவி ருத்தியமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நேற்று தகவல் ஊடகத்துறை யமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதன்போது அமைச்சர் கருத்து தெரிவிக்கையில் கடந்த 27 வருடங்களாக நடத்தப்பட்டு வரும் ‘சில்ப உதானய’ கண்காட்சியும் விற்பனைச் சந்தையும் இம்முறை வெகு சிறப்பாக நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கைப்பணியாளர்களை ஊக்குவிக்கும் அதேநேரம் அவர்களுக்கான சந்தை வாய்பினை பெற்றுக் கொடுப்பதே இதனை நடத்துவதன் பிரதான நோக்கம்.

அமைச்சின் செயலாளர் வி.சிவஞானசோதி இது குறித்து விளக்கமளிக்கையில் ‘சில்ப உதானய 2014’ கண்காட்சி மற்றும் விற்பனைச் சந்தையை 28 ஆம் திகதி மாலை 3.30 மணிக்கு பொருளாதார அபிவிருத்தியமைச்சர் பசில் ராஜபக்ஷ அங்குரார்ப்பணம் செய்து வைப்பார்.

மாகாண மட்டத்தில் நடத்தப்பட்ட கண்காட்சிகளில் வெற்றி பெற்ற கைவினைப் பணியாளர்களின் உற்பத்திப் பொருட்களைக் கொண்டே தேசிய மட்ட நிகழ்வு நடத்தப்படுகிறது. இதில் 1824 கைவினை கைப் பணியாளர்கள் பங்குபற்றவுள்ளனர். இவர்களுள் சிறந்த உற்பத்திகளை காட்சிப்படுத்தும் 454 கைப்பணியார்கள் தேசிய ரீதியில் விருது வழங்கி கெளரவிக்கப்படுவரெனவும் கூறினார். செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட தேசிய அருங்கலைகள் பேரவையின் தலைவர் புத்தி கீர்த்திசேன கூறுகையில், இவ்வருடம் நடத்தப்படவுள்ள ‘சில்ப உதானய’ கண்காட்சி மற்றும் விற்பனைச் சந்தைக்கு சுமார் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்கள் மற்றும் கொள்வனவாளர்களை எதிர்பாக்கிறோம்.

2016ஆம் ஆண்டில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் மையமாக இலங்கையை உருவாக்க அரசாங்கம் சகல வழிகளிலும் முயற்சிகளை முன்னெடுத்து வரும் நேரத்தில் எமது நாட்டிற்கே தனித்துவமான கைப்பணிப் பொருட்களின் உற்பத்தியிலும் முன்னேற்றம் ஏற்பட வேண்டியது அவசியமெனவும் அவர் வலியுறுத்தினார்.

தேசிய வடிவமைப்புச் சபையின் தலைவர் மார்ஷல் ஜனந்தா கூறுகையில் எமது பாரம்பரிய கைத்தொழில் நவீன உலகிற்கு ஏற்ற வகையில் புது பரிமாணத்துடன் வெளிவரவிருப்பதனால் பொதுமக்கள் மற்றும் பாடசாலை சிறுவர்கள் இந்த அரிய சந்தர்ப்பத்தை தவறவிடக்கூடாதெனவும் கேட்டுக் கொண்டார்.

ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட ஊடக மேற்பார்வை எம்.பி. ஏ.எச்.எம். அஸ்வர் கைவினை கைப்பணியாளர் ‘பற்ரிக்’ உற்பத்தியினை மேலும் அபிவிருத்தி செய்ய அமைச்சர் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டுமெனவும் இச்சந்தர்ப்பத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கேட்டுக் கொண்டார். பாராளுமன்றத்தை சூழவுள்ள தியவன்னா ஓயாவருகில் முன்னர் காணப்பட்ட பற்ரிக் உற்பத்திகள் தற்போது குறைவடைந்து வருகின்றன. எனவே இவற்றை மீண்டும் ஆரம்பிக்க கைப்பணியாளர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும். இந்தோனேசியா, மலேசியா ஆகிய நாடுகளில் பற்ரிக் உற்பத்திக்கு சிறந்த கேள்வியுண்டு. அதே நிலைமையை நாம் இலங்கையிலும் உருவாக்க வேண்டுமெனவும் அஸ்வர் எம்.பி. கூறினார்.

குடிசைக் கைத்தொழில் என இந்த அமைச்சின் செயற்பாடுகளை சாதாரணமாக நினைத்துவிட முடியாது. இது ழுழு இலங்கையையும் உள்ளடக்கக்கூடிய நாட்டின் தனித்துவமான ஆக்கங்களை பிரதிபலிக்கும் ஒரு கலையாகும். சுற்றுலாப் பயணிகளை கவருவதுடன் அந்நிய செலாவணியையும் இதன் மூலம் பெற்றுக் கொள்ளமுடியும். வீட்டிலுள்ள பெண்கள் கூட வருமானத்தை ஈட்டக் கூடிய ஒரு துறையாகையினால் அரசாங்கம் இந்த அமைச்சின் செயற்பாடுகளுக்கு கூடுதல் ஒத்துழைப்பினை வழங்க வேண்டுமென நான் ஏற்கனவே பாராளுமன்றத்தில் கேட்டிருந்ததாகவும் அஸ்வர் எம்.பி. இதன்போது தெரிவித்தார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி