ஹிஜ்ரி வருடம் 1435 ஷவ்வால் பிறை 29
ஜய வருடம் ஆவணி மாதம் 10ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, AUGUST ,26, 2014
வரு. 82  இல. 202
 

முட்டை

னிஹீh ப்பில் ஏராளமான தென்னை மரங்கள் காணப்பட்டன. வேலியோரத்தில் உயரமாக வளர்ந்திருந்த தென்னை மரம் ஒன்றில் குருவி கூடு கட்டி வசித்து வந்தது.

வேலியோரப் பகுதியில் வசித்து வந்த ஓணான் அந்தத் தென்னை மரத்தின் மீது ஏறியது. மரத்தின் உச்சியில் இருந்து குருவிக் கூட்டை வந்தடைந்தது.

கூட்டில் முட்டையுடன் இருந்த குருவியானது ஓணானைக் கண்டதும் திடுக்கிட்டது.

குருவியே, நீ மரியாதையாகக் கூட்டை விட்டுப் பறந்து சென்று விடு. இல்லையென்றால் நீ இட்டு வைத்திருக்கும் முட்டைகளை உடைத்துக் குடிப்பதோடு மட்டுமல்லாமல், உன்னையும் சேர்த்துக் கடித்துக் குதறிவிடுவேன் என்றது ஓணான்.

அந்தக் கொடூரமான ஓணானைக் கண்டதும் குருவிக்குப் பயம் ஏற்பட்டது. அது மிகவும் பணிவோடு ஓணானை நோக்கியது.

“ஓணானே என்னை ஒன்றும் செய்து விடாதே! உன்னோடு சண்டையிட என்னால் முடியாது. நீ என் முட்டைகளைக் குடிப்பதையும் என்னால் தடுக்க முடியாது. அதனால் உன்னிடம் நான் ஒரு நிபந்தனையைக் கூறுகிறேன். அந்த நிபந்தனைக்கு நீ கட்டுப்படுவாய் என்றால் நான் மிகவும் மகிழ்ச்சியுடையவனாக இருப்பேன்” என்றது குருவி.

“குருவியே நீ என்ன நிபந்தனை கூறுகிறாய்? என்று கோபத்துடன் கேட்டது ஓணான்.

“ஓணானே, நீ என் கூட்டில் இருக்கும் முட்டைகளைத் தாராளமாகக் குடித்துச் செல்லலாம். ஆனால், ஒரு நாளைக்கு ஒரு முட்டையைத்தான் குடிக்க வேண்டும். இதுதான் நான் உனக்கு இடுகிற நிபந்தனை” என்றது குருவி.

ஓணான் சிறிது நேரம் யோசனை செய்தது.

“இந்தக் குருவி நம்மை தினமும் ஒரு முட்டையைக் குடிக்கச் சொல்கிறதே சரி நமக்குக் கிடைத்த வரைக்கும் இலாபம்தான். நாம் அது கூறியபடி தினமும் ஒரு முட்டையைக் குடிப்போம்” என்று மனதுள் முடிவெடுத்துக் கொண்டது.

“குருவியே உண்னுடைய நிபந்தனையை நான் ஏற்றுக்கொள்கிறேன். தினமும் கூட்டில் இருந்து ஒரு முட்டையினை நான் குடித்துக் கொள்கிறேன். ஆனால், நீயோ வேறு நிபந்தனையை என்னிடம் கேட்கக் கூடாது” என்றது ஓணான்.

“ஓணானே, நான் உன்னிடம் ஒரு தடவை மட்டும்தான் நிபந்தனையிடுவேன். மற்றப்படி உன்னிடம் நான் அடிக்கடி நிபந்தனையைப் போட்டுக் கொண்டிருக்க மாட்டேன்” என்றது குருவி.

அதனைக் கேட்ட ஓணான் மகிழ்ச்சியோடு குருவிக் கூட்டிலிருந்து ஒரு முட்டையைக் குடித்துவிட்டுச் சென்றது.

குருவியோ அந்தக் காட்சியைப் பார்த்தபடி கவலையுடன் இருந்தது. அன்று முதல் ஓணான் தினமும் தென்னை மரத்திற்கு தவறாமல் வந்துவிடும்.

குருவிக் கூட்டில் இருந்து ஒரு முட்டையைக் குடித்துவிட்டுச் சென்று கொண்டிருந்தது. “நம் முட்டையினை நாள்தோறும் ஓணானிடம் இழந்து வருகிறோமே” என்று கவலை அடைந்தது குருவி.

ஒருநாள் தோப்புக்காரர் அந்த தென்னந் தோப்பில் தேங்காயைப் பறிக்க ஏற்பாடு செய்தார். தேங்காய் வெட்டுக்காரர் ஒருவர் வேகமாகக் குருவி கூடு கட்டி வசித்து வந்த தென்னை மரத்தில் ஏறினார்.

கூட்டில் இருந்த குருவியோ அதனைக் கண்டு பயத்தால் நடுங்கியது.

“ஓணானால்தான் நமக்குத் தினமும் ஆபத்து வந்து கொண்டிருந்தது. இப்போது இந்தத் தேங்காய் வெட்டுக்காரரால் ஒரேயடியாக நமக்கு ஆபத்து வரப்போகிறதே! நாம் என்ன செய்வது?” என்று கவலையடைந்தது குருவி.

தேங்காய் வெட்டுக்காரரும் தென்னை மரத்தின் உச்சியை அடைந்துவிட்டார். குருவிக்கூட்டை ஏறிட்டுப்பார்த்தார். கூட்டின் உள்ளே குருவி கவலையுடன் இருப்பதைப் பார்த்ததும் அதன் மீது இரக்கம் கொண்டார்.

“குருவியே நீ எதனால் இப்படி இருக்கிறாய்? உனக்கு என்ன நேர்ந்தது?” என்று அன்போடு கேட்டார் வெட்டுக்காரர்.

“ஐயா உங்களால் எனக்கு ஆபத்து வரப் போகிறது என்று பயந்து கொண்டிருந்தேன். ஆனால் நீங்களோ என் மீது அன்பு காட்டுகிaர்கள்” என்றது குருவி.

“குருவியே. என்னால் உனக்கு எப்போதுமே ஆபத்து ஏற்படாது. அதனால் நீ ஒரு போதும் என்னைக் கண்டு பயப்பட வேண்டாம்” என்றார் தேங்காய் வெட்டுக்காரர்.

தனக்கும் ஓணானுக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பில் குருவி அவருக்கு விளக்கமளித்தது. அவர் சிறிது நேரம் யோசனை செய்தார். பின்னர் குருவியைப் பார்த்தார்.

“குருவியே, நீ கவலைப்படாதே இன்று நாம் இருவரும் அந்த ஓணானை ஒரு வழியாக்கி விடலாம்” என்றார்.

“குருவியே, நான் ஒரு முட்டையைத் தயாரித்துத் தருகிறேன். நீ உன் கூட்டில் இருக்கிற மற்ற முட்டைகளை மறைத்துவிட்டு நான் தருகிற முட்டையை மட்டும் கூட்டில் வைக்க வேண்டும். ஓணான் வந்து அந்த முட்டையை எடுத்துச் சாப்பிடும். அப்போது ஓணான் படுகிற அவஸ்தையை நீ பார்க்கப் போகிறாய்” என்றார் அவர்.

அதனைக் கேட்ட குருவியும் மகிழ்ச்சியோடு கூட்டில் இருந்த தனது முட்டைகளை எல்லாம் மறைத்து வைத்துக் கொண்டது. உடனே தேங்காய்

வெட்டுக்காரர் தன்னுடைய வெற்றிலைப் பையில் இருந்து சுண்ணாம்பைக் கெட்டியாக எடுத்தார். அதனை முட்டை வடிவில் நன்றாக உருட்டி எடுத்து குருவியின் கூட்டின் உள்ளே வைத்துவிட்டார்.

பின்னர் வேகமாக மரத்தை விட்டு கீழே இறங்கிக் கொண்டார். வேலியோரமாக மறைவில் நின்று கொண்டார். சிறிது நேரத்தில் ஓணான் வேகமாக வந்தது.

“இன்று ஆச்சரியமாக இருக்கிறதே. கூட்டில் ஒரு முட்டைதான் இருக்கிறது. எப்போதும் நான்கைந்து முட்டைகள் இருக்குமே. அது சரி, எனக்கு ஒரு முட்டை தானே தேவை. உன்னிடம் நான் செய்த நிபந்தனைப்படி ஒரு முட்டையைத்தானே குடிக்க வேண்டும்” என்று முட்டையைக் குடிக்க முயற்சித்தது ஓணான்.

அந்த சுண்ணாம்பு முட்டையை தன் வாயில் போட்டு விழுங்கியது. மறு நொடியில் வீரியமிக்க சுண்ணாம்பினால் அதன் நாக்கும் வயிறும் வெந்தது. எரிச்சலோடு மரத்தின் மேலேயிருந்து பொத்தென்று தரையில் விழுந்தது.

தரையில் விழுந்த ஓணான் அங்குமிங்குமாக தள்ளாடியபடி வேலியில் புகுந்து கொண்டது.

தேய்காய் வெட்டுக்காரர் வேலி மறைவில் இருந்து மரத்தின் அருகே வந்தார். உடனே குருவியானது அவர் அருகே பறந்து வந்து நின்றது. குருவி மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி