ஹிஜ்ரி வருடம் 1435 ஷவ்வால் பிறை 29
ஜய வருடம் ஆவணி மாதம் 10ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, AUGUST ,26, 2014
வரு. 82  இல. 202
 
பாண்டிருப்பு ஸ்ரீ வட பத்;திரகாளியம்மன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் இன்று ஆரம்பம்

பாண்டிருப்பு ஸ்ரீ வட பத்;திரகாளியம்மன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் இன்று ஆரம்பம்

மகாபாரத இதிகாச நாயகர்களுக்கும், பாண்டவர் பத்தினி திரெளபதைக்கும் ஆலயம் அமைத்து பக்திப் பரவசத்துடன் விழாவெடுக்கும் பண்பாட்டுக்குப் பேர்போன பாண்டிருப்பு கிராமத்தில் தஞ்சமென வரும் அடியவர்களுக்கு அருள்கொடுத்து வினை தீர்க்கும் நாயகியாக ஸ்ரீ வட பத்திர காளியம்மன் எழுந்தருளியுள்ளாள்.

பாண்டிருப்பு ஸ்ரீ வடபத்திரகாளியம்மன் ஆலய வருடாந்த உற்சவம் இன்று செவ்வாய்க்கிழமை 26 ஆம் திகதி திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி எதிர்வரும் 03 ஆம் திகதி நடைபெறும் தீ மிதிப்பு வைபவத்துடன் உற்சவம் நிறைவுபெறவுள்ளது.

பாண்டிருப்பில் வேப்ப மர நிழலில் இருந்து அருள் பாலிக்கும் ஸ்ரீ வட பத்திர காளியம்மனின் வரலாறும், அற்புதமும் மிகத் தொன்மையானவை.

அதிகமான இந்துக் கோவில்கள் கிழக்குத் திசை நோக்கியதாக இருக்க பாண்டிருப்பில் உள்ள இக் காளிகோவில் மட்டும் வடக்குத் திசை நோக்கியதாக அமைந்துள்ளது. இதனால் ஸ்ரீ வட பத்திரகாளிம்மன் எனப் பெயர் வந்துள்ளது. முன்னர் மரமுந்திரிகைக் காடாகவும், ஆல், அரசு, வேம்பு, நாவல், கொக்கட்டி, லாக்கடை என பல்வேறு மரங்கள் நிறைந்த சோலையாகவும் காணப்பட்ட இடத்தில் சிறுவர்கள் விளையாடச் செல்வது வழக்கமாகும்.

அச்சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருக்கும் போது அழகான பெண் உருவம் ஒன்று நாவல் மரத்தின் கீழ் நின்று அருகே காணப்பட்ட மடுவில் மறைந்துள்ளது. இரண்டு நாட்களுக்குப் பின்னர் அதே பெண் உருவம் அங்கு நின்ற நொக்கொட்டியா மரத்தினுள் மறைந்துள்ளது. இந்த மரத்தின் கீழ் தான் இப்போதைய பிரதான கோவிலின் பரிவார மூர்த்தங்களில் ஒன்றான நாக தம்பிரான் கோவில் அமைந்துள்ளது.

அங்கு சிறுவயதில் விளையாடச் செல்லும் சிறுவர்களில் ஒருவரான காத்தன்பிள்ளை இராசையா என்பவரின் கனவில் தோன்றிய பெண் உருவம். ஒரு எல்லையைக் காட்டி “அந்த இடத்தில் நான் இருக்க விரும்புகின்றேன்” என்று சொல்லி “அதற்கு அடையாளமாக அங்கே உள்ள ஒரு பற்றையொன்றில் சிவப்பு நிறப்பட்டுத் துண்டொன்று போட்டிருக்கின்றேன்” என்று சொல்லி மறைந்தது. இதனை அவர் ஊரவர்களுக்குத் தெரிவித்து அந்த இடம் சென்று பார்த்து அவ்விடத்தில் ஆலயம் அமைத்தனர்.

1942இல் அக்கோவிலின் தேவை கருதி கிணறு கட்டிக் கொட்டு இறக்கிக் கொண்டிருக்கும் போது கொட்டு இறங்காமல் இருந்தது. அதேவேளை பூசகர் வந்து பார்த்துவிட்டு ஒரு பூவும், ஒரு தேங்காயும், கற்பூரமும் எடுத்துக் கிணற்றுக் கொட்டில் வைத்துச் சில மந்திரங்கள் சொல்லி தேங்காய் வெட்டியபோது கிணற்றுள் நின்று வேலை செய்து கொண்டிருந்தவர்கள் காலில் ஏதோவொன்று அடிபடுவதாகக் கூறி கவனமாக ஆராய்ந்த போது ஒரு அம்மன் சிலையைக் கண்டெடுத்தனர். அச்சிலையை வைத்துத்தான் இன்றுவரை பூசை செய்து கொண்டிருக்கின்றனர்.

ஆலயத்தின் தலவிருட்சமாக இங்குள்ள வேம்பு மரம் திகழ்கின்றது. இம் மரத்தினுடைய இலைகள் ஏனைய வேம்புகள் போன்று கசப்புத் தன்மை இல்லாதிருப்பதுடன் அம்மனை நம்பி வந்தோர் பிணி தீர்க்கும் சஞ்சீவியாக இன்றுவரை பயன்படுகின்றது. இம்மரத்தின் இலைகளையும் அம்மனின் தீர்த்தத்தினையும் உட்கொள்வோர் பிணி நீக்கி செளபாக்கியங்களும் பெற்றவர்களாகத் திகழ்வார்கள்.

இங்கு கிராமிய வழிபாட்டு முறையிலான பக்தி வழிபாடு காணப்படுகிறது. முழுமையாக தமிழ் மொழியிலே மந்திரங்கள் உச்சாடனம் செய்யப்படுகின்றன. ஆலய உற்சவ கால பூசை நேரத்தில் அம்மன் தெய்வ உருப்பெற்று ஆடுபவர்கள் ஆலயத்திற்கு வரும் அடியவர்களின் கைகளைப் பிடித்து அருள் வாக்குச் சொல்லும் நிகழ்வும் இடம்பெறுகின்றது. அம்மனின் அருள்வாக்கு கேட்பதற்கென்றே பலர் இங்கு தவம் கிடக்கின்றனர்.

பாண்டிருப்பு ஸ்ரீ வட பத்திரகாளியம்மன் உற்சவத்தின் முக்கிய நிகழ்வுகளான வாழைக்காய் எழுந்தருளப்பண்ணல் 31 ஆம் திகதி இடம்பெறும். 02 ஆம் திகதி சக்தி மஹாயாகம், நோர்ப்பு கட்டுதல். கடல் தீர்த்தமாடுதல் இடம்பெறும். 03 ஆம் திகதி காலை 7 மணிக்கு தீ மிதிப்பு வைபவம் இடம்பெறவுள்ளது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி