ஹிஜ்ரி வருடம் 1434 ரபீஉனில் அவ்வல் மாதம் பிறை 25
விஜய வருடம் தை மாதம் 14ம் நாள் திங்கட்கிழமை
MONDAY, JANUARY , 27 2014
வரு. 82  இல. 23
 

இந்திய - நியூசி. போட்டி சமநிலையில் முடிவு

இந்திய - நியூசி. போட்டி சமநிலையில் முடிவு

நியூசிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி சம நிலையில் முடிவடைந்தது.

நியுசிலாந்து சுற்றுப்பயணம் செய்து விளையாடிவரும் இந்தியக் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது.

இதில் நியூசிலாந்து அணி 2-0 என்ற நிலையில் முன்னணியில் உள்ளது. இந்நிலையில் மூன்றாவது ஒருநாள் போட்டி ஓக்லாந்து ஈடன்பார்க் மைதானத்தில் நேற்று முனதினம் நடைபெற்றது.

அதில் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணித் தலைவர் டொனி பந்து வீச முடிவு செய்தார். இதனையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்த அணி 50 ஓவர்களில் 314 ஓட்டங்கள் குவித்தது. அந்த அணியில் அபாரமாக விளையாடிய மார்டின் குப்தில் 111 ஓட்டங்கள் குவித்தார்.

பின்னர் 315 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணியில், வழக்கம் போல் ஆரம்ப வீரர்கள் தங்களது விக்கெட்டுகளை இழந்தனர். 4 சிக்ஸர்களை அடித்து அசத்திய ரோஹித் ஷர்மா 38 பந்துகளில் 39 ஓட்டங்கள் எடுத்து ஆண்டர்சன் பந்தில் ஆட்டம் இழந்தார். மற்றொரு தொடக்க வீரர் தவான் 28 ஓட்டங்களுக்கும், கொஹ்லி 6 ஓட்டங்களுக்கும் ஆட்டமிழந்து ரசிகர்களை அதிர்ச்சி அடையச் செய்தனர்.

பின் வந்த வீரர்களும் ஓரளவுக்கு கைகொடுக்க வெற்றிக்கு 29 ஓட்டங்கள் தேவை இருந்த நிலையில் ஒரு விக்கெட் மட்டுமே இருந்ததால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கடைசி கட்டத்தில் அபாரமாக விளையாடிய ஜடேஜா 45 பந்துகளில் 88 ஓட்டங்கள் குவித்தார். இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 314 ஓட்டங்கள் எடுத்ததால் இந்தப் போட்டி சமநிலையில் முடிந்தது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி