ஹிஜ்ரி வருடம் 1434 ரபீஉனில் அவ்வல் மாதம் பிறை 25
விஜய வருடம் தை மாதம் 14ம் நாள் திங்கட்கிழமை
MONDAY, JANUARY , 27 2014
வரு. 82  இல. 23
 

கடைசி ஒருநாள் போட்டியிலும் இங்கிலாந்து தோல்வி

கடைசி ஒருநாள் போட்டியிலும் இங்கிலாந்து தோல்வி

அவுஸ்திரேலியாவுடனான ஐந்தாவதும் கடைசியுமான ஒருநாள் போட்டியிலும் இங்கிலாந்து அணி 05 ஓட்டங்களால் தோல்வியை சந்தித்தது. இதன் மூலம் அவுஸ்திரேலியாவுடனான ஆஷஸ் போட்டியை 0-5 என முழுமையாக இழந்த இங்கிலாந்து அணி ஒருநாள் தொடரையும் 1-4 என மோசமாக பறிகொடுத்தது.

அடிலைட் ஒவல் மைதானத்தில் நேற்று நடைபெற்ற 5 ஆவது ஒருநாள் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் ஆடிய அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்களுக்கும் 9 விக்கெட்டுகளை இழந்து 217 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. ஜோர்ஜ் பெய்லி மாத்திரம் அரைச்சதம் ஒன்றை பெற்றார். 74 பந்துகளுக்கு முகம்கொடுத்த அவர் 4 பெளண்டரிகளுடன் 56 ஓட்டங்களை குவித்தார். ஆரம்ப வீரர் ஷோன் மார்ஷ் 36 ஓட்டங்களை பெற்றார்.

இங்கிலாந்து சார்பில் பந்து வீச்சில் ஸ்டுவட் பிரோட் மற்றும் பென் ஸ்டொக்ஸ் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு கிறிஸ் ஜோர்டன் 2 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

இந்நிலையில் பதிலெடுத்தாட களமிறங்கிய இங்கிலாந்து அணியும் ஓட்டங்கள் பெற தடுமாறியது. முக்கியமான தருணங்களில் விக்கெட்டுகளை பறிகொடுத்த இங்கிலாந்து கடைசியில் 49.4 ஓவர்களில் 212 ஓட்டங்களுக்கு சுருண்டது. மத்திய வரிசையில் வந்த ஜோ ரூட் அரைச்சதம் ஒன்றை எடுத்தார். 86 பந்துகளுக்கு முகம்கொடுத்த அவர் 3 பெளண்டரிகளுடன் 55 ஓட்டங்களை பெற்றார். ஒயின் மோர்கன் 40 பந்துகளில் 39 ஓட்டங்களை பெற்றார். இதன்போது மோர்கன், ரூட் ஜோடி 4 ஆவது விக்கெட்டுக்காக 64 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்துகொண்டது.

எனினும் இங்கிலாந்தின் வெற்றிக்காக ஒருவரும் நின்று பிடித்து ஆடவில்லை. மத்திய வரிசையில் வந்த ரவி பொபாரா கடைசி நேரத்தில் வெற்றிக்காக போராடியபோதும் அவர் 44 பந்துகளில் 25 ஓட்டங்களை பெற்ற நிலையில் கடைசி ஓவரில் வெளியேறினார்.

அவுஸ்திரேலியாவுக்காக கிளைன்ட் மக்கே மற்றும் கோல்டர் நில் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். எனினும் துடுப்பாட்டத்தில் தீர்க்கமான 27 ஓட்டங்களையும் பந்துவீச்சில் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்திய ஆஸி. வீரர் பொக்னர் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி