ஹிஜ்ரி வருடம் 1434 துல்கஃதா மாதம் பிறை 10
விஜய வருடம் புரட்டாசி மாதம் 01ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, SEPTEMBER , 17, 2013
வரு. 81 இல. 221
 

ஏழாயிரம் வருடகால நீண்ட வரலாறு கொண்டது பருத்தி ஆடைப் பாவனை

ஏழாயிரம் வருடகால நீண்ட வரலாறு கொண்டது பருத்தி ஆடைப் பாவனை

பருத்தி அயன மண்டலப் பகுதிகளில் மட்டுமே விளையும் இழைப் பயிராகும். செடியிலி ருந்து நாம் பலவிதமாக பயன்படுத்தும் மெதுமையான பருத்தி இழைகள் கிடைக்கின்றன. இச்செடியின் விதைகள் மூடிய, மிருதுவான, அடர்ந்த இழைகள் கொண்ட பந்து போன்ற அமைப்பினைப் பெற்றிருக்கும். இவ்விதையினைச் சுற்றி வளரும் இழைகளை நாம் பஞ்சு என்று அழைக்கிறோம்.

பருத்தி ஒரு நல்ல பணப்பயிர். பருத்தி இழைகளைப் பிரித்தெடுக்கும் போது ஏறத்தாழ 10 வீதம் மட்டுமே வீணாகிறது. இவ்விழைகளிலுள்ள சிறிதளவு புரதம், மெழுகு போன்றவை நீக்கப்படும் போது மற்றவையனைத்தும், தூய இயற்கையான செலுலோஸ் பல்கூறு ஆகும். இவ்விழைகளில் செலுலோஸின் அமைப்பு முறை பஞ்சுக்கு உறுதியும். நிலைப்புத்தன்மையும், உறிஞ்சும் தன்மையும் தருகின்றன. ஒவ்வொரு இழையும் 20 தொடக்கம் 20 செலுலோசுப் பல்கூறுகள் முறுக்கப்பட்டு உருவாகின்றன.

பருத்திக்காய் வெடிக்கும் போது அல்லது உடைக்கப்படும் போது எல்லா இழைகளும் முறுக்கிய நாடாக்கள் போல சிக்கிக்கொண்டு உலர்கின்றன. இவ்வாறு சிக்கிக்கொண்டுள்ள பஞ்சு நூல் நூற்க மிக ஏதுவானதாகும்.

பருத்தி பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக மெல்லிய துணிகள், ஆடைகள் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எகிப்தியர்கள் கி.மு. 12000 காலப்பகுதியிலேயே பருத்தியை பயன் படுத்தியதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். மெக்சிகோ நாட்டு குகைகளில் 7000 ஆண்டு (சுமார் கி.மு. 5000) பழமையான பருத்தித் துணிகள் காணப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவிலும் மெக்சிகோவிலும் பல்வேறு வகை பருத்திச் செடிகள் வளர்க்கப்பட்டதற்கு அகழ்வாராய்ச்சி ஆதாரங்கள் உள்ளன.

பருத்தி சிந்துவெளிப் பகுதியில் கி.மு. காலப்பகுதியில் அங்கு வாழ்ந்தோரால் பயிரிடப்பட்டதாகத் தெரிகிறது. சிந்து வெளியில் பருத்தித் தொழில் நன்கு வளர்ச்சியடைந்து இருந்ததுடன் அக்காலத்துப் பருத்தித் தொழில்நுட்பத்தின் தொடர்ச்சியாக இன்றும் தற்கால இந்தியாவில் பருத்தி நூல் நூற்றலும், உற்பத்தியும் முன்னணியில் உள்ளது.

கி.மு. 1500 ஆம் ஆண்டு எழுதப்பட்ட ரிக் - வேதத்திலும் பருத்தி பற்றிய குறிப்புகள் உள்ளன. கி.மு. 2500 ஆம் ஆண்டு இந்திய பருத்தி பற்றி புகழ் பெற்ற கிரேக்க வர்லாற்றாளர் ஹெரோடோடஸ் “அங்கு செம்மறி ஆட்டிலிருந்து கிடைப்பதை விட அழகான, அதே அளவு தரமான கம்பளி, காடு போல் வளரும் மரங்களில் உள்ளது. இந்திய மக்கள் இம்மரக் கம்பளி இழையிலிருந்து உடைகள் செய்து கொள்கின்றனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

கிறிஸ்துவுக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே மிகத் திறமையாகப் பருத்தியிலிருந்து துணிகளை நெய்வதற்கு அறிந்திருந்தனர். இப்பருத்தித் துணிகளின் பயன்பாடு இங்கிருந்து நடுநிலக்கடல் பகுதிகளுக்குப் பரவியது. முதலாம் நூற்றாண்டளவில் அராபிய வணிகர்கள் மஸ்லின், கலிக்கோ வகைத் துணிகளை இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்குக் கொண்டு வந்தனர். முஸ்லிம்கள் ஒன்பதாம் நூற்றாண்டில் ஸ்பெயினில் பருத்திப் பயிர்ச் செய்வதை அறிமுகப்படு த்தினர்.

ஃபுஸ்தியன், டிமிட்டி ஆகிய பருத்தித் துணி வகைகள் அங்கே நெய்யப்பட்டன. 14 ஆம் நூற்றாண்டில் வெனிஸ், மிலான் ஆகிய பகுதிகளிலும் இது பரவியது. 15 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் மிகவும் குறைந்த அளவு பருத்தித் துணிகளே இங்கிலாந்துக்கு இறக்குமதியாகின. அமெரிக்கர்களும் பருத்தியிலிருந்து ஆடைகளை நெய்ய அறிந்திருந்தனர்.

பெரு நாட்டுக் கல்லறை களில் காணப்பட்ட பருத்தித் துணிகள் இன்காப் பண்பாட்டுக்காலத்துக்கு முந்தியவை. கிரேக்க காலத்தில் பருத்தி ஒரு இறக்குமதி செய்யப்பட்ட பொருளாகவே அறியப்பட்டது. அம்மக்கள் செம்மறி ஆட்டுக் கம்பளி தவிர வேறெந்த இழையையும் அறிந்திருக்கவில்லை யாதலால், பருத்தி மரம் சிறு செம்மறி ஆடுகளைக் கொண்டதாகவே கற்பனை செய்து கொண்டனர்.

1350 இல் ஜான் மான்டவில் என்பவர் எழுதியதாவது, “இந்தியாவில் வளரும் இந்த அற்புதமான செடி அதன் கிளை நுனிகளில் சிறு செம்மறி ஆடுகளைக் கொண்டிருந்தது. இக்கிளைகள் ஆடுகளுக்குப் பசித்த போது கீழ் நோக்கி வளைந்து அவற்றை மேய விட்டன.”

இன்றும் பல ஐரோப்பிய நாடுகளில் பருத்தியை குறிக்கும் சொல் இதனை நினைவுபடுத்தும் விதமாகவே உள்ளது. ஜெர்மனியில் பருத்தி “மரக்கம்பளி இழை” என்ற பொருளில் பொம்வுல் என்று அழைக்கப்படுகிறது.

அமெரிக்கக் கண்டத்தில் மிக முந்திய பருத்திப் பயிரிடுதல் மெக்சிக்கோவில் 5,000 ஆண்டுகளுக்கு முன்னர் இடம் பெற்றதாகத் தெரிகிறது. கொசிப்பியம் ஹிர்சுட்டம் என்னும் பருத்தி இனமே அங்கு பயிரானது. இவ்வினமே இன்று உலகில் அதிகம் பயிராகும் பருத்தி வகையாகும். இது உலகப் பருத்தி உற்பத்தியின் 90 வீதம் அளவு காட்டுப் பருத்தி இனங்கள் காணப்படுகின்றன. இதற்கு அடுத்ததாக அவுஸ்திரேலியாவிலும், ஆபிரிக்காவிலும் கூடிய அளவு பருத்தி இனங்கள் உள்ளன.

18 ஆம் 19 ஆம் நூற்றாண்டுகளில் பிரித்தானியரின் விரிவாக்கம் மற்றும் குடியேற்றவாத ஆட்சி நிறுவப்பட்டதைத் தொடர்ந்து இந்தியாவில் பருத்தித் தொழில்துறை படிப்படியாக நலிவடையத் தொடங்கிற்று. பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனியினர், இந்தியாவின் பருத்தி நூற்பு ஆலைகளையும், ஆடை உற்பத்தி நிலையங்களையும் மூடி, இந்தியாவை மூலப்பொருளாகப் பருத்தியை ஏற்றுமதி செய்யும் நிலைக்கு இறக்கினர். இப்பருத்தியிலிருந்து இங்கிலாந்தில் செய்யப்பட்ட துணிவகைகளைக் கொண்டு வந்து இந்தியாவில் விற்றுப் பொருZட்டினர். இங்கிலாந்தின் தொழில் புரட்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட நூற்பு இயந்திரங்களும், இந்திய பருத்தி தொழில் நலிவடைந்ததற்கான காரணமாகும்.

தொழிற்புரட்சிக் காலத்தில் இங்கிலாந்தில் பருத்தித் தொழில் பெரு வளர்ச்சி கண்டதுடன், துணி வகை இங்கிலாந்தின் முன்னணி ஏற்றுமதிப் பொருளாகவும் ஆனது.

இங்கிலாந்தின் பர்மிங்காமைச் சேர்ந்த லூயிஸ் பால், ஜோன் வியாட் ஆகியோர் உருளை நூற்பு இயந்திரத்தையும், பருத்தியிலிருந்து சீரான அளவில் நூலை நூற்பதற்கான முறையையும் உருவாக்கினர். பின்னர் 1764 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட நூற்பு ஜெனி, 1769 இல் ரிச்சாரட் ஆர்க்ரைட்டினால் உருவாக்கப்பட்ட நூற்புச் சட்டம்.

என்பன பிரித்தானிய நெசவாளர்கள் விரைவாக நூல் நூற்கவும், துணி நெய்யவும் உதவின. 18 ஆம் நூற்றாண்டில் இறுதியில் பிரித்தானிய நகரமான மான்செஸ்டரில் பெருமளவில் பருத்தித் தொழில் நடைபெற்றதனால் அதற்கு கொட்டனோபோலிஸ் என்னும் பட்டப்பெயர் வழங்கியது.

அத்துடன் மான்செஸ்டர் உலகப் பருத்தி வணிகத்தின் மையமாகவும் ஆனது. 1793 ஆம் ஆண்டில் எலி விட்னி என்பவர் கண்டுபிடித்த, விதையிலிருநது பஞ்சைப் பிரித்தெடுக்கும் பருத்தி ஜின் என்னும் இயந்திரம் உற்பத்தித் திறனை மேலும் அதிகரித்தது. மேம்பட்டு வந்த தொழில்நுட்பமும், உலகின் சந்தைகளில் அவர்களுக்கிருந்த கட்டுப்பாட்டு விரிவாக்கமும், உலக வணிகச் சங்கிலித் தொடர்ச்சி உருவாக பிரித்தானியருக்கு உதவின.

குடியேற்ற நாடுகளில் இருந்த பருத்திப் பெருந்தோட்டங்களில் இருந்து வாங்கிய பருத்தியை, இங்கிலாந்துக்குக் கொண்டு சென்று லங்காஷயரில் இருந்த ஆலைகளில் துணிகளாக உற்பத்தி செய்து, அவற்றைப் பிரித்தானியக் கப்பல்கள் மூலம் சாங்காய், ஹாங்காங் ஆகிய நகரங்களூடாக மேற்கு ஆபிரிக்கா, இந்தியா, சீனா ஆகியவற்றுக்குக் கொண்டு சென்று விற்றனர்.

1840 களில் இயந்திரமான இங்கிலாந்தின் ஆலைகளுக்கு வேண்டிய பெருமளவு பருத்தியை வழங்கும் திறனை இந்தியா இழக்கத் தொடங்கியது. அத்துடன், பெருமளவு இடத்தை அடைக்கும். விலை குறைவான பருத்தியைக் கப்பல் மூலம் இந்தியாவிலிருந்து இங்கிலாந்துக்கு எடுத்துச் செல்வது செலவு கூடிய ஒன்றாகவும் இருந்தது.

அதே நேரம், அமெரிக்காவில் தரம் கூடிய கொசிப்பியம் ஹிர்ஸ் சுட்டம், கொசிப்பியம் பார்படென்சு ஆகிய தாயகப் பருத்தி இனங்களின் செய்கை வளர்ச்சியடைந்து வந்தது. இவ்வினப் பஞ்சுகளின் இழைகள் நீளமானவையாகவும், வலுவானவையாகவும் இருந்தன. இக் காரணிகள் பிரித்தானிய வணிகர்களை அமெரிக்காவிலும், கரிபியப் பகுதிகளிலும் இருந்த பெருந் தோட்டங்களிலிருந்து பருத்தியை வாங்குவதற்குத் தூண்டின.

இது கூலி பெறாத அடிமைகளினால் உற்பத்தி செய்யப்பட்டதால் மலிவானதாகவும் இருந்தது. அமெரிக்காவில் பருத்தி, இன்டிகோ மற்றும் புகையிலை வளர்ப்பு அடிமை மக்களின் தொழிலாக இருந்து வந்தது. பின்னர் அடிமைகள் சம உரிமை பெற்ற பிறகு குத்தகை முறை வேளாண்மையிலும் அவர்கள் இவற்றையே பயிர் செய்தனர்.

19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், அமெரிக்காவின் தென்பகுதி மாநிலங்களின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகப் பருத்தியே விளங்கியது.

அமெரிக்காவில் அடிமைகளின் முக்கிய தொழிலாகவும் இது ஆனது. அமெரிக்க உள்நாட்டுப் போர்க்காலத்தில், தென்பகுதித் துறைமுகங்கள் ஒன்றியத்தினால் தடுக்கப்பட்ட போது அமெரிக்காவின் பருத்தி ஏற்றுமதி வீழ்ச்சி கண்டது.

பிரித் தானியாவைக் கூட்டமைப்பு அரசை ஆதரிக்குமாறு தூண்டும் என்ற நம்பிக்கையில், ஒரு உத்தியாகக் கூட்ட மைப்பு அரசாங்கம் பருத்தி ஏற்றமதியைக் குறைத்தது. ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாக இங்கிலாந்தும், பிரான்சும் எகிப்திலிருந்து பருத்தியை இறக்குமதி செய்தன.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி