ஹிஜ்ரி வருடம் 1434 துல்கஃதா மாதம் பிறை 10
விஜய வருடம் புரட்டாசி மாதம் 01ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, SEPTEMBER , 17, 2013
வரு. 81 இல. 221
 

வண்டு வந்து தேன் குடித்தால் மலருக்கு தண்டனை

வண்டு வந்து தேன் குடித்தால் மலருக்கு தண்டனை

காசு கொடுத்தால் மாலை போடும்

கோயில் யானைகளுடன் விலை மகளிரை ஒப்பிடும்

விரிந்த உள்ளம் கவிஞர் கண்ணதாசனுக்கே வரும்.

சூழ்நிலைக் கைதிகளாய் வாழ்விழந்த

அந்தப் பெண்களை கவிஞர் புரிதலுடன்

அணுகியிருக்கிறார். பரிவுடன் நடத்தியிருக்கிறார்.

அவரது தனிக்கவிதை ஒன்று திரைப்பாடலாகவும்

உலா வந்தது.

“கற்பாம் மானமாம் கண்ணகியாம் சீதையாம்

கடைத்தெருவில் நிற்குதடா ஐயோ பாவம்!

காசிருந்தால் வாங்கலாம் ஐயோ பாவம்!”

இந்தப் பாடலில் விலை மகளிரின்

வழக்கறிஞராகவே மாறியிருப்பார் கவிஞர்.

“வண்டு வந்து தேன்குடித்தால் மலருக்குத்தான் தண்டனை வழுக்கிவிழும் பெண்களுக்கோ சட்டத்திலும் வஞ்சனை” என்பது திரைப்பாடல் வடிவம்.

இதன் மூலமாகிய தன் தனிக்கவிதையில், “பணமிருப்போர் தவறு செய்தால் பாதுகாக்கும் சட்டமே - நீ

வலையை வீசிப் பிடிப்பதெல்லாம் ஏழைகளை

மட்டுமே” என்பார் கவிஞர்.

“அந்த ஊரில் ஒரு வேசி இருந்தாள்” என்று ஒருவர் கதை எழுதியிருந்தாராம். ஜெயகாந்தன் அதைப் படித்துவிட்டு, “என்னடா எழுதியிருக்கிறான்? அந்த ஊரில் ஒரு பெண் இருந்தாள். அங்கிருந்த ஆண்களெல்லாம் சேர்ந்து அவளை வேசியாக்கினார்கள் என்றல்லவா எழுதியிருக்க வேண்டும்” என்றாராம்.

கவிஞர், பெண்ணை ஆண்கள் எப்படியெல்லாம் வேசியாக்கினார்கள் என்று பட்டியலிடுவார்.

“குணமிருந்தும் தவறு செய்வாள் குழந்தைக்காக

ஒருத்தி - இந்தக்

கொடுமை செய்ய உடன்படுவாள் குடும்பம் காக்க

ஒருத்தி

படித்திருந்தும் வேலையின்றிப் பள்ளிகொள்வாள்

ஒருத்தி - திரைப்

படத்தொழிலில் ஆசைவைத்து பலியானாள்

ஒருத்தி” என்பார்.

“கண்ணீரில் மிதக்குதடா கற்பு எனும் ஓடம் இது

கம்பனுக்கும் வள்ளுவருக்கும் கடவுளுக்கும்

பாடம்” என்று முடிக்கும் போது கவிஞரின் கனிவு

புலப்படும்.

தப்புத்தாளங்கள் படத்தில்

“நினைவெங்கும் மாங்கல்யம் தாய்மை

நிதந்தோறும் விளையாட்டு பொம்மை

பொருளாதாரம் செய்த விந்தை - இவள்

பொருள்தாரம் ஆகிவிட்ட

சந்தை” என்றெழுதியிருப்பார் கவிஞர்.

விளிம்பு நிலை மனிதர்கள் மீது அவருக்கிருந்த அன்பும் அனுதாபமும் இந்தப் படப்பாடல்களில் வெளிப்படும். எதிர்மறை வாழ்வை ஏற்றுக்கொண்டவன் குரல் இந்தப் படத்தின் பாடல்களில் ஓங்கிக் கேட்கும்.

“படிக்க ஆசவச்சேன் முடியலே

உழைச்சு பாத்துபுட்டேன் விடியலே

பொழைக்க வேறுவழி தெரியலே

நடந்தேன் நான்நெனச்ச வழியிலே...

இதுக்குக் காரணந்தான் யாரு...?

படைச்ச சாமியப்போய் கேளு

இதுக்குப்போய் அலட்டிக்கலாமா...

என்ற பாடலும் தப்புத்தாளங்கள் - வழி தவறிய பாதங்கள் என்ற பாடலும் விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கைச் சித்திரங்கள். அந்த நாட்களில், ஜனதா கட்சியில் தலைப்பாகையும் தாடியுமாய் ராஜ்நாராயணன் என்ற மனிதர், தான்தான் அடுத்த பிரதமர் என்று ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருப்பார். அதில் கவிஞர் கண்ணதாசனுக்கிருந்த எரிச்சல், இந்தப் பாடலில் வெளிப்பட்டிருக்கும்.

பாராளும் வேஷங்கள் பரதேசிக் கோலங்கள் விதி-வழி-தினமோடும் ஓடங்கள்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி