ஹிஜ்ரி வருடம் 1434 துல்கஃதா மாதம் பிறை 10
விஜய வருடம் புரட்டாசி மாதம் 01ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, SEPTEMBER , 17, 2013
வரு. 81 இல. 221
 

பாடும் நிலா பாலுவின் படு சுட்டித்தனம்

பாடும் நிலா பாலுவின் படு சுட்டித்தனம்

சாதாரணமாக யாரிடமும் கடன் வாங்காத பாலுவின் தந்தை, பாலுவிற்காக கொஞ்சம் பணத்தைக் கடன் வாங்கி வந்தார். பாலுவும் நண்பர்களோடு ஜாலியாக பம்பாய்க்கு சென்று வந்தார். இன்னும் தான் முதன் முதலாகப் பார்த்த வட இந்திய நகரம் பம்பாய்தான்.

கிராமத்திலிருந்து பம்பாய் பட்டணத்துக்குச் சென்று மிகப் பெரிய கட்டடங்களைப் பார்த்து பிரமித்துப் போய் நின்றிருக்கிறார் பாலு. ரெக்கார்டிங்கின் போது பம்பாயில் ஓடிய ஓர் ஆங்கில சண்டைப் படம் பார்த்த நினைவு இருந்தது.

அந்தப் படத்தில் சண்டை போட்டு விழும் நபர்களின் ரத்தம் ஏன் சிவப்பாக தெரியவில்லை என்று பாலுவிற்கு பெரியதாகக் கவலை. பாலு இரவெல்லாம் தூங்காமல் யோசித்துப் பார்த்தும் விடை தெரியவில்லை. கூட வந்த நண்பர்களிடம் கேட்க, அவர்களுக்கும் பதில் சொல்லத் தெரியவில்லை. பாலு தன் சந்தேகத்தை ராதாபதி ஆசிரியரிடம் கேட்க, அவர் கறுப்பு வெள்ளை படத்தில் எப்படி கலர் தெரியும் என்று பதில் கேள்வி கேட்டார்.

அப்போதுதான் தான் பார்த்த படம் கறுப்பு வெள்ளைப் படம் என்பதும் அதில் கலர் தெரியாது என்பதும் பாலுவிற்கு புரிந்தது. பாலு பம்பாய்க்குச் செல்லும் போது கைச்செலவுக்காக பத்து ரூபாய் பணம் கொடுத்து அனுப்பினார். பாலுவின் தந்தை. தான் ஊருக்குச் செல்வதற்காக தன் தந்தை பட்ட கஷ்டங்கள் பாலுவின் மனத்தை உறுத்தின. அவர் கொடுத்தனுப்பியதில் தனக்கு எதுவும் வாங்கிக் கொள்ளாமல் தன் சகோதரிகளுக்கு இரண்டு கவுன் வாங்கிக் கொண்டு போனார் பாலு. பாலுவின் இந்தச் செய்கை அவருக்கு வீட்டில் உள்ளவர்களிடம் நல்ல பெயரை வாங்கித் தந்தது.

காளஹஸ்தியில் இருக்கும் போதுதான் கிரிக்கெட் மீது ஆர்வம் பிறந்த பாலுவிற்கு. பாலுவின் வீட்டிற்கு அருகில் இருந்த மலையின் அடுத்த பக்கத்தில் பெரிய வற்றிய ஏரி ஒன்று இருந்தது. தினமும் கிரிக்கெட் விளையாட நண்பர்களுடன் மலையின் மீது ஏறி அந்தப் பக்கம் போய்விடுவார் பாலு. மலை ஏறி இறங்காமல் அந்த மைதானத்துக்குப் போக சுற்றிக்கொண்டுதான் போக வேண்டும். ஆகையால் தான் இந்த குறுக்கு பாதையிலுள்ள மலையில் தர்ப்பைச் செடி புதராக வளர்ந்து இருக்கும்.

மாலையில் கிரிக்கெட் விளையாடி விட்டு நண்பர்களுடன் மலையில் ஏறி வந்து கொண்டிருந்த போது யாரோ ஒரு கிராமத்து வாசி, மலையில் இருந்த சிக்கி முக்கிக் கற்களை வைத்துக்கொண்டு பீடி பற்ற வைத்துக்கொண்டு போனதை பார்த்தார்கள். பாலுவின் கூட வந்த நண்பன் ஒருவன் பாலுவிடம் “உன்னால் கற்களை வைத்துக்கொண்டு நெருப்பு வரவழைக்க முடியுமா?” என்று கேட்க பாலுவும் சவாலை ஏற்றார்.

தர்ப்பை புதரிலிருந்து தர்ப்பைகளைப் பிடுங்கி ஒரு கட்டாகக் கட்டி கற்களைத் தட்டி நெருப்புப் பொறிகளை உண்டாக்கி தர்ப்பைகளைப் பற்ற வைத்தார். நன்கு காய்ந்த தர்ப்பை பற்றிக் கொண்டது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி