ஹிஜ்ரி வருடம் 1434 துல்கஃதா மாதம் பிறை 10
விஜய வருடம் புரட்டாசி மாதம் 01ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, SEPTEMBER , 17, 2013
வரு. 81 இல. 221
 

காவியமாகிய ஓவியம்

காவியமாகிய ஓவியம்

இந்தித் திரை உலகின் பிரபல டைரக்டர் மற்றும் தயாரிப்பாளர் கமால் அம்ரோகி. இவர் பிரான்ஸ் நாட்டிற்கு சென்றிருந்தார். ஒருநாள் பாரீஸ் மாநகர தெருக்களில் சுற்றிக்கொண்டிருந்தார்.

அங்கே ஒரு கலைக்கூடம் அவர் கண்களில் பட்டது. உள்ளே சென்று பார்வையிட்டார். பல்வேறு நாட்டு கலாசாரம். வரலாற்றை விளக்கும் படங்கள் அங்கே வைக்கப்பட்டிருந்தன. அதில் ஒரு ஓவியம் அப்படி அவரை ஈர்த்தது. அருகே சென்று பார்த்தார் அது புகழ் பெற்ற பேரரசி ரசியா சுல்தானா ஓவியம். அதன் கீழ் என்றும் அழியாத காவியம் என்று எழுதப்பட்டிருந்தது.

தத்ரூபமான அந்தப் படத்தை கமால் கண்ணிமைக்காமல் பார்த்தார். ஓவிய ரசியா சுல்தானாவின் தோற்றத்தில் இந்திய நடிகை ஒருவர் தென்படுவதை அவர் உணர்ந்திருக்கிறார்.

மீண்டும் அவர் ரசியா சுல்தானாவின் நீண்ட மூக்கு, அகன்ற விழிகள், பரந்த நெற்றியை பார்த்த போது, அவை அனைத்தும் அவர் நடிகை ஹேமமாலினியிடம் கண்டவை. அப்போதே அவர் ஹேமமாலினியை வைத்து ரசியா சுல்தானா படம் தயாரிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டார். தயாரித்தார். வெளியிட்டார். அந்த படம் பெரும் வசூலைக் குவித்தது.

ரசியா சுல்தானா சினிமா உருவான விதத்தை அவர் தனது டைரியில் எழுதிவைத்திருக்கிறார். அதில் உள்ள சுவாரஸ்யமான விஷயங்களைத்தான் இங்கே தருகிறோம்.

கமால் நடிகை மீனாகுமாரியின் கணவர். முதலில் திருமணம் செய்து கொண்டு பிரிந்த இவர்கள் மீண்டும் திருமணம் செய்து கொண்டார்கள். கமால் 73 வது வயதில் இறந்தார். மீனாகுமாரியின் கல்லறை அருகிலே தன்னை புதைக்கும்படி கூறினார். அவ்வாறே புதைக்கப்பட்டார்.

இவர் ஹேமமாலினியை புகழின் உச்சிக்கு கொண்டு சென்ற இயக்குனர். அதனால் அவரது மரியாதைக்குரியவராக திகழ்கிறார். சத்யம் சிவம் சுந்தரத்தின் மூலம் ஜீனத் அமனை ராஜ்கபூர் புகழ் ஏணியில் ஏற்றியதுபோல் ஹேமமாலினிக்கு கமால் அமைந்தார்.

ரசியா சுல்தானா படத்தில் ஹேமமாலினிக்கு தேவையான உடைகளை கமால் பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்று வாங்கியிருக்கிறார். முஸ்லிம் அரசிகள் எவ்வாறான உடைகளை அணிந்திருக்கிறார்கள் என்பதை பல்வேறு அருங்காட்சியகத்திற்கு சென்று பார்வையிட்டிருக்கிறார். அதில் ஐதராபாத்தில் உள்ள ஜலர்ஜங் மியூசியமும் ஒன்று. அங்கு முஸ்லிம் அரசிகள் அணிந்த உடைகள், ஆபரணங்கள், அணிகலன்கள் எல்லாம் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.

அவைகளைப் பார்த்து, அடிப்படையாகக் கொண்டு ரசியா சுல்தானா படத்திற்கு பெரும் பணச் செலவில் ஆடைகளை உருவாக்கியிருக்கிறார்கள். அதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், அவ்வளவு பொருட் செலவில் உருவாக்கிய ஆடைகளை மீண்டும் மக்கள் பயன்படுத்த முடியவில்லையே என்ற ஆதங்கத்தையும் தன் டைரியில் குறிப்பிட்டிருக்கிறார். அந்த படத்தில் பயன்படுத்திய இறகு பேனாவை, ஹேமமாலினி வெகுகாலம் பயன்படுத்தி வந்தார். தன்னிடம் ஆட்டோகிராப் கேட்ட ரசிகர்களுக்கு அதை பயன்படுத்தி கையெழுத்திட்டார். அதை கமால் பெருமைக்குரிய விஷயமாக கருதியிருக்கிறார்.

ரசியா சுல்தானா படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது அதே கம்பீரத்தோடு ஹேமா நடிக்க காத்திருக்க அருகில் செல்லும் கமால் ‘பேகம் சரியா நீங்கள் உத்தரவு கொடுத்தால் நாம் படப்பிடிப்பை தொடங்கலாம்’ என்று மெல்லிய குரலில் சொல்வாராம். அப்போது உடன் இருப்பவர்கள் எல்லாம் சிரித்துவிடுவார்களாம்.

பின்பு அனைவருமே ஹேமாவை, ரசியா என்று அழைத்திருக்கிறார்கள். முதல் காட்சியில் ஒரு பிரமாண்டமான மாளிகையில் உயர்ந்த சிம்மாசனத்தில் ராணி வேடத்தில் ஹேமாவை உட்காரவைத்திருக்கிறார். உட்கார்ந்ததும் ஹேமாவின் கண்கள் கலங்கிவிட்டனவாம். ‘இயக்குனர் என்னை இன்னொரு உலகத்திற்கே அழைத்துச் சென்றுவிட்டார்” என்று மெய்சிலிர்க்க கூறியிருக்கிறார். அதுவரை அவர் உணர்ந்திராத பரவச அனுபவமாக அது இருந்திருக்கிறது.

படத்திற்காக ரசியாவின் வாழ்க்கை வரலாற்றை பலமுறை கமால் படித்திருக்கிறார். அவருடைய நடை, உடை, பழக்க வழக்கம், உணவு விஷயம் போன்ற அனைத்தையும் கரைத்துக் குடித்து படமாக்கியுள்ளார். அதனால் அந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்த ஹேமா, நான் அந்த படத்திற்காக ரசியா சுல்தானாவாகவே வாழ்ந்தேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

அவருக்கான உடைகளை ஷமீம் வாகாயி என்ற கொஸ்ட்யூம் டிசைனர் உருவாக்கியிருக்கிறார். அவர் தன் திறமை முழுவதையும்ஆடை வடிவமைப்பில் காட்டியுள்ளார். அவர் டிசைன் செய்யும் உடைகள் ஒவ்வொன்றையும் ஹேமாவிடம் கொண்டு செல்லும் கமால், ‘இது உங்களுக்கு பிடித்திருக்கிறதா ரசியா?’ என்று கேட்பாராம். ‘இதை நீ அடுத்த ஷொட்டில் அணியப்போகிறாய். இது உனக்கு அற்புதமாக இருக்கும்” என்று புகழ்ந்து ஆர்வத்தோடு தொடர்ந்து நடிக்க வைத்திருக்கிறார்.

‘ரசியாவாக நடித்த நான், படப்பிடிப்பு முடிந்து வெகு நேரம் ஆன பின்பே இயல்புக்கு வருவேன். பெரும்பாலும் அப்போது ரசியாவாகவே வாழ்ந்தேன். நான் குதிரையில் வேகமாக செல்லும் போது என் கிரீடம் வெயில் பட்டு தகதக்கும். வெற்றியில் படர்ந்த வியர்வை கன்னங்களில் வழியும். அதில் ஒவ்வொரு காட்சியும் மிக யதார்த்தமாக இருந்தது.

நான் எப்போதுமே சிம்பிளாகத்தான் உடை அணிவேன். பெரும்பாலும் நகைகள் அணியமாட்டேன். எனக்கு கம்பீரமான உடை, ஆபரணம் என்று டைரக்டர் அள்ளிப்போட்டு அலங்காரம் செய்தார். கலர்கலராக உடைகளில் தோன்றினேன்.

என்னோடு நடித்த பர்வின்பாபி வழக்கமாக ஆடம்பர ஆடை, அணிகலன் அணியக்கூடியவர். அவரே என்னைப் பார்த்து தன்னைவிட ஆடம்பரமாக அழகாக நான் இருப்பதாக குறிப்பிட்டார். அந்த உடைகளை நான் அணிவதற்கு ரொம்ப நேரமாகும். வியர்த்துப்போகும்” என்கிறார்.

உண்மையில் ரசியா சுல்தானா படத்தில் பலரது உழைப்பு இருந்தாலும் அந்த படம் முழுக்க முழுக்க ஹேமாவை நம்பியே எடுக்கப்பட்டிருக்கிறது. ‘ஹேமா இது உன்னுடைய படம். உன்னுடைய தோற்றம் மட்டுமல்ல, மொழி உச்சரிப்பும் அதற்கு ஏற்றபடி இருக்க வேண்டும்’ என்று கமால், ஹேமாவிற்கு உருது மொழி உச்சரிப்பை கற்றுக்கொடுத்திருக்கிறார்.

அப்போது ஹேமாவிடம், ‘நீங்கள் ரசியாவாக வாழ ஆசையா? ஹேமமாலினியாக வாழ ஆசையா?” என்று கேட்டிருக்கிறார்கள்.

“நான் ஹேமமாலினியாக இருந்து கொண்டே ரசியாவாக நடிக்க விரும்புகிறேன். அதுதான் எனக்கு மகிழ்ச்சி.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி