ஹிஜ்ரி வருடம் 1434 ஷவ்வால் மாதம் பிறை 15
விஜய வருடம் ஆவணி மாதம் 07ம் திகதி வெள்ளிக்கிழமை
FRIDAY, AUGUST , 23 , 2013
வரு. 81 இல. 200
 

இராணுவ நீதிமன்றத்தின் அறிக்கை இராணுவ தளபதியிடம் கையளிப்பு

வெலிவேரிய, ரத்துபஸ்வல சம்பவம்:

இராணுவ நீதிமன்றத்தின் அறிக்கை இராணுவ தளபதியிடம் கையளிப்பு

வெலிவேரிய, ரத்துபஸ்வல பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் நியமிக்கப்பட்ட இராணுவ நீதிமன்றத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் தயா ரத்னாயக்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இராணுவ விசாரணை நீதிமன்றத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் தலைமையிலான குழுவினரால் இந்த விசாரணை அறிக்கை கொழும்பிலுள்ள இராணுவத் தலைமையகத்தில் வைத்து நேற்று முன்தினம் மாலை உத்தியோகபூர்வமாக இராணுவத் தளபதியிடம் கையளிக்கப்பட்டதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.

இராணுவ நீதிமன்றத்தின் விசாரணை அறிக்கையை முழுமையாக ஆராய்ந்த பின்னர் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் தயா ரத்நாயக்க இந்த விடயம் தொடர்பில் தீர்மானத்தை மேற்கொள்வார் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

வெலிவேரிய, ரத்துபஸ்வல மக்கள் தங்களது குடிநீரில் தொழிற்சாலை ஒன்றிலிருந்து வெளியாகும் இரசாயனம் கலந்துள்ளதாக கூறி கடந்த முதலாம் திகதி பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களுக்கும் படையினருக்கும் இடையில் மோதல் நிலை உருவானது.

இந்த சம்பவத்தின் போது படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் மூவர் உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவத்தை அடுத்து இது தொடர்பில் விரிவாக ஆராய்ந்து விசாரணை அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கும் பொருட்டு இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் தயா ரத்னாயக்கவினால் கடந்த 2 ஆம் திகதி மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் தலைமையில் இராணுவ விசாரணை நீதிமன்றம் நியமிக்கப்பட்டது.

ஐவர் அடங்கிய இந்தக் குழுவில் பிரிகேடியர் கே. கே. ஜயவீர, பிரிகேடியர் என். ஐ. டி. சில்வா, கேர்ணல் ரி. டி. வீரகோன் மற்றும் லெப்டினன்ட் கேர்ணல் டபிள்யு. பி. ஏ. டி. டபிள்யு. நாணயக்கார (செயலாளர்) ஆகியோர் நியமிக்கப்பட்டி ருந்தனர்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி